அதிக சந்தோஷம் வேண்டாம் ! அவ்வளவு சுலபமாக வராது !! வரவும் விட மாட்டார்கள் !!!

அதிக சந்தோஷம் வேண்டாம் !
அவ்வளவு சுலபமாக  வராது !!
வரவும் விட மாட்டார்கள் !!!

இன்றைக்கு அன்னா ஹஜாரே கையில் மத்திய அரசு
வெளியீடு(GO – gazette notification)
கொடுக்கப்பட்டது. அன்னா உண்ணாவிரதத்தை
முடித்துக்கொண்டார். நாடு பூராவும் வெற்றி வெற்றி
என்று கொண்டாடுகிறது.

வேண்டாம் – தயவு செய்து யாரும் அதிக சந்தோஷம்
கொள்ள வேண்டாம்.

இது ஒரு நாடகம்.முதல் சீன் முடிந்துள்ளது.
அவ்வளவு தான்.அடுத்து வரபோகும் சீன் –
துக்கத்தையும்,
ஏமாற்றத்தையும்,
ஆத்திரத்தையும் உண்டு பண்ணுவதாக அமையவே
வாய்ப்பு  அதிகம். எனவே நாம் அதற்கும் தயாராக
இருக்க வேண்டும்.

முந்தாநாள் தொலைக்காட்சி பேட்டியில் பேசிய
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்
அபிஷெக் மனு சிங்க்வி, நேற்று ஒப்பந்தம் ஏற்படும்
முன்பாகப்  பேசிய கபில் சிபல், அன்னா உண்ணாவிரதம்
துவங்கியவுடன் பேசிய வீரப்ப மொய்லி –
எல்லாருடைய பேச்சும், பாடி லாங்குவேஜும் எப்படி
இருந்தது.  ஒரு முறை யோசித்துப் பாருங்கள்.

அன்னையின் ஆணை” கிடைத்தவுடன் அனைவரும்
அப்படியே மாறி விட்டார்கள். ஏன் ? எப்படி ?

unpreparedness ! எதிர்பாராமல் திடீரென்று
நாடு பூராவும் வெடித்த மக்களின் கோப உணர்ச்சி –
வரவிருக்கும் 5 மாநில தேர்தல்கள் -அவற்றின்
எதிரொலி தான் இந்த சமாதான சங்கொலி.

கமிட்டியில் யார் யார் இருக்கிறார்கள் பாருங்கள் –
மத்திய அரசின் சார்பில் 5 பெரிய திமிங்கிலங்கள் –
எதிரே வரும் அனைவரையும் விழுங்கி விடக்கூடிய
திமிங்கிலங்கள்.

2ஜி ஸ்பெக்ட்ரம் – ஜீரோ லாஸ் என்று கூறிய
கபில் சிபல்.

வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப்பணம் –
பெயர்கள் தெரிந்தால் கூட வெளியிட முடியாது
என்று சுப்ரீம் கோர்ட்டிலேயே கூறிய பிரனாப் முகர்ஜி.

மலைமுழுங்கி மகாதேவர் – ப.சிதம்பரம்.

“அன்னை”கூறினால் கடலில் கூட குதிக்கத் தயார்
என்கிற  வீரப்ப மொய்லி.

தன்னை பாபரின் மகன் (son of Babur )என்று
கூறிக்கொள்ளும்  சல்மான் குர்ஷித்.

இந்த 5 பேரும் இருக்கும் ஒரு  கமிட்டி –
அன்னா ஹஜாரே கொடுத்திருக்கும் ஜன் லோக் பால்
வரைவு மசோதாவை  ஏற்குமா ?

மத்திய அரசின் நோக்கம் நேர்மையானதாக இருந்தால் –
கபடி போட்டிக்கு தகடாவாக ஆளை அனுப்புவது போல்
இவ்வளவு பலமான வக்கீல்களை கமிட்டிக்கு
நியமிப்பானேன் ?

விஷயத்தை சமாளிக்க –போதுமான அளவு
நேரம் பெறவும்,
அன்னா ஹஜாரே கூறும் விஷயங்கள்
நடைமுறைப்படுத்தவே இயலாத பாமரத்தனமான,
உருப்படாத யோசனைகள்  என்று
நிரூபிக்கவும் தானே  இந்த
கமிட்டியே இப்படி அமைக்கப்பட்டு இருக்கிறது.

அன்னாவின் வரைவு மசோதாவின் சில முக்கிய
விஷயங்களைப் பார்க்கலாமா ?  –

1) பொது மக்கள் யார் வேண்டுமானாலும் புகார்
கொடுக்கலாம்.கொடுத்த புகாரை நிரூபிக்க
முடியவில்லை என்பதற்காக புகார் கொடுத்தவர்கள்
மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

2) சிபிஐ, விஜிலன்ஸ் கமிஷன் இரண்டும்
ஜன் லோக் பால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வரப்பட வேண்டும். வழக்கு தொடுக்கும் அதிகாரம்
லோக் பாலுக்கு வேண்டும்.

3)லோக் பாலுக்கு மத்திய அரசின் தலையீடு இன்றி,
சுதந்திரமான முறையில் உறுப்பினர்கள்
தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேர்தல் கமிஷனைப்
போல் சுதந்திரமாக செயல்பட உரிமையும்,
அதிகாரமும் தரப்பட வேண்டும்.

4) தற்போதுள்ள முறைப்படி – எவர் மீதும் வழக்கு
தொடுக்கும் முன்னர் மாநில அரசிடமோ(கவர்னர்),
மத்திய  அரசிடமோ (ஜனாதிபதி) அனுமதி வாங்கத்
தேவை இல்லை.

5) அதிக பட்சம் 2 வருடங்களுக்குள்  வழக்கு
முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டாக
வேண்டும்.

என் அறிவுக்கு எட்டிய அளவில் –
இதை கிடப்பில் போட அவர்கள் கூறக்கூடிய
காரணங்கள் நிறையவே கிடைக்கின்றன.

சிபிஐ, விஜிலன்ஸ் கமிஷன் போன்றவற்றை
லோக்பாலுடன் இணைக்க அரசியல் சட்டம் இடம்
கொடுக்காது.

நீதிமன்றங்களின் செயல்பாட்டில் தலையிட முடியாது.
குறிப்பிட்ட 2 வருட காலங்களுக்குள் வழக்கை
முடிக்கச் சொல்லி உத்திரவிட அரசியல் சாசனத்தில்
யாருக்கும் அதிகாரம் கிடையாது.

நிரூபிக்க முடியாதவர்கள் மீது நடவடிக்கை இல்லை
என்றால், பொய்க் குற்றச்சாட்டுகள் பெருகவே
அது இடம் கொடுக்கும்.

– எனக்கே இவ்வளவு தோன்றினால் அந்த
திமிங்கிலங்களுக்கு இன்னும் என்ன என்ன தோன்றுமோ !

ஆனால் – இந்த பக்கம் இருப்பவர்களும்
சாமான்யப்பட்டவர்கள் அல்ல ! விட்டுக் கொடுக்கக்
கூடியவர்களும் அல்ல.

எனவே விளைவு என்னவாக இருக்கும் ?

ஒருமித்த கருத்து (consensus ) உருவாகவில்லை
என்று சொல்லி இந்த வரைவு மசோதாவை
தூக்கிப் போட்டு விட்டு –
பேருக்கு ஒரு சொத்தை மசோதாவை
பாராளுமன்றத்தில் கொண்டு
வருவதற்கு முயற்சிகள் நடக்கும்.

நாடு பூராவும் பெரும் கொந்தளிப்பை,
இவ்வளவு பெரிய எழுச்சியை உண்டு
பண்ணியவர்களுக்கு
இது தெரியாதா என்ன ?

தெரியும் – நிச்சயமாகத் தெரியும்.
இருந்தாலும் ஒவ்வொரு படியாகத் தானே
தாண்ட வேண்டும் ?

உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டு –
இன்றைக்கு அன்னா ஹஜாரே பேசும்போதே
அதற்கான அறிகுறி தெரியவே செய்தது.

அடுத்த கட்ட போராட்டம்
ஆகஸ்டு 15ந்தேதி கூட துவங்கலாம்.
மக்களும் அடுத்த கட்டத்தை சந்திக்க தயாரான
மனப் பக்குவத்தைப் பெற வேண்டும்.

இப்போதே வெற்றி கிடைத்து விட்டதாக
எண்ணக்கூடாது ! அவ்வளவு சீக்கிரம் நம்மை
ஜெயிக்க விட்டுவிட மாட்டார்கள்

சம்பந்தப்பட்டவர்கள் !!

பின்குறிப்பு –

லோக்பால் விஷயமாக பின்னோக்கி சில
விஷயங்களைத்  தேடிக்கொண்டே போனபோது
கிடைத்த ஒரு ஆச்சரியமான தகவல் !
சுதந்திர இந்தியாவில்,முதன்முதலில் இந்த
லோக்பால் விஷயத்தைப் பற்றி யோசனை
தெரிவித்தது
-வித்தியாசமான அரசியல்வாதி
முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயாம் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழ், தேர்தல், நீதிபதிகள், நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to அதிக சந்தோஷம் வேண்டாம் ! அவ்வளவு சுலபமாக வராது !! வரவும் விட மாட்டார்கள் !!!

 1. RAJASEKHAR.P சொல்கிறார்:

  வாழ்க தேசாய் புகழ் !
  வளர்க தேச மக்கள் !!

  thanks
  Rajasekhar.p

 2. natramizhan சொல்கிறார்:

  தேர்தல் கமிசன் —-இன்னும் இந்த ஊர் நம்பளை நம்புதேடா..

  கண்மணிகள்—–அது அவங்க தலையெழுத்து பாஸ்…

 3. masanam18780 சொல்கிறார்:

  வாழ்கஅன்னா, வளர்க தேச மக்கள் !!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.