திமுக வின் பேச்சாளர்கள் ….

திமுக வின் பேச்சாளர்கள் ….

தங்கள் பேச்சுத் திறனாலேயே தாங்களும் வளர்ந்து,
கட்சியையும் வளர்த்தவர்கள் அந்த காலத்து
திராவிட முன்னேற்றக் கழகத்துத் தலைவர்கள்.

அறிஞர் அண்ணா, ஈவிகே சம்பத்,
நாவலர் நெடுஞ்செழியன்,
நாஞ்சில் மனோகரன்,
சிந்தனைச் சிற்பி சி.பி.சிற்றரசு,
ஏவிபி ஆசைத்தம்பி,
என்வி நடராசன், கேஏ மதியழகன் …
என்று வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம்.

எனக்கு 12 வயது இருக்கும்போதே – ஒரு முறை
அண்ணாவின் பேச்சைக் கேட்க ஆசைப்பட்டு திமுக
கூட்டத்திற்கு சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது.

மாலை 6.30 மணிக்கு என்று சொல்லப்பட்டு
இரவு 11 மணிக்கு பேசத்தொடங்கிய அண்ணா
இரவு 12.45 வரை பேசினார். மது அருந்தும்
வண்டாக மக்கள் அப்படியே மயங்கிப் போய் அமர்ந்து
இருந்தனர். அப்படி ஒரு மயக்கும் பேச்சாற்றல்
நிறைந்தவர் அண்ணா.
அப்போதெல்லாம் திமுக வினரிடம்
கொள்கைப் பிடிப்பு இருந்தது.
வேகம் இருந்தது.
பேச்சில் தெளிவு இருந்தது.
அடுக்கு மொழிக்காக எதுகை,
மோனையுடன் பேசினாலும்,
சொல்லில் ஏற்றுக்கொள்ளக்கூடிய
கருத்துக்கள் இருந்தன.

ஆனால் – இப்போது ?

கலைஞரின் பேச்சைக் கூட கேட்கப் பிடிப்பதில்லை.
பாதி நேரம் தற்புகழ்ச்சியாகவும், மீதி நேரம்
“கேள்வியும் நானே – பதிலும் நானே”  யாகவும்
அமைகிறது.

கட்சியினரோ – பணம், பணம் என்று பணத்தின்
பின்னாலேயே அலைந்து கொண்டிருக்கின்றனர்.
ஆட்சி அதிகார்த்தைப் பயன்படுத்தி எவ்வளவு
சம்பாதிக்க முடியுமோ – சம்பாதித்துக் குவித்துக்
கொண்டிருக்கின்றனர்.  நிறைய இடங்களில்
மக்களுக்குத் தெரியும் வண்ணம் வெளிப்படையாகவே
நடக்கின்றன.

என் வயோதிக நண்பர் ஒருவர்.
உடல் நிலை, மருத்துவ வசதி தேவை காரணமாக,
ஊரில்  உள்ள அவரது வீட்டை விற்று விட்டு
சென்னைக்கு வந்து நிரந்தரமாக தங்கி விட
விரும்புகிறார். பெரிய வீடு, சுற்றிலும் காலி மனை
எல்லாம் சேர்ந்து இன்றைய மதிப்பில்
சுமார் ஒன்றரை கோடி பெறும்.

விற்க முயன்றவருக்கு பயங்கர அதிர்ச்சி !

உள்ளூர் அமைச்சர் – அவரே மாவட்டச் செயலாளரும் கூட,
தரப்பிலிருந்து ஆட்கள் வந்து, அமைச்சர் அந்த
இடத்தையும் வீட்டையும் வாங்க விரும்புவதாகவும்,.
30 லட்சம் கொடுப்பதாகவும் உடனடியாக பத்திரப் பதிவு
நடக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்துள்ளார்கள்.

நண்பர் பதறிப்போய் அமைச்சரின் ஆட்கள் வந்தது
எப்படி என்று விசாரித்தால் தெரிகிறது விஷயம் !
மாவட்ட பதிவாளருக்கு அமைச்சரின் நிரந்தர உத்திரவாம்.
10 லட்சத்துக்கு மேல் விற்பனைக்கு எந்த இடம்
வந்தாலும், உடனே அது அமைச்சருக்கு தெரிவிக்கப் பட
வேண்டும் என்றும், அமைச்சர் வாய்மொழி அனுமதி
இல்லாமல், அந்த விற்பனை பதிவு செய்யப்படக் கூடாது
என்றும்.

நொந்து போன நண்பர் வீட்டை விற்கும் யோசனையையே
கை விட்டு விட்டார்.

