“இங்கு என்ன தான் நடக்கிறது ?” (what the hell is going on here ?) -சுப்ரீம் கோர்ட். பிரனாப் முகர்ஜியை “உள்ளே” வைத்து விசாரித்தாலொழிய விஷயம் “வெளியே” வராது !

“இங்கு என்ன தான் நடக்கிறது ?”
(what the hell is going on here ?)
-சுப்ரீம் கோர்ட்.
பிரனாப் முகர்ஜியை “உள்ளே” வைத்து
விசாரித்தாலொழிய விஷயம் “வெளியே” வராது !

ஹாசன் அலி வழக்கை விசாரிக்க எடுத்துக்கொண்ட
போது, உச்சநீதி மன்ற நீதிபதிகள் கேட்டது –
“what the hell is going on here ?”

அந்த அளவிற்கு நீதிபதிகள் வெறுத்துப் போகக்
காரணம் தான் என்ன ?

2007 ஆம் ஆண்டு துவக்கத்தில், வருமானவரி
இலாகா ஏதோ ஒரு தகவலின் அடிப்படையில்,

(மிகப்பெரிய திமிங்கிலம் ஒன்று மாட்டப்போகிறது
என்பது தெரியாமலேயே,)

மஹாராஷ்டிரா மாநிலம்,
புனே நகரத்தில் உள்ள ஹாசன் அலியின் வீட்டில்
சோதனை இட்டது. அந்த நேரத்தில் அவர்களுக்குத்
தெரிந்திருந்த விவரம் அவன் ஒரு பந்தயக்
குதிரைகளின் சொந்தக்காரன் என்பது மட்டுமே.

சோதனையின் போது –
அவன் பெரிய வருமான வரி மோசடியில்
ஈடுபட்டிருக்கக்கூடும் என்பதற்கான
அறிகுறிகள் கிடைத்தன !

அவன் யார், அவனது அரசியல் பின்புலம் என்ன
என்பது பற்றி எல்லாம் தெரியாத நிலையில்,
வருமான வரி இலாகா (தெரியாத்தனமாக)
அந்த ரெய்டு பற்றிய விவரங்களை வெளியில்
அறிவித்து விட்டது. அப்போது பிடித்த
சனியன் தான் – இன்னும் விடவில்லை
(வருமான வரி இலாகாவைத் தான் !)

யார் இந்த ஹாசன் அலி ?
என்ன அவன் பின்னணி ?

இந்தியாவிலேயே – அதிக வருமான வரி பாக்கி
வைத்திருக்கும் ( ரூபாய் 50,000 கோடிகள் மட்டுமே)
இந்த பெரிய மனிதன் – ஹைதராபாதைச் சேர்ந்த
ஒரு பதான்.

58 வயதாகும் இந்தப் புண்ணியவானை பெற்று –
இந்த நாட்டிற்கு பரிசளித்த தந்தை –
ஹைதராபாத் நகரத்தில்
எக்ஸைஸ் இலாகாவில் பணி புரிந்த
ஒரு சாதாரண அரசு ஊழியர் ஊழியர் தான்.

பரிதாபத்திற்குரிய முதல் மனைவி -மெஹ்பூபா.
அவர்களுக்குப் பிறந்தவர்கள் 2 குழந்தைகள்.
2000 ஆவது ஆண்டில் விவாக ரத்து செய்யப்பட்ட
இந்த மனைவிக்கும், குழந்தைகளுக்கும்
இவனுடன் இன்றைய தினத்தில் எந்த வித
தொடர்பும் இல்லை.

பின்னர் மணம் செய்துகொண்ட பெண்மணி –
2வது மனைவி -ரீமா.
இவர்களுக்குப் பிறந்தது ஒரு குழந்தை.
இவர்களுடன் தான் இப்போது புனேயில்
வசிக்கிறான்.இந்த மனைவியின் சகோதரன்
சவூதியில் ஒரு பந்தயக் குதிரை பயிற்சியாளனாக
இருந்தவன். அவன் மூலம் பிடித்துக்கொண்ட
பழக்கம் ஹாசன் அலியை பந்தய குதிரைகளை
வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபடச் செய்தது.

