அரசியல் சட்டத்திற்கும், அடிப்படை கோட்பாடுகளுக்கும் எதிராக …..

அரசியல் சட்டத்திற்கும், அடிப்படை
கோட்பாடுகளுக்கும்  எதிராக  …..

நமது அரசியல் சட்டத்தில்
(Constitution of India – part 3)
பகுதி-3ல் குடிமக்களுக்கு என்று சில
அடிப்படை உரிமைகள்
(Fundamental Rights)
உறுதி அளிக்கப்பட்டுள்ளன.

பேச்சுரிமை, எழுத்துரிமை, போன்ற சில
அடிப்படை  உரிமைகள் – எந்த கட்சி ஆட்சிக்கு
வந்தாலும் இந்த அடிப்படை உரிமைகளில்
கை வைக்க முடியாது – இவை நமக்கு மறுக்கப்பட்டால்

நீதிமன்றங்களை அணுகலாம்.  மறுக்கப்பட்டதை
அவை  நமக்கு மீட்டுத் தரும்.
தொடர்ந்து கிடைக்க உறுதி செய்யும்.

எமெர்ஜென்சி காலத்தில் கூட இவை
தற்காலிகமாக  நிறுத்தி தான் வைக்கப்பட்டு

இருந்தன(temporarily suspended ).
இவை நம்மிடமிருந்து பறிக்கப் படவில்லை !

இதே போல் Directive Principles of
State Policy அதாவது அரசின் கொள்கைகள்
எவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்
என்று வழிகாட்டும் – முக்கியமான கோட்பாடுகள்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி-4-ல்
வலியுறுத்தப்பட்டுள்ளன.

அதாவது மத்திய, மாநில அரசுகள் பின்பற்ற
வேண்டிய சில முக்கிய கோட்பாடுகள் இந்த பகுதியில்
கூறப்படுகின்றன. இதில் பிரிவு 47 கூறுவதாவது –

———————————

47. ஊட்டச்சத்து, வாழ்க்கைத்தரம், உடல்நல
மேம்பாட்டை உயர்த்துவதற்கான அரசின் கடமை:

….அதிலும் குறிப்பாக போதையூட்டும் மதுபானங்கள்,

போதைமருந்துகள் ஆகியன
மருந்துக்காக பயன்படுத்துவதைத் தவிர
வேறுவிதமாக பயன்படுத்துவதை தவிர்க்கும்
வகையில் மதுவிலக்கை
அமல்படுத்த வேண்டும்.

————————————

அதாவது  நமது அரசியல் சட்டமே மதுவிலக்கை
அமல்படுத்துவது  மத்திய, மாநில அரசுகளின்
முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும் என்று
கூறுகிறது.

ஆனால் அரசியல் சட்டத்தில் பகுதி-3ல்
கூறப்பட்டுள்ள  அடிப்படை உரிமைகளுக்கு
இருக்கும் சட்ட பாதுகாப்பு,

பகுதி-4ல் கூறப்பட்டுள்ள
வழிகாட்டும் கோட்பாடுகளுக்கு
தரப்படவில்லை.

அதாவது இந்த வழிகாட்டும் கோட்பாடுகளை
ஏன் கடைப்பிடிக்கவில்லை என்று கேட்டு
நாம் நீதிமன்றங்களுக்கு சென்று
நிவாரணம் பெற  முடியாது.

– இத்தனை பெரிய இந்தியாவில்,
இன்றைய தினத்தில்,
குஜராத் மாநிலம் ஒன்றைத்தவிர வேறு எந்த
மாநிலத்திலும் மது விலக்கு அமலில் இல்லை.
இதில் எந்த அரசுக்கும் வெட்கமில்லை.

மற்ற மாநிலங்களை விடுங்கள்.
தமிழ் நாட்டில் ஏற்கெனவே அமுலில் இருந்த
மதுவிலக்கை
ஒழித்துக்கட்டிய பெருமை கலைஞர்
கருணாநிதியையே சாரும்.

துவக்கத்தில் எம்ஜிஆர் இதை எதிர்த்தார்
என்றாலும் பின்னர் அவரும்,
அவரைத் தொடர்ந்து
ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவும் கடைப்பிடித்த
கொள்கைகள் மக்களின் போதைப் பழக்கம்
மேன்மேலும் அதிகரிக்கவே வழி கோலியது.

புதிது புதிதாக சாராய உற்பத்தித்
தொழிற்சாலைகளுக்கு போட்டி போட்டுக்கொண்டு
அனுமதி அளித்தனர்.
அரசாங்கமே மதுக்கடைகளை
(டாஸ்மாக்) நடத்துவதை விட வெட்கக்கேடு
வேறு என்ன இருக்கிறது ?

வரும்படி ஒன்றே அரசாங்கத்தின் நோக்கம் ஆனது.
சாராயக் கடைகள் அரசுக்கு வரும்படியை
அள்ளித்தரும்  வற்றாத அட்சய பாத்திரம் ஆனது.

இன்றைய தினம் ஆண்டுக்கு சுமார் 15,000 கோடி
ரூபாய் வருமானம் வருகின்ற நிலையில் –
மிகப்பெரிய வருமான இழப்பிற்கு வழி கோலும்
மதுவிலக்கை மீண்டும் அமுலுக்கு கொண்டு வர
யாரும் யோசிக்கக் கூடத் தயாரில்லை.

மதுவினால் வரும் கேடுகளைப் பற்றி நான் புதிதாக
எழுதி யாரும் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையே
இல்லை.

அனைவரும் அறிவர்.
இதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர் பெண்கள் தான்.
குடிக்கு அடிமையானவர்களின் ஆரோக்கியம்
அதல பாதாளத்திற்கு போய் விடுகிறது.
தமிழ் நாட்டில் பாதிபேர் 40 வயதிலேயே எதற்கும்
லாயக்கற்றவர்களாகி விடுகிறார்கள்.

குடும்பச்சண்டை, தற்கொலை, திருட்டு,கற்பழிப்பு,
அடிதடி, கொலை, கொள்ளை என்று குற்றங்கள்
பெருகுவதற்கு அடிப்படைக் காரணமாக அமைவதே
பெரும்பாலும் குடிப்பழக்கம் தான்.

அரசுக்கு சாராய வியாபாரத்தின் மொத்த மதிப்பில்
30% வருமானமாக வருவதாக வைத்துக்கொண்டால் –
அதாவது 30% = 15,000 கோடி என்றால்,
குடியினால் மக்கள் இழக்கும் மொத்த தொகை(100%)
ஆண்டுக்கு 50,000 கோடி என்றாகிறது.
எந்தவிதத்திலும்,  யாருக்கும் பலனளிக்காமல்
வருடத்திற்கு 50,000 கோடி ரூபாய் விரயம் ஆகிறது.
விரயம் ஆவது மட்டும் அல்லாமல்,
உழைக்கும் வர்க்கத்தின்  ஆரோக்கியம், குடும்ப நலம்,
எதிர்காலம் அத்தனையும் பாழாகிறது.

பூரண  மதுவிலக்கை அமுலுக்கு கொண்டு வந்து
அதை மிகக் கடுமையாக நடைமுறைப் படுத்தினால்,
தமிழகத்தை பிடித்த சாபம் முற்றிலுமாக விலகும் –
அடித்தட்டு மக்களின் வாழ்க்கைதரம் நிச்சயம் உயரும்.

என்றாலும், எந்த கட்சி அரசுப் பொறுப்பில்
இருந்தாலும் இதனால் ஏற்படும் பெருத்த வருமான
இழப்பிற்கு தயாராக இருக்காது.

எனவே – முதலில்,
அடுத்த தலைமுறையாவது –
இந்த பழக்கத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளாதவாறு
சில கட்டுப்பாடுகளை படிப்படியாகக் கொண்டு வரலாம்.

டாஸ்மாக்  கடைகளின் எண்ணிக்கையை முதலில்
பாதியாகக் குறைத்து விட்டு, பின்னர் ஒவ்வொரு
ஆண்டும் 10 % குறைத்துக்கொண்டே வரலாம்.

அரசாங்கத்தின் வருமானம் திடீரென்று ஒரேயடியாக
குறையாமல் படிப்படியாக குறையும் என்பதால்,
கூடவே  மாற்று வருமானத்திற்கும் யோசனைகளை
உருவாக்கலாம்.

நான் சிறு வயதில் பாண்டிச்சேரிக்கு போனபோது
பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது. அங்கே
கள்ளுக்கடைகளும், சாராயக் கடைகளும்,
ஊருக்கு வெளியே குறைந்தது 3,4 கி.மீ.
தள்ளி தான் இருக்கும்.(கள்ளுக்கடைக்கு
போகும் வழி என்று வழி எங்கும்
அம்புக்குறி போட்டிருப்பார்கள் )

பெருங்குடிகாரர்கள் எல்லாம் அங்கே போய்
மூச்சு முட்ட குடித்த பிறகு,
மீண்டும்  வீடு வந்து சேர இயலாமல்
கடை அருகிலேயே
படுத்துக்(விழுந்து ?) கிடப்பார்கள்.
( இதன் மூலம் அவர்களது குடும்பத்தில்
பெண்களும், குழந்தைகளும்
தினசரி வேதனையிலிருந்து ஓரளவு தப்புவார்கள் !)

இவ்வாறு கடைகளை ஊருக்கு ஒதுக்குப் புறமாக
கொண்டு போவதால்,ஊருக்குள் சட்டம் ஒழுங்கு
பிரச்சினைகளும் கொஞ்சம் குறையும்.
குடிகாரர்களின் எண்ணிக்கையும் ஓரளவு குறையும்.

சாராயக் கடைகளை படிப்படியாக
குறைத்துக் கொண்டே வந்து,
புதிய குடிகாரர்கள் உருவாவதை –
குறைத்துக் கொண்டே வந்து,
அதே சமயத்தில் அரசுக்கு மாற்று வருமானத்திற்கும்
வழி செய்து கொண்டு – 4 அல்லது
5 ஆண்டுகளில் முற்றிலுமாக மதுவிலக்கை
அமுலுக்கு கொண்டு  வந்து விடலாம்.

தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் –
இந்த கோரிக்கையை
இயன்ற அளவு வலியுறுத்தலாம்.
பெண்களின் அமைப்புகள் இதில்
பெரும் பங்காற்றலாம். டாஸ்மாக் கடைகளை
மூடுவதாக உறுதி அளிப்பவர்களுக்கு
ஓட்டு என்று கூறலாம்.

உடனடியாக இவை எதுவும் நிகழ்ந்து
விடா விட்டாலும், எதிர்காலத்தில்
இப்படி ஒரு சாத்தியக் கூறு பற்றி மக்கள்
யோசிக்கட்டுமே !

தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள்
மனதில் – மக்களின் மன உணர்வுகளும்,
தேவைகளும் புரிய இது ஒரு வாய்ப்பாக
அமையட்டுமே !

மக்கள் இதில் நம்பிக்கையோடு ஈடுபட
வேண்டும். இன்றில்லா விட்டாலும்
நாளையாவது இந்த சாராயம் என்னும்
பெரிய சாபக்கேட்டிலிருந்து நம் தமிழ்ச்
சமுதாயம் விடுபட வேண்டும்.

நான் என் வீட்டு  வாயிலிலும்,
அருகில் என்னால் முடிந்த இடங்களிலும்,

செய்தித்தாள்  அளவு வெள்ளை காகிதத்தில்,
கையாலேயே கீழ்க்கண்டவாறு எழுதி
ஒட்டலாம் என்று இருக்கிறேன்.
என் நண்பர்களும் சிலரும் இதைச் செய்வதாக
இருக்கிறார்கள் –

இதனால் எல்லாம் காரியம் நடக்குமா ?
என்று கேட்கலாம். சிறிய முயற்சியை
செய்து வைப்போமே இதனால் நாம்
இழக்கப் போவது ஒன்றுமில்லையே !
இப்படித்தான் செய்ய வேண்டும் என்பதில்லை.
அவரவருக்குத் தோன்றும் விதத்தில் கூறலாம்.

சாராயக்கடைகள்  ஒழிக்கப்பட வேண்டும்
என்பது மக்களின் முதன்மையான
பிரச்சினை  என்பது எந்த விதத்திலாவது
வெளிப்படுத்தப்பட வேண்டும்-அவ்வளவு தான்.

நான் புதிதாக எதையும் சொல்லவில்லை –
ஏற்கெனவே மக்கள் மனதில் இருப்பது தான் –
வாய்ப்பு கிடைக்கும்போது வெளிப்படுத்துவோம்
என்கிறேன். அவ்வளவு தான் !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சுதந்திரம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், வசூல், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to அரசியல் சட்டத்திற்கும், அடிப்படை கோட்பாடுகளுக்கும் எதிராக …..

 1. reader சொல்கிறார்:

  “ஓட்ட போட்டேன்னு சொல்லாதே. வித்தேன்னு சொல்லு”

  அண்ணன் அஞ்சாசிங்கம் புட்டுபுட்டு வைக்கிறார்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக நண்பரே,

   மிகவும் வித்தியாசமான –
   மிகப் பொருத்தமான,
   பின்னூட்டம்.

   கவுண்டமணி பின்னி விட்டார் !

   -வாழ்த்துக்களுடன்
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.