மாட்டிக் கொண்ட தயாநிதி மாறனும் – காட்டிக் கொடுத்த ஆண்டிமுத்து ராஜாவும் !!

மாட்டிக் கொண்ட  தயாநிதி மாறனும் –
காட்டிக் கொடுத்த ஆண்டிமுத்து ராஜாவும் !!

டெல்லி செய்தி ஏட்டில் வெளியான செய்தி !

ஆண்டிமுத்து ராஜா கொடுத்த தகவல்களின்
அடிப்படையில், சிபிஐ  தயாநிதி மாறனையும்
விசாரணை வளையத்துள் கொண்டு வந்திருப்பதாக
ஹிந்துஸ்தான் டைம்ஸ் மூலம் செய்திகள்
வெளியாகி உள்ளன.

கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கைமாறியது
தொடர்பாக ராஜாவை சிபிஐ தீவிரமாக
விசாரித்தபோது,
தனக்கு வழிகாட்டியாக இருந்தது
தயாநிதி மாறன் இலாகாவை கையாண்ட
விதம் தான் என்றும்,
தான் செய்தது தவறு என்று கூறி இப்போது
விசாரணை நடத்தும் சிபிஐ முதலில்
தன் முன்னோடி தயாநிதி மாறன்
செய்ததை  விசாரித்துத் தெரிந்து கொள்ளட்டும்
என்று கூறினாராம்.

எனவே சிபிஐ அது தொடர்பான விவரங்களையும்
திரட்டி வருகிறதாம்.

ராஜா கிளப்பிய  விஷயங்களாவன  –

சன் தொலைக்காட்சி (சன் டிடிஎச்) நிறுவனத்திற்கு
ஏர்செல்  நிறுவன உரிமையாளரான
அனந்தகிருஷ்ணனின் துணை நிறுவனமான
ஆஸ்ட்ரோ நிறுவனம்
675 கோடி ரூபாய் முதலீடு
கொடுத்து உதவியது எப்படி ?
அதற்கு கைம்மாறாக தயாநிதி மாறன் அந்த
நிறுவனத்திற்கு காட்டிய சலுகைகள் எவை எவை ?

இது பற்றி மேற்கொண்டு வெளிவந்துள்ள
சில தகவல்கள் –

ஏர்செல் நிறுவனம் உத்திரப் பிரதேசத்தில்
செல்போன்  சேவைக்காக லைசென்ஸ் பெற
2004ஆம் ஆண்டே விண்ணப்பித்திருந்தது.

நீண்ட நாட்கள் – அந்த விண்ணப்பம்,
அமைச்சகத்தால்
சொத்தை, சொள்ளை காரணங்களை கூறி
கிடப்பில் போடப்பட்டு வந்ததாம்.

2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த
நிறுவனம் கைமாறி மேக்ஸிஸ் நிறுவனத்தின்
உரிமையாளரான மலேசியாவைச் சேர்ந்த
அனந்தகிருஷ்ணன் வசம் வந்ததாம்.
இதே ஏர் செல் அனந்தகிருஷ்ணன் தான்
ஆஸ்ட்ரோ நிறுவனத்திற்கும் சொந்தக்காரராம் !

பின்னர் 2006 நவம்பரில் ஏர்செல் லைசென்சுக்கு
அனுமதி உறுதியானதும்,
2007 பிப்ரவரியில் அவரது துணை நிறுவனமான
ஆஸ்ட்ரோ நிறுவனம்
சன் குழுமத்தில் 675 கோடி அளவிற்கு தன்
முதலீட்டை செலுத்தி தனது நன்றியறிதலைத்
தெரிவித்துக் கொண்டதாம் !

சன் நிறுவனத்திற்கும், ஆஸ்ட்ரோ நிறுவனத்திற்கும்
ஏற்பட்டது  முழுக்க முழுக்க வியாபார ரீதியான
உறவு என்றும்
லைசென்ஸ்  வழங்குவதற்கும் இதற்கும்
எந்த வித சம்பந்தமும் இல்லை என்று
இரு நிறுவனங்களாலும் மறுக்கப்பட்டாலும்-

ராஜா கொடுக்கும் அழுத்தத்தால்  இது குறித்த
விவரங்கள் சிபிஐ யின் ஆய்வில் இருக்கிறதாம்.

இதுவே சரியென்றால்,  கலைஞர் டிவிக்கு
டிபி ரியால்டர், சினியுக் மூலம் 214 கோடி
கடனாகக் கொடுக்கப்பட்டதில் என்ன
முறைகேடு கண்டீர்கள் என்று ராஜா
சிபிஐ யிடம் கேள்வி எழுப்பினாராம் !

(ஆக, இது விஷயத்தில் ராஜாவின்
குருநாதர் திருவாளர் தயாநிதி தானோ ? )

ரத்தன் டாட்டாவிற்கும் தயாநிதிக்கும் ஏற்பட்ட
பிரச்சினைகள் இரண்டு வருடங்களுக்கு முன்னரே
வெளிவந்தவை தான்.

டாட்டாவின்  டிடிஎச் நிறுவனத்தில்
சன்  நிறுவனத்திற்கு 30 % பங்கு விட்டுக்
கொடுக்கும்படி தயாநிதி அழுத்தம் கொடுத்ததை
ரத்தன் டாட்டா அப்போதே ஒரு பேட்டியில் சொல்லி
இருந்தார்.

அதற்கு ஒப்புக்கொள்ளாததால்,
டாட்டா நிறுவனத்திற்கு தகவல் தொடர்பு துறையால்
கொடுக்கப்படும் தொல்லைகளைப் பற்றியும்
அந்த பேட்டியில் –
வெளிப்படையாகவே கூறி இருந்தார்.
அது வேறு இப்போது சேர்ந்து கொண்டிருக்கிறது.

தயாநிதி மாறன், தகவல் தொடர்பு
அமைச்சராக இருந்தபோது,
இரண்டு மிக முக்கியமான சந்தர்ப்பங்களில்,
டிராய் அமைப்பையோ –
டெலிகாம் கமிஷனையோ –
கலந்து ஆலோசிக்காமல்,
விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக எடுத்த
முடிவுகளும் இப்போது பரிசீலனையில் இருக்கிறதாம்.

ஐடியா செல்லுலார் நிறுவனத்திற்கு,
நிதி அமைச்சகத்தை
கேளாமலேயே சில சலுகைகளைக் கொடுத்ததும்,

எஸ்ஸார் ஸ்பேஸ்டெல் என்கிற நிறுவனத்திற்கு
தகுதிகள் இருந்தும் லைசென்ஸ் கொடுக்காமல்
இரண்டரை வருடங்கள்  வரை இழுத்தடித்ததும்
கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறதாம்.

இதில் முக்கால்வாசி விஷயம் வெளிவந்தது
ராஜா மூலமாகவேயாம்.

இதில் தெரிய  வருவது –
ராஜாவின் குறி தயாநிதியை மாட்டி விட
வேண்டும் என்பதல்ல. தயாநிதி காங்கிரசின்
செல்லப்பிள்ளை ஆதலால், அவரை காப்பாற்ற
எப்படியும்  காங்கிரஸ் முயலும். அதை வழியில்
தானும் தப்பி விட முடியும் என்பதே !

ஒரு வேளை தப்ப வழியின்றி தான் சிக்க நேர்ந்தால்,
மற்றவர்களும் மாட்டட்டுமே –

யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம் என்கிற
“பரந்த -உயர்ந்த” எண்ணமே !

ஆக மொத்தம் – ராஜாவை காப்பாற்ற முயலவில்லை
என்றால் -அது யாராக இருந்தாலும்,
அவர்களையும்
மாட்டி விடக்கூடிய நிலையில் தான்
அவர் இருக்கிறார் என்பது தெளிவாகவே தெரிகிறது.

எனவே – தலைவர் குடும்பத்தின் மீதும்
தலைக்கு மேல் கத்தி தொங்குவதால்,
விரும்பினாலும்,
விரும்பாவிட்டாலும்,
ராஜாவைக்  கைவிடுவது
என்பது நடவாத  காரியம் என்பது தெளிவாகவே
தெரிகிறது.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, குடும்பம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to மாட்டிக் கொண்ட தயாநிதி மாறனும் – காட்டிக் கொடுத்த ஆண்டிமுத்து ராஜாவும் !!

 1. அருண்முல்லை சொல்கிறார்:

  ராசா, தயாநிதி என்று கைநீண்டால்… ம்ம்! வலையின்
  நூலைப்பிடித்தால் வலையே கையோடு வருமென்பது
  யாருக்குத்தான் தெரியாது.

 2. raja1969 சொல்கிறார்:

  மனிதனின் மூளை இயல்பான (நியாயமான) செயல்களில்ருந்து விடுபடும்போது மிருக மூளை அவனை ஆட்கொள்ளும்………….

 3. sathish siva சொல்கிறார்:

  நீங்கள் நினைப்பது தவறு. எல்லாம் ஒரு நாடகம். உச்சநீதி மனறம் மட்டும் விழிப்பாக இல்லாவிட்டால் எல்லாம் விரைவில் முடிவுக்கு வந்து விடும். பாவம் தமிழக மக்கள். சுதந்திரம் கிடைத்தும் அடிமைகளாய் வாழும் அவலப்பிறவிகள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.