அவனது சுவிஸ் வங்கி கணக்கில் இருப்பதாகச்
சொல்லப்படும் தொகை உண்மை என்றால் –
ஆசியாவிலேயே பெரிய பணக்காரன் என்கிற
பெருமைக்கு சொந்தம்  ஆவான் இந்த ஹாசன் அலி.

மூன்று மெர்சிடைஸ் பென்ஸ் கார் வைத்திருக்கும்
இந்த நபரின் வீட்டின் பெயரில் ஒரு வங்கியில்
கடனும் இருக்கிறது என்பது தான் வேடிக்கை.
என்னிடம் பணம் இருந்தால் நான் ஏன் வீட்டை
அடமானம் வைத்து கடன் வாங்குகிறேன்
என்பது  விசாரணை அதிகாரிகளிடம்
இவன்  கேட்ட கேள்வி !

இவனை கைது செய்யப் போனபோது – இவன்
அணிந்திருந்த மூக்குக் கண்ணாடியை கழற்றி
வீட்டிலேயே  வைத்து விட்டு வந்தானாம்.
காரணம் அந்த மூக்குக்கண்ணாடியின் மதிப்பு
2 லட்சம் ரூபாய்.

இவனுடன் 24 மணி நேரமும்,
வாட்டசாட்டமான இரண்டு தடியன்கள்
(தனியார் பாடிகார்டுகள்) இருக்கிறார்கள்.

இவனுக்கு இருப்பதாகச் சொல்லப்பட்ட
வியாதிகள் ரத்தக் கொதிப்பும், சர்க்கரையும்.
(கைது செய்யப்பட்ட பின்னர் வந்தது
ஹார்ட் அட்டாக் !) சர்க்கரை நோய் காரணமாக,
தினமும் காலையிலும், இரவிலும் இவனுக்கு
40 யுனிட் இன்சுலின் தேவைப்படுகிறது.

இருந்தாலும் -இவன் ஒரு தொடர் புகையாளி
(செயின் ஸ்மோக்கர் ).
புகைப்பது 555 ஸ்டேட் எக்ஸ்பிரஸ் சிகரெட்.
நாள் தவறாமல் குடிப்பது பிளாக் லேபல் விஸ்கி.

இன்றைய தினம் தொலைக்காட்சியில்
பார்க்கும்போது – அப்பாவியாக,
பரிதாபத்திற்குரிய நிலையில் காட்சி தரும்
இவன் குற்ற பின்னணி ஆரம்பித்தது
இவனது 28வது வயதிலேயே.
இளைய வயதில் அமைதியான, ஆனால்
கில்லாடி கிரிமினலாக இருந்திருக்கிறான்.

ஆரம்ப காலத்தில் இவன் தன்னை ஹைதராபாத்
நிஜாமின் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று
சொல்லிக்கொண்டு  பழங்காலத்து கலைப்
பொருட்களை விற்பனை/ ஏற்றுமதி செய்வதில்
ஈடுபட்டவன்.

ஹைதராபாதில் இவன் மீது ஏமாற்றுதல்,
பயமுறுத்தி பணம் பறித்தல் போன்ற
10 வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில்
உள்ளனவாம்.ஆனால் அந்த வழக்குகளை
தொடர்வதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை !
(எல்லாம் பணம் படுத்தும் பாடு ?)

(வேடிக்க என்னவென்றால் 10 நாட்களுக்கு
முன்னர் இவனை கைது செய்து மும்பையில்
ஒரு மாஜிஸ்டிரேட் முன்பு ஆஜர் செய்த
அமுலாக்கப் பிரிவினர் –
எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டாத
காரணத்தால், அந்த மாஜிச்டிரேட் இவனை விடுதலை
செய்யச்சொல்லி உத்திரவு போட்டிருக்கிறார் !
(அதனைத் தானே அரசும் விரும்பியது  !)

