கொட்டொரொச்சி கார் டிரைவர் மற்றும் சிபிஐ அதிகாரியின் வாக்குமூலங்கள் – (ஏன் இத்தனை மர்மங்கள் – 2)

கொட்டொரொச்சி கார் டிரைவர் மற்றும்
சிபிஐ அதிகாரியின் வாக்குமூலங்கள் –
(ஏன் இத்தனை மர்மங்கள் – 2)

25 வருடங்களாகப் பேசப்பட்டு வரும் போபர்ஸ் ஊழல்
விவகாரம் பற்றிய அடிப்படை விவரம் அநேகமாக
அனைவருக்கும் தெரியும்.

இருந்தாலும் ஒரு தொடர்ச்சி கருதி அடிப்படை விவரங்கள்
சுருக்கமாக கீழே –

1985-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது,
இந்திய ராணுவத்திற்காக 400 ஹவிட்சர் ரக பீரங்கிகள்
வாங்க முடிவு செய்யப்பட்டது.
ஸ்வீடனில் இருந்த பீரங்கி
தயாரிப்பு நிறுவனம் ஏ.பி.போபர்ஸ்.
மிகப்பெரிய ஆர்டர்  என்பதால்,
இந்த நிறுவனம்,
இந்திய அரசின் முடிவை தனக்கு சாதகமாகத் திருப்ப
தீவிரமாக முயற்சி செய்தது.

அப்போதைய பிரதமரான ராஜீவின் மனைவி சோனியா
இத்தாலிய நாட்டைச்சேர்ந்தவர் என்பதால், அவருக்கு
பழக்கமான இத்தாலிய தொழிலதிபர் கொட்டொரொச்சியை
இதில் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி பீரங்கி ஆர்டரைப்
பெற்றுத் தரக் கோரியது. இதற்காக, கொட்டொரொச்சிக்கு
மொத்த விலையில் 3 % கமிஷனாகத் தரவும்
ஒப்புக்கொண்டது.

இந்திய அரசு ஏற்கெனவே கடைப்பிடித்து வந்த
கொள்கைப்படி ராணுவ தளவாடங்கள் வாங்குகையில்,
யாரும் இடைத்தரகராக செயல்பட அனுமதி இல்லை.
எனவே, இடைத்தரகர் நியமிக்கப்பட்ட
விஷயத்தை போபர்ஸ் நிறுவனம் மறைத்து விட்டது.

கொட்டொரொச்சியின் தீவிர முயற்சி மற்றும்
இந்தியப் பிரதமரின் இல்லத்தில் அவருக்கு இருந்த
செல்வாக்கின் காரணமாக 1437 கோடி ரூபாய்க்கான
இந்திய அரசின்  விற்பனை ஆர்டர்
போபர்ஸ் நிறுவனத்திற்கு கிடைத்தது. இதற்கு பதிலாக,
போபர்ஸ் நிறுவனம், கொட்டொரொச்சிக்கும்,
அவர் மூலமாக இந்த உத்திரவு வெளியாகக் காரணமாக
இருந்த இந்திய அரசியல்வாதிகள்,
அதிகாரிகள் ஆகியோருக்கும், 1986ஆம் ஆண்டு சுமார்
64 கோடி ரூபாய் கமிஷனாக கொடுத்தது.
(அப்போதைய 64 கோடி இப்போதைய
சுமார் 2000 கோடிக்கு சமமாகலாம்.)

இந்த தகவல் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக
இருந்த மார்டின் ஆர்ட்போ
எழுதி வைத்திருந்த டைரி மூலம் 1987-ல்
வெளியாகி விட்டது.
இந்த தகவல் வெளியான சில  மாதங்களில்
அவரும் மர்மமான முறையில் இறந்தார்.

இந்தியாவில் இந்த விஷயம் அப்போது பெரும் புயலைக்
கிளப்பியது.கொட்டொரொச்சி மூலமாக,
ராஜீவ் காந்திக்கு இந்த ஊழலில்
நேரடி தொடர்பு இருக்கிறது என்றும், அவருக்கான பணம்
ஸ்விஸ் வாங்கியில் போடப்பட்டு விட்டது என்றும்
எதிர்க்கட்சிகள்  கடுமையாகப் பேசின.