இப்போது இந்த ஆட்சியை, கட்சியை,
காப்பாற்ற மாத சம்பளம் கொடுத்து பேச்சாளர்களை
வைத்திருக்கிறார்கள் !
அவர்களில் ஒருவர் வெற்றிகொண்டான்.
அதிரடிப் பேச்சாளர்.
வயதானவர் – நன்றாகத்தான் பேசுகிறார்.
ஆனால் – விஷயம் ?
அவர் பேச்சைக் கேட்கும் பாக்கியம் எல்லாருக்கும்
கிடைத்திருக்காது.  எனவே –

மாதிரிக்கு -அண்மையில் அவர் பேசியவை கீழே –

————————————–

” இந்த  நாட்டுக்காக, தான் வாழ்ந்த வீட்டையே
கொடுத்தவர் எங்க தலைவர். அவர் வீட்டை
ஆஸ்பத்திரிக்கு கொடுக்கச்
சொல்லி யாரும் மனுவா போட்டாங்க?

மகாத்மா காந்தி கூட தன்னோட சபர்மதி ஆசிரமத்தை
யாருக்கும் எழுதி வைக்கல்லையே!

நேருவோ, இந்திராவோ தங்களோட பண்ணை வீடுகளை
இந்த நாட்டுக்காக எழுதி வெச்சாங்களா ?
தேசத் தலைவர்கள்
கூட செய்யாத காரியத்தை என் தலைவர்
செஞ்சிருக்காரய்யா.

வீடு ஒண்ணு தான்யா அவர்கிட்ட மிச்சம் இருந்துச்சு.
அதை வாங்க அவர் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா?

கதை வசனம் எழுதி,
பெரியார்கிட்ட வேலை பார்த்து,
குடியரசு பத்திரிகையில் சப் எடிட்டரா இருந்து
வாங்கிய வீட்டை
கொஞ்சம் கூட யோசிக்காம  ஆஸ்பத்திரிக்கு எழுதி
வெச்சிருக்கார்.
இவ்வளவு பெரிய தியாகத்தை ஜெயலலிதா
பித்தலாட்டம்னு சொல்லுது.

நான் பகிரங்கமா சொல்றேன்.
நாங்க நடத்தறது குடும்ப ஆட்சி தான்.
எனக்குப்பிறகு என் வீடு, என் பையனுக்கு தானே சொந்தம் ?
அந்த மாதிரி இந்த நாடும், என் தலைவரோட
வாரிசுகளுக்கு தான் சொந்தம்.

100 வயசு தாண்டி வாழக்கூடிய என் தலைவருக்குப்
பின்னால், அவர் மகன் ஸ்டாலின் தான் தமிழ் நட்டை
ஆளுவார். எங்களுக்கு குடும்பம் இருக்கு.  அதனால
குடும்ப ஆட்சி நடத்துறோம். ஆனா .. உங்களுக்கு ?

நாங்க ஜெயலலிதாவை மத்த விஷயங்களில் எதிர்க்கலை.
ஒரு தமிழன் தான் தமிழ் நாட்டை ஆளணும்கறது தான்
எங்க கோரிக்கை. அதனால தான் அந்தம்மா
இந்த நாட்டை ஆளக்கூடாதுன்னு சொல்றோம்.

நாளைக்கே ஜெயலலிதா சசிகலாவை முதல்வர்
ஆக்குவேன்  என்று ஒரு அறிக்கை விடட்டும்.
நாங்க இப்பவே அதுக்கு
வழி விட்டு ஒதுங்கிக்கறோம்.

இல்லைன்னா, ஊமையர் சங்கத்தில
உறுப்பினரா இருக்கிற
ஓ.பி.எஸ். ஸை முதல்வர் ஆக்குவதா சொல்லட்டும்.
நாங்க அதுக்கும் சம்மதிக்கிறோம்.
இப்படி அறிவிக்க ஜெயலலிதாவுக்கு தைரியம் இருக்கா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், அறிஞர் அண்ணா, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, சினிமா, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மட்டமான விளம்பரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to திமுக வின் பேச்சாளர்கள் ….

  1. nerkuppai thumbi சொல்கிறார்:

    பழைய பதிவு. இப்போது படிக்க நேரம் வாய்த்தது
    அறுபதுகளில் திராவிட முன்னேற்ற கழக பேச்சுகள் (குறிப்பாக அண்ணா, நெடுஞ்செழியன், கருணாநிதி, அன்பழகன்) கேட்டவர்கள் இது போன்ற வெற்றிகொண்டான் பேச்சுக்களை சகித்துக் கொள்ள முடியாது.

  2. jayanthi சொல்கிறார்:

    ellam kala koduvinai sami

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.