முதன் முதலில், சிங்கப்பூரில் UBS AG bankல்
(சுவிஸ் வங்கியின் சிங்கப்பூர் கிளை )
ஒரு வெளிநாட்டு வங்கியில் இவனை அறிமுகம்
செய்வித்து, இவனுக்காக கணக்கைத்  துவக்கி
வைத்து இவனது தொழிலை  விரிவாக்கம்
செய்ய உதவியவன் அத்னன் கஷொக்கி.

ஆம் – சவூதியைச் சேர்ந்த (சட்ட விரோத)
ஆயுத விற்பனையாளர் அத்னன் கஷொக்கி தான்
இவனை உருவாக்கிய கடவுள் (காட் பாதர் !).

35 வயதில் துவங்கிய அந்த உறவு நேற்று வரை
தொடர்ந்திருக்கிறது !
கூடுதல் தொழிலாக இவன் செய்தது ஹவாலா !
(சட்ட விரோதமாக, அரசுக்குத் தெரியாமல்,
வெளிநாடுகளில் இருப்பவர்களுடன் பண
பரிவர்த்தனை.) இவன் கணக்கில் இருக்கும்
பணம் அத்தனையும் இவனுக்குச் சொந்தமானதல்ல
என்பது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தெரியும் !

மத்தியிலும், மஹாராஷ்டிராவிலும் –
ஆளுகின்ற கட்சியைச் சேர்ந்த,
செல்வாக்கான அரசியல்வாதிகளுக்கும்,
பெரும் வர்த்தகப் புள்ளிகளுக்கும் இதில் பெரும்
பங்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கடந்த காலங்களில்  -ஒரே சமயத்தில்
8 வெளி நாட்டு வங்கிகளில்
இவனுக்கு கணக்கும், பெரும் அளவில் பணமும்
இருந்திருக்கிறது. இவன் 3 வெவ்வெறு
பாஸ்போர்ட்டுகளும் வைத்திருக்கிறான
என்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஹாசன் அலியின் வீட்டில் 2007 ஆம் ஆண்டு
முதன் முறையாக சோதனையிட்டபோது
ஸ்விட்சர்லாந்து நாட்டின் யுபிஎஸ்
(UBS AG bank, Zurich) கணக்கில்
இவன் 8 பில்லியன் அமெரிக்க டாலர்
வைத்திருந்தது தெரிய வந்திருக்கிறது.

இதன் பிறகு பலவேறு வெளிநாட்டு வங்கிகளில்,
கணக்கில்  காட்டப்படாத கோடிக்கணக்கான
பணம் வைத்திருந்த வகையில் ரூபாய்
40,000 கோடி அளவிற்கு
வருமான வரி பாக்கியாக கட்ட வேண்டும் என்று
இவனுக்கு வருமான வரித்துறையால்
நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

மூன்று பொய் பாஸ்போர்ட்கள்  வைத்திருந்ததாக
இவன் மீது இருந்த வழக்கில், ஜாமீனில்
வெளிவர இவன் மும்பை உயர்நீதி மன்றத்தில் மனு
கொடுத்தபோது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல்
செய்வதில் அலட்சியமாக இருந்ததால்,
இவனுக்கு ஜாமீன் கொடுத்தது நீதிமன்றம்.

அவன் மனு கொடுத்து 6 மாதங்கள்
ஆகியும் அரசு தரப்பில் பதில் அளிக்க
எந்தவித அக்கரையும் காட்டப்படாததால்,
அவனைச் சிறையில் வைக்க
அரசாங்கத்துக்கே அக்கரை இல்லையென்றால்,
இந்த நீதிமன்றம் ஏன் தன் நேரத்தை வீண்டிக்க
வேண்டும் என்று நீதிபதி கேள்வி வேறு எழுப்பியது
அரசாங்கம் இவன் மீது நடவடிக்கை எடுப்பதில்
எந்த அளவு அக்கரை காட்டுகிறது என்பதற்கு
ஒரு அத்தாட்சி.

