உயிரை விட்ட உடலுக்கு ….ரூபாய் 25,000/-

உயிரை விட்ட  உடலுக்கு ….ரூபாய் 25,000/-

வழக்கமான  அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல.
இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம்.

அண்மையில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றினைச்
சேர்ந்த பேராசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

நீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த
ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி அவரிடம் கூறினேன்.

தினமும் இயற்கை அல்லாத வகையில் நிறைய
சாவுகள்  ஏற்படுகின்றன.

முக்கியமாக ரயில் தண்டவாளத்தை ஒட்டி நிகழும்
விபத்துக்கள், தற்கொலைகள், சாலை விபத்துக்களில்
இறப்போர் … இப்படி பல வகைகள்.

அரக்கோணம் முதல் தாம்பரம் வரையிலுமான
ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டிய  இடங்களில்
மட்டுமே தினமும் சராசரியாக
5 பேர் இறக்கின்றார்களாம்.அதாவது –
வருடத்திற்கு 1800 பேர். இதில் பலத்த
முயற்சிகளுக்குப் பின்னரும் 10% – அதாவது
வருடத்திற்கு சுமார் 180 பேர்களின் உடல்கள்
இறுதி வரை அடையாளம்  கண்டு பிடிக்கப்பட
முடியாமலே போகிறதாம்.

இந்த மாதிரி நேரும் இறப்புக்களில்,
பெரும்பாலான நேரங்களில் இறந்தவர்களின்
அடையாளம் தெரிவதில்லை.
இப்படிப்பட்ட இறப்புக்களை பயன்படுத்திக்கொண்டு,
சமூக விரோதிகள் சம்பந்தப்பட்டவர்களின்
உடைமைகளைத் திருடிக் கொண்டு போய் விடுவதால்,
இறந்தவர் பற்றிய அடையாளங்களை
தெரிந்து கொள்வதில் பெரும் பாதிப்பு
ஏற்படுகிறது.

இத்தகைய் விபத்துக்களில் – இறந்தவர்களின்
உடல்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டு,
அரசாங்க மருத்துவ மனைக்கு
கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு
ஏற்பாடு செய்யப்படுகிறது.
அநாதைப் பிணங்கள் என்பதால் –
இதில் யாருக்கும் எந்தவித அக்கரையும்
அவசர உணர்வும் இருப்பதில்லை.
எனவே எல்லா இடங்களிலும் தாமதங்கள்.
சில சமயங்களில் பிரேத பரிசோதனை
செய்யப்படும்போதே
இறந்து 3-4 நாட்கள் ஆகி விடுகின்றன.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு,
சரிவர தைக்கப்படாமல்,
முகம்  மட்டுமே வெளியில் தெரியும் வகையில்
காடாத்துணியால் சுற்றி கட்டப்பட்டு உடல்கள்
அரசு மருத்துவ மனையின்
சவக்கிடங்குக்கு (மார்ச்சுரி) அனுப்பப்படுகின்றன.

பின்னர் நிதானமாக எந்த வகையிலாவது அடையாளம்
கண்டு பிடிக்கப்பட முடிகிறதா என்கிற வகையில்,
போலீஸ் விசாரணை நடக்கிறது.
அது வாரக்கணக்கில், சில சமயங்களில் –
மாதக்கணக்கில் கூட  நீள்கிறது.
விசாரணை முடிந்து, நடைமுறை விதிகள்
முடியும் வரை உடல் சவக்கிடங்கிலேயே கிடக்கிறது.

அரசு மருத்துவ மனைகளில் சவக்கிடங்குகள்,
குளிர்சாதனம் பொருத்தப்பட்டு, தொடர்ந்து
இயக்கத்தில் இருக்க வேண்டும் என்பது விதி.

ஆனால், முக்கால்வாசி மருத்துவ மனைகளில்
இவை சரியாக இயங்குவதில்லை. பற்றாக்குறைக்கு
அவ்வப்போது மின்வெட்டு – மின் தடங்கல் வேறு.

உடல்கள்  அழுகத் துவங்கி, பயங்கரமாக
நாற்றம் எடுக்கும் நிலையில்
இருக்கும்போது தான் அவற்றை அடக்கம்
செய்ய அனுமதி கிடைக்கிறது.

அதன் பின்னர் காவல்துறை, மாநகராட்சி
அலுவலர்களின் உதவியோடு இவற்றை அடக்கம்
செய்ய முயற்சி எடுக்கிறது.

சாதாரணமாக பணம் கொடுத்தாலே சுலபமாக
வேலை நடக்காத நிலையில், அநாதைப்
பிணங்களை அடக்கம் செய்ய
யார் அக்கரை எடுத்துக்கொள்வார்கள் ?
ஒரு சில இடங்களில் சில சமூக சேவை
நிறுவனங்கள் ஓரளவிற்கு இந்த பொறுப்பை
ஏற்றுக்கொள்ள முன்வருகின்றன.

மற்றபடி பல சவக்கிடங்குகளில்,சில சமயங்களில்
6 மாத காலத்திற்கும் மேலாக சடலங்கள்
கிடத்தப்பட்டு இருக்கின்றன.

