உண்மையில் வெற்றி யாருக்கு ?

உண்மையில் வெற்றி யாருக்கு ?

ஒரு வழியாக  வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் 73% ஆகவும் அதிக பட்சம் 86 %
ஆகவும்  சராசரியாக 75 முதல் 80 % வரை வாக்குகள்
பதிவாகி இருக்கலாம் என்று தேர்தல் அதிகாரி கூறுகிறார்.

வழக்கம் போல் –
எல்லாரையும் முந்திக்கொண்டு வீரமணி கூறி விட்டார்
அடுத்த ஆட்சி கலைஞருடையது தான் என்று.
(ராஜாவுக்கு மிஞ்சிய ராஜ விசுவாசி ?)
கலைஞர், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி
ஆகிய திமுக தலைவர்கள் (!)  அனைவரும் ஒருமனதாக
வழிமொழிந்து விட்டனர்.

அந்த பக்கம் அம்மாவும்  கூறி விட்டார் – அடுத்த ஆட்சி
அவருடையது தான்  என்று.
த.பாண்டியனும், சரத்குமாரும் இது வரை வழிமொழிந்து
இருக்கிறார்கள்.

நம்முடைய ஆசையை கடந்த இடுகையில் வெளியிட்டு
இருந்தோம். அதைத் தொடர்ந்து  மறுமொழிகள் மூலமாக
ஒரு சுவையான  விவாதம் உருவாகியது. இரண்டு பக்கமும்
தீவிரமான காரணங்களைப் பார்த்தோம். நமது ஆசை,
எதிர்பார்ப்புகள்  எதுவாக இருந்தாலும் அதன் விதி இன்று
தமிழ்நாட்டு மக்களால் தீர்மானிக்கப்பட்டு விட்டது !

நம் தலைவிதியைத் தெரிந்து கொள்ள –
இனி ஆவலோடு ஒரு மாதம் காத்திருப்பதைத் தவிர
வேறு வழி இல்லை.  நம்மைப் பொருத்த வரை இது ஒரு ஆவல்
மட்டுமே.

ஆனால் – அரசியல்வாதிகளுக்கு இது ஒரு வேதனை –
பிரசவ வேதனை !
ஒரு மாதப் பிரசவம் !!
ஒரு பக்கம் பார்த்தால் மேற்கு வங்க தேர்தல் முடிவதற்காக
நம்மைக் காத்திருக்கச்சொல்வது அபத்தமாக
இருந்தாலும் –
இன்னொரு பக்கம் யோசித்தால் – இது போல் ஒரு தண்டனை
நம்மைப் பாடாய்ப் படுத்தும் இந்த அரசியல்வாதிகளுக்குத் தேவை
தான் என்றும் தோன்றுகிறது !

யார் என்ன சொன்னாலும் சரி – இந்த தேர்தலின் மூலம் ஒரு
புது ஹீரோ உருவாகி இருக்கிறார் –  பிரவீண்குமார் என்கிற
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி !
அலட்டிக்கொள்ளாமல்,  டென்ஷனே இல்லாமல், இவ்வளவு
சிக்கலான ஒரு தேர்தலை அருமையாகக் கையாண்டு
வெற்றிகரமாக  நடத்தி முடித்து விட்டார் !

இரண்டு மாதங்களுக்கு முன்னர் யார் சொல்லி இருந்தாலும்
நம்பி இருக்க மாட்டோம் – இப்படிக் கூட ஒரு தேர்தலை
நடத்த முடியும் என்று ! இனி எல்லாம் திருமங்கலம்
பார்முலா தான் என்று மொத்த தமிழ் நாடும் நினைத்திருந்த
வேளையில் –  அஞ்சா நெஞ்சருக்கெல்லாம் தண்ணி காட்டி
விட்டாரே !

யாருக்கும் பயப்படாமல்,  எந்தவித அழுத்தத்துக்கும்
உட்படாமல், பணமோ – பதவியோ  எதைப்பற்றியும்
கவலைப்படாமல் – எந்தவித பாரபட்சமும் இன்றி –
நேர்மையான முறையில்  ஒரு  தேர்தலை  நடத்தி
முடித்திருக்கும்  பிரவீண்குமாரை – எதிர்காலத்தில்
அரசு அதிகாரிகள்  அனைவரும் ஒரு முன் உதாரணமாக
எடுத்துக்கொண்டு செயல்பட்டால் – இந்த நாட்டை
அரசியல்வாதிகள்  எவ்வளவு முயன்றாலும்
கெடுக்க முடியாது !