ஆகஸ்ட் 4, 2009 அன்று ராஜ்ய சபாவில்
அளிக்கப்பட்ட ஒரு தகவலின்படி வரி பாக்கி
வைத்திருப்பவர்கலின் பட்டியலில் ஹாசன் அலி
முதலாவதாக, சுமார் ரூபாய் 50,000 கோடி
பாக்கி இருப்பதாகக் காட்டப்படுகிறான்.

வருமான வரி இலாகா கணக்கீடு முறைகளின்படி,
இன்னமும் வசூலிக்கப்படாத இந்த வரி பாக்கி,
அபராதத் தொகைகள் சேர்த்து இப்போது
70,000 கோடியை தாண்டி இருக்க வேண்டும்.

ஹாசன் அலியுடன் சேர்த்து காட்டப்பட்டுள்ள
அவனது இணையாளர்களையும் (காசிநாத்
தபூரியா  போன்றோர் )
சேர்த்தால் அரசுக்கு வரவேண்டிய தற்போதைய
மொத்த வரி பாக்கி தொகை
ஒரு லட்சம் கோடியைத் தாண்டி இருக்கும்.

ஆனால்,2010-11 பட்ஜெட்டுக்கான,
ஆதார ஆவணங்களில்(supporting documents),
தனி நபர் வருமான வரி பாக்கியாக
ரூபாய் 50,000 கோடி தான் காட்டப்படுகிறது.

ஹாசன் அலி வரி பாக்கியை இன்னும் கட்டாத
நிலையில், இந்த தொகை குறைந்தது எப்படி ?
பட்ஜெட் ஆவணங்களில் வேண்டுமென்றே
தொகையும், தலைப்பும் மாற்றிக் காட்டப்படுகிறதா
என்று பட்ஜெட் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும்
பொருளாதார வல்லுனர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அவர்கள் கேட்கும் இன்னொரு கேள்வி –
தற்போது உள்ள வருமான வரி சட்டத்தின்
விதிகளின்படி, எந்த நபரின் மீது வருமான வரி
இலாகா ரெய்டு நடத்தி இருக்கிறதோ, அந்த நபர்
செட்டில்மெண்ட் கமிஷனுக்கு மனு கொடுத்து
தன் கணக்குகளை சரி செய்து கொள்ள முடியாது.

ஆனால் –

இந்த வருட பட்ஜெட்டில் பிரனாப் முகர்ஜி
கொண்டு வந்திருக்கும் ஒரு சட்ட திருத்தம்
இந்த நிபந்தனையைத் தளர்த்துவதாக இருக்கிற்து.
இந்த திருத்தம் முக்கியமாக, ஹாசன் அலிக்கு
உதவி செய்யும்பொருட்டு, அவனுக்காகவே
கொண்டு வரப்பட்ட திருத்தமாகத் தோன்றுகிறது
என்கிறார்கள் வல்லுனர்கள் .

ஹாசன் அலி வழக்கை சப்தம் கிளம்பாமல்
எளிதாக முடிப்பதற்காகவே இந்த சட்ட திருத்தம்
கொண்டு வரப்பட்டிருப்பது போல தோன்றுகிறது
என்கிறார்கள் நிபுணர்கள்.

2007 ஜனவரியில் ஆரம்பித்த இவன் வழக்கு
நான்கு வருடங்களைக் கடந்த நிலையிலும்,
எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறது.
இவனது வரி பாக்கியும் வசூல் செய்யப்படவில்லை.
இவன் மீது கிரிமினல் வழக்கு எதுவும்
முறையாகத் தொடரவும் இல்லை.
இவன் பதுக்கி வைத்திருந்த பணத்தை வெளியே
கொண்டு வர எந்தவித உண்மையான முயற்சியும்
செய்யப்படவும்  இல்லை.