இதை ராஜீவ்
தீவிரமாக மறுத்தார்.தன் குடும்பத்திற்கும்,
கொட்டொரொச்சிக்கும் எந்தவித உறவும் கிடையாது
என்று மறுத்துக் கூறினார். ஆனால், அதனை அடுத்து
நடந்த தேர்தலில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ்
படுதோல்வியை சந்திக்கும் அளவிற்கு போபர்ஸ் பிரச்னை
விஸ்வரூபம் எடுத்தது.

பின்னர் இந்த ஊழலை விசாரித்தறிந்து உண்மைகளை
வெளிக்கொண்டு வரவும், ஸ்விஸ்  வங்கி கணக்கு
மற்றும் அதில் போடப்பட்டு இருக்கும் பணம் பற்றியும்
கண்டு பிடிக்கவும் மத்திய அரசின் சிபிஐ நிறுவனம்
ஈடுபடுத்தப்பட்டது.  மிகவும் மந்த கதியில் நடந்த
விசாரணை, அடுத்து அடுத்து வந்த காங்கிரஸ்
அரசுகளால் விருப்பம் இல்லாமலே தொடரப்பட்டது.

விளைவு -பல வங்கிகளுக்குத் தாவி, இறுதியாக
இங்கிலாந்து வங்கி ஒன்றில் அடையாளம்
காணப்பட்டு, முடக்கப்பட்டு இருந்த கொட்டொரொச்சியின்
சுமார்  30 கோடி ரூபாய் பணமும் விடுவிக்கப்பட்டு விட்டது.
ஏதேதோ காரணங்கள் சொல்லி கொட்டொரொச்சியை
கைது செய்வதையும் தவிர்த்து விட்டது இந்திய அரசு.

இப்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைமையை
தொடர்ந்து உறுத்தி வந்த இந்த விஷயத்தை,
25 ஆண்டுகளுக்குப் பிறகு,ஒரு வழியாக அகற்றிவிடத்
தீர்மானித்துள்ள மத்திய அரசு  –

இரண்டு வாரங்கள் முன்னர்
சிபிஐ நிறுவனம் மூலமாக, சரியான ஆதாரங்கள்
கிடைக்காததால் –
மேற்கொண்டு போபர்ஸ்  வழக்கைத்
தொடர முடியவில்லை
என்றும் எனவே போபர்ஸ்  வழக்கை மூடி விட
கோர்ட் அனுமதி தர வேண்டும் என்றும் கேட்டு
விண்ணப்பித்தது.

இதே சமயத்தில், எதேச்சையாக –
சில ஆண்டுகளாக  வருமான வரி தீர்ப்பாயத்தில்
நிலுவையில் இருந்த ஒரு வழக்கில் தீர்ப்பு
அளிக்கும்போது,  கொட்டொரோச்சிக்கும்,
வின் சத்தா என்பவருக்கும் சுமார் 44 கோடி ரூபாய்
அளவிற்கு போபர்ஸ் நிறுவனம் பணம் கொடுத்திருப்பதற்கு
போதுமான ஆதாரங்கள் இருப்பதால்,
அவர்கள் இருவரும் இந்திய அரசாங்கத்திற்கு
அதற்குரிய வருமான வரியை செலுத்தியாக வேண்டும்
என்று தீர்ப்பு அளித்தது.

வழக்கை மூட அனுமதி கேட்டு சிபிஐ மனு செய்ததற்கு
முதல் நாள் தான் வருமான  வரி சம்பந்தமான தீர்ப்பு
வெளி வந்தது.
இருந்தும், இதை கண்டு கொள்ளாத சிபிஐ,
வருமான வரி தீர்ப்பாயத்தில் கொடுத்துள்ள ஆதாரங்கள்,
சிபிஐ வழக்குக்கு போதுமானவை அல்ல என்றும்
சாதிக்கின்றது. இந்த விஷயம்
இன்னும் கோர்ட்டின் பரிசீலனையில் உள்ளது.

இதே சமயத்தில், மற்றொரு முக்கியமான விவரம்