இது தான் இந்த தேர்தலில் கிடைத்துள்ள  செய்தி !
இது  நேர்மையான, துணிச்சலான அரசு
அதிகாரிகளுக்கு கிடைத்த வெற்றி !
யார் யாரோ  பட்டம் போட்டுக்கொள்கிறார்கள் –
ஆனால் – உண்மையான அஞ்சா  நெஞ்சன் –  இவர் தான் !
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் அவர்களுக்கு
நான் தெரிவிக்கும் பாராட்டுக்களிலும்,
வாழ்த்துக்களிலும்  நீங்கள் அனைவரும் கூட
சேர்ந்து கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

வாழ்த்துக்கள்  பிரவீண்குமார்.
(இவர் மூலம் பீகார் தமிழகத்திற்கு  வந்து கொண்டிருக்கிறது
என்று நம்புவோம் !)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அழகிரி, இணைய தளம், இந்தியன், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, காமெடி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, வீரமணி, ஸ்டாலின், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

5 Responses to உண்மையில் வெற்றி யாருக்கு ?

 1. Ganpat சொல்கிறார்:

  காவிரி மைந்தனுக்கு ,

  கர புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள்
  வாக்குச்சாவடி அமைத்து,

  ஒரு நாள் சம்பளத்துடன் விடுமுறையும் கொடுத்து,

  காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை
  கடையை திறந்து வைத்து,

  ஒருவர்க்கும் ஒட்டு போட விருப்பம் இல்லாதவர்களுக்கு
  49-O வசதி அளித்து,

  போய் ஒட்டு போடுங்கள் என்றால் கூட ஒரு 20% முடியாது என்கிறார்கள்.

  மாறாக,

  நடக்கமுடியாமல் நடந்து வந்து,

  தங்களை 1947 முதல இன்று வரை ஏழைகளாகவே
  வைத்திருக்கும் தலைவர்களுக்கே,

  எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல்,

  தட்டி த்தடவி,

  ஓட்டளிக்கும், 80 வயதை கடந்த,
  மூதாட்டிகளும்

  நிறையவே உள்ளனர்

  விசித்திரமான நாடு இது.

  அடுத்த ஏப்ரல 13
  சித்திரைத் திருநாளா,
  அல்லது
  நந்தன வருட பிறப்பா என்பது
  வரும் மே 13 அன்று
  தெரிந்துவிடும்!

  கவியரசர் அனுமதியுடன்……..
  வந்ததை நினைத்து அழுகின்றேன்
  வருவதை எண்ணி நடுங்குகிறேன் –

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பர்களே,

   அனைவருக்கும் சித்திரைத் திருநாள் (!)
   வாழ்த்துக்கள் – ( ரிசல்ட் எப்படி இருந்தாலும்
   மே 13 வரை கலைஞர் ஆணை தான் அமுலில்
   இருக்கும் அல்லவா ?)

   மிக நன்றாகச் சொன்னீர்கள் கண்பத்.

   ஆமாம் இவ்வளவு நன்றாக எழுதுகிறீர்கள் – நீங்களும் இந்த புத்தாண்டில் ஒரு வலைத்தளத்தை துவங்கலாமே !
   உங்கள் எழுத்தின் முழு வீச்சையும் நாங்கள்
   ரசிக்க முடியும் அல்லவா ?

   -வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

 2. RAJASEKHAR.P சொல்கிறார்:

  என்-
  தமிழினிய நெஞ்சங்களுக்கு……
  கர புத்தாண்டு வாழ்த்துக்கள் !
  வாழ நினைத்தால் வாழலாம் ..
  வழியா இல்லை பூமியில்….?
  விதியை ;
  நினைத்து அழுபவன் மூடன்..!
  மதியை கொண்டு
  வாழ்பவன் தான் மானுடன் !!
  விதி முடிந்து-
  கல்லறையருகே
  சென்று திரும்பியவர்களையும்….
  பார்த்திருக்கிறேன்.!
  ஆம் –
  தர்மத்தின் வாழ்வுதன்னை
  சூது கவ்வும்
  மீண்டும் தர்மம் வெல்லும்!

  thanks & blessings all of you
  happy new year & happy life
  rajasekhar.p

 3. stalin சொல்கிறார்:

  ஊழல் ஒழியட்டும் ..
  அமைதி நிலவட்டும் …
  உண்மை உயரட்டும் …..
  வெற்றி நமதே ……..
  நன்றி …….

 4. Ganpat சொல்கிறார்:

  உங்கள் அன்பிற்கு நன்றி கா.மை.
  எனக்கு ஒரு நல்ல பூச்செடி வளர்க்க ஆசை.
  ஒரு செடியை நானே வளர்க்கலாம்.
  அல்லது என் நல்ல எண்ணம கொண்ட நண்பர்கள்
  ஏற்கனவே வளர்த்துவரும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி
  அவர்களுக்கு அவற்றை வளர்க்க உதவலாம்.
  இப்போதைக்கு என் தேர்வு இரண்டாவது உள்ளதுதான்.
  காலம் கனியும்போது நானும் ஒரு செடி நடுகிறேன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.