2011 ஜனவரி மாதத்தில் வெளிவந்துள்ள செய்தி –
ஸ்விஸ் வங்கிகள் ஹாசன் அலி தொடர்புடைய
விவரங்களை பகிர்ந்து கொள்ள மறுக்கின்றன.
காரணம் –
நிதி அமைச்சகம் ஸ்விஸ் நாட்டுக்கு இவனைப்
பற்றிய விவரங்களை அளிக்கும்போது, போர்ஜரி
செய்யப்பட்ட ஆவணங்களையும் சேர்த்து
இணைத்திருந்ததே.(விஷயத்தை கால தாமதம்
செய்ய வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி ?)

இந்த 4 வருட காலங்களுக்குள், இவனது (மற்றும்
இவனது கூட்டாளியான காசிநாத் தபூரியாவின்) –
சுவிஸ் வங்கிகளில் இருந்த பணம் அத்தனையும்
வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு
சென்ற சுவடே தெரியாமல் போய் விட்டது.
இன்றைய தினம் ஸ்விஸ் வங்கியே
ஒத்துழைத்தாலும், பறிமுதல் செய்ய
அவன் கணக்கில் பணம் ஏதும் இல்லை.

இத்தனை நடந்தும், நிதிஅமைச்சர் எந்தவித
கவலையும் படாமல் –(எருமை மாட்டின் மீது
எண்ணை மழை பெய்தது போல் -உதாரணம்
சரியாக இருக்குமா ?) – பதட்டப்படாமல்
பாராளுமன்றத்தில் பதில் கூறிக்கொண்டிருக்கிறார் –
இது விஷயத்தில் அரசு நிச்சயம் உரிய
நடவடிக்கைகளை எடுக்கும் என்று !

கடந்த மூன்று-நான்கு  நாட்களாக மஹாராஷ்டிரா
சட்டமன்றத்தில் இந்த விஷயம் காரசாரமாக
விவாதிக்கப்பட்டு வருகிறது. ஹாசன் அலியை
கைது செய்வதில் முக்கிய பங்கு வகித்த டெபுடி
போலீஸ் கமிஷனர் ஒருவர் மூலமாக ஒரு செய்தி
பரவியதால் – அவர் தற்காலிக பணி நீக்கம்
(suspended)செய்யப்பட்டிருக்கிறார்.

அப்படி அவர் மூலம் பரவிய செய்தி என்ன என்று
கேட்கிறீர்களா ?
ஹாசன் அலியை கைது செய்து அவர் கஸ்டடியில்
வைத்திருந்தபோது அவன் – தன் வசம் உள்ள பணம்
எதுவும் தன்னுடையது அல்ல. ஆளும் கட்சியின்
செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதிகளின் பணம்.
அவர்கள் பணத்தைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களுக்கு
தெரியும். எனவே தான் இதைப்பற்றி அதிகம்
கவலைப்படுவதாக இல்லை என்று சொன்னானாம்.
இடையே அவன் இன்னொரு தகவலையும்
கூறி இருந்தானாம்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய செயல் வீரரான
அஹமது படேலும், கட்டிட காண்ட்ராக்டர் யூசுப்
லக்கடாவாலாவும் சமீபத்தில் தன்னை
சந்தித்தைப் பற்றியும், அவர்கள் தனக்கு எவ்வளவு
நெருக்கமானவர்கள் என்றும் விலாவாரியாக விளக்கி !

அஹமது படேலுக்கும்  அகில இந்திய காங்கிரஸ்
கட்சித் தலைமைக்கும் உள்ள அருகாமை டெல்லி
அரசியலில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு நன்றாகவே
தெரியும்.

எனவே ஹாசன் அலி மீது எடுக்கப்படும்
நடவடிக்கைகள் எந்த அளவில் இருக்கும் என்பதும்
இறுதியில் அவை எங்கு போய் முடியும் என்பதும்
புரியவே செய்கிறது.

இந்த விவகாரத்தில் –
ஆத்திரம் தாங்காமல் சில பொது நல விரும்பிகள்
தொடுத்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு
வந்தபோது நீதிபதிகள் கேட்டது தான்
இந்த இடுகையின் தலைப்பு –

“WHAT THE HELL IS GOING ON HERE ?”

இப்போது நீங்களே சொல்லுங்கள்  இந்த
வழக்கின் மர்மங்கள் அகன்று உண்மை வெளிவர
வேண்டுமானால் என்ன செய்ய வேண்டுமென்று –

நான் தலைப்பில் கொடுத்திருப்பது சரி தானே ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, கட்டுரை, சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், வருமான வரி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

3 Responses to “இங்கு என்ன தான் நடக்கிறது ?” (what the hell is going on here ?) -சுப்ரீம் கோர்ட். பிரனாப் முகர்ஜியை “உள்ளே” வைத்து விசாரித்தாலொழிய விஷயம் “வெளியே” வராது !

 1. ramanans சொல்கிறார்:

  வருங்கால பிரதமர்/ஜனாதிபதியாகத் தகுதி உள்ள, திறமை படைத்தவரை இப்படி ‘அவன், இவன்’ என்று ஏக வசனத்தில் குறிப்பிட்டிருப்பதற்கு என் கண்டனங்கள். வீரப்பனை ’வீரப்பர்’ என்று குறிப்பிடுவது போல நாட்டை ஆள்வதற்குச் சகல திறமைகளும் வாய்ந்த திருவாளர் ஹசன் அலி அவர்களை மரியாதையாக அழைத்தால் தான் இந்தியர்களுக்குப் பெருமை.

  மகாத்மா உங்களது ’ஆவி’ என்ன ஐயா செய்து கொண்டிருக்கிறது? படேல், லால்பகதூர் நீங்கள் எல்லாம் இதற்காகத்தான் பாடு பட்டீர்களா?

  கொதிக்கிறது, ஆனால் ஒன்றும் செய்ய இயலாமல் அமைதியுறுகிறேன்.

 2. ரிஷி சொல்கிறார்:

  அதானே…! பாரதப் பிரதமராக வருவதற்கு “முழு” தகுதி நிரம்பிய ஒருவனை….ஸாரி.. ஒருவரை இப்படியா ஏக வசனம் பேசுவது??

  ம்ஹும்..! கிண்டல் தவிர்த்து….
  சில கேள்விகள் எழுகின்றன.

  ஹசன் அலி என்ற தனிமனிதனைப் பற்றித்தான் இங்கே பேச்சு அடிபடுகிறது. 50,000 கோடி வரி மட்டுமே பாக்கி என்றால் அவனது வருமானம் எவ்வளவு இருந்திருக்க வேண்டும்!!

  அத்தனையும் தனிஆளாக அவன் சம்பாதித்திருக்க முடியாது. ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை செய்யும் மிகப்பெரும் கார்ப்பரேட் கம்பெனியால்தான் முடியும். இவனுக்கு ஒரு தொழில்/கம்பெனிதான் இருக்கிறதா? அல்லது பல இருக்கின்றனவா? தொழில்கள்/கம்பெனிகளின் பெயர்கள் என்னென்ன?

  இதைப்பற்றி ஏன் எதிர்க்கட்சிகள் அதிகம் வாய் திறப்பதில்லை. அவர்களுடைய பணமும் இவனிடம் இருக்கிறதா? இராணுவ பட்ஜெட்டைப் போடுமளவிற்கு இவனுக்கு வருமானம் வருகிறதென்றால்….!!
  ஒன்னுமே புரியல………!!!!!!!!!

 3. murthy சொல்கிறார்:

  how dare they invest in Swiss bank If ondya Swiss Bank Fails what they will do?
  I suggest to the Swiss Gov. amoount deposited is only Black money? THIRUDANUKKU THEL KOTTINARPOLA.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.