மனிதாபிமானம் என்கிற பேச்சுக்கே
இங்கு இடமில்லை.
உயிரோடு இருக்கிற மனிதர்களிடமே
அபிமானம் இல்லை என்கிற நிலையில்
செத்த பிணத்தின் மீது யார் அபிமானம்
காட்டப்போகிறார்கள் ?

காவல் துறையைச் சொல்லியும் பயனில்லை.
அவர்களுக்கு எவ்வளவோ அவசரப் பிரச்னைகள் !
உயிருடன் இருப்பவர்களின் பிரச்சினைகளே
அவர்களை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
அநாதைப் பிணங்கள் காத்துக் கிடப்பதில்
அவர்களுக்கு என்ன  சங்கடம் ?

செத்துப்போனவர்களை புகைப்படம், வீடியோ
எடுத்துக்கொண்டு, அவர்களது உயரம், எடை, அங்க
அடையாளங்கள், உடைமைகள் ஆகியவற்றின்
விவரங்களைக் குறித்துகொண்டு, ஒரு வாரம் அல்லது
10 நாட்களில் காவல்துறை தங்கள் கடமையை முடித்துக்
கொண்டு சடலங்களின் அடக்கத்திற்கு
ஏற்பாடு செய்யலாம் தான்-

ஆனால் நடைமுறையில் அது நடப்பதில்லை.
அரசு மருத்துவ மனைகளிலும்,  சடலங்களை
சரியாக பராமரிப்பதில் எந்தவித அக்கரையும்
காட்டப்படுவதில்லை.
குளிர்சாதன முறைகள்
சரிவர இயங்காதது குறித்து கவலை கொள்வார்
யாருமில்லை. இந்த சவக்கிடங்குகளை
பாதுகாக்கும் பணியில் இருப்பவர்கள் தான் பாவம் –
இந்த சூழ்நிலையை பொறுக்க இயலாமல்
24 மணி நேரமும் குடியின் பிடியிலேயே இருக்க
வேண்டி இருக்கிறது !

இதைப் பற்றி எல்லாம் அந்த  நண்பரிடம்
பேசிக்கொண்டிருந்த போது தான்
அந்த விஷயம் தெரிய வந்தது.

மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவப் படிப்பு
படிக்கும் மாணவர்களுக்கு உடல் கல்வி கற்பிக்கவும்,
நடைமுறை பரிசோதனைகள் செய்து காட்டவும்,
ஒரு ஆண்டுக்கு குறைந்த பட்சம்
180 மனித  உடல்கள் தேவைப்படுகின்றனவாம் !

இந்த உடல்களை  அவர்கள் சொந்த முயற்சியில்
வாங்கி( அரசு அனுமதிக்கும் விதிகளின்படி தான் )
பதப்படுத்தி (embalment), பயன்பாட்டிற்கு
கொண்டு வர ஒரு  உடலுக்கு ரூபாய் 25,000/-
வரை ஆகிறதாம்.

ஒரு உடலுக்கு 25,000/- ரூபாய் வீதம்
ஒவ்வொரு ஆண்டும் 180 உடல்கள் -ஒவ்வொரு
மருத்துவக் கல்லூரிக்கும் தேவைப்படுகிறதாம்.

அரசாங்கமும், மருத்துவக் கல்லூரிகளும் சேர்ந்து
முயன்றால், இந்தப் ஒட்டு மொத்தப் பிரச்னையை
வெகு சுலபமாகத் தீர்க்கலாம் என்று தோன்றுகிறது.

அரசாங்க மருத்துவ மனைகளில் உள்ள
சவக்கிடங்குகளை
பராமரிக்கும் பொறுப்பை இந்த மருத்துவ கல்லூரிகள்
வசம் ஒப்படைத்து விட்டால் –

சடலங்களும், சவக்கிடங்கும், குளிர்சாதன வசதிகளும்
ஒழுங்காக பராமரிக்கப்படும். தகுந்த விசாரணக்குப் பின்
அடையாளம் காட்டப்பெறும் உடல்கள்,
உறவினர்களுக்கு நல்ல முறையில் கிடைக்கும்.

இறுதி வரை அடையாளம் காண முடியாமல் கிடக்கும்
சடலங்கள் அடக்கம் செய்ய ஆள் இல்லாமல்
அசிங்கப் படுவதற்கு பதிலாக மருத்துவக்
கல்லூரிகளின்  பரிசோதனைச்சாலைகளில்
மனித குலத்தின்  மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்
படுவதற்கு  அரசாங்கம்  அனுமதிக்கலாம்.

மருத்துவக் கல்வித் துறை முன்னின்று முனைந்து,
ஒரு நல்ல வழிமுறைத் திட்டத்தோடு
அரசாங்கத்தை அணுகினால்  இந்தப் பிரச்சினைக்கு
ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்றே
தோன்றுகிறது.

சம்பந்தப்பட்டவர்கள்  இதற்கான முயற்சிகளை
மேற்கொள்வார்களா ?

இதில் இன்னும் செய்யப்பட வேண்டிய காரியம்
ஒன்றும் இருக்கிறது.

இவ்வாறு அடையாளம்
காணப்பட முடியாமல் சவக்கிடங்குகளில்
கிடைக்கும் உடல்களை புகைப்படம் எடுத்து,
அது பற்றிய  விவரங்களை,
புகைப்படத்துடன்,
காவல் துறையின் ஒத்துழைப்போடு   ஒரு
தனி வலைத்தளத்தில் “அடையாளம்
காணப்பட முடியாதவர்கள்” என்று தலைப்பிட்டு
அவ்வப்போது தொடர்ச்சியாக
வெளியிட்டு வந்தால் –

தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் காணவில்லை
என்ற புகாருடன் காவல் நிலையத்திற்கு
வருபவர்களை முதலில்
இந்த வலைத்தளைத்தை  ஒரு முறை
பார்க்குமாறு செய்தால் – அநேக  உடல்கள்
அடையாளம் காணப்படலாம்.
இது பல பேருக்கு மன ஆறுதலையும்,
பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வையும் தரும்.

காவல் துறை தான் இதைச்செய்ய வேண்டும்
என்பதில்லை. சமூக சேவையில் ஈடுபாடுடைய
எதாவது ஒரு தொண்டு நிறுவனம் கூட
இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளலாம்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆன்மிகம், இணைய தளம், இந்தியன், இரக்கம், கட்டுரை, நாகரிகம், பொது, பொதுவானவை, மருத்துவர்கள், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

6 Responses to உயிரை விட்ட உடலுக்கு ….ரூபாய் 25,000/-

  1. metro boy சொல்கிறார்:

    என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த விஷயம் இது.
    ஒரு வாரத்திற்கு மேலும் இந்த பிணங்களை வைத்துக்கொண்டு இருப்பதில் பயன் ஒன்றும் ஏற்படப்போவதில்லை.
    ஒரு வலைத்தளத்தில் புகைப்படம் பதிப்பிப்பது என்பது தகவல் பலரை சென்றடையும் வாய்ப்பை நல்கும்.
    மருத்துவக் கல்லூரிகளே இதை செய்ய முன்வரவேண்டும்.
    இது போன்ற தகவல்கள் தொண்டு நிறுவனங்களை சென்றடையுமா?

  2. RAJASEKHAR.P சொல்கிறார்:

    நன்றி சார் என்மனதில் நீண்ட நாட்களாக இருந்தகவலை ….பாராட்டுக்கள் !

    சார் ..இன்றைய செய்தி இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டம்: கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் கைது…..?????
    அதிகார வரம்பில் இருப்பவர்கள் ஆணை இடவேண்டியவர்கள் ?!எதிர்கட்சிகள் போராடினால் சரி………??? இவர்கள் எதற்காக ……யாரை ஏமாற்ற இந்த நாடகம்…?

  3. Kalee சொல்கிறார்:

    Hats off to your concern, solution and effort to publish such great ideas. I was touched by your noble thoughts.

  4. சபிவுதீன் சொல்கிறார்:

    அருமையான அவசியமான பதிவு இதை சம்பத்தப்பட்ட துறையைச் சேர்ந்தவர்கள் மனமுவந்து இதை சரி செய்ய உதவ வேண்டும்

  5. நற்றமிழன் சொல்கிறார்:

    குறைகளை, நிறைகளாக மாற்றுவது என்ற அருமையான கட்டுரை.

    வாழ்த்துகள். காவிரிமைந்தன் அவர்களே.

  6. விஸ்வாமித்ரா சொல்கிறார்:

    நல்ல யோசனை. இதை தனியார் மருத்துவக் கல்லூரிகள் ஒன்று சேர்ந்து அரசுடன் பேசி ஒரு தீர்வுக்கு வரலாமே. இத்தனைக்கும் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அரசியல்வாதிகள் அல்லது அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் அல்லது பெரும் செல்வந்தர்களினால் நடத்தப் படுகிறது. அவர்களுக்கு அரசுடன் இந்த விஷயத்தில் உடன் பாடு காண்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமில்லையே. மூன்று நாட்கள் வரை அரசு மருத்துவமனையின் பிணக் கிடங்கில் வைத்துக் கொள்ளலாம் அதற்கு மேலே போனால் தனியார் கல்லூரிகளுக்கு வரிசைப் படி அனுப்பி வைக்கலாம். அவர்களிடம் இருக்கும் பொழுது அடையாளம் காண்பிக்கப் பட்டால் அவர்கள் ஒப்படைத்து விட வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். இறந்து போனவர்களின் உடல்களுக்கும் ஆத்மாவுக்கும் உரிய மரியாதை அளித்து பிணக்கிடங்குகளைக் கூட பராமரிக்க முடியாத அரசாங்கம் இலவச கலர் டி வி வழங்குகிறது. நாட்டில் இதையெல்லாம் யார் யாரிடம் கேட்ப்பது. மனம் கலங்குகிறது. என்ன மாதிரியான நாடு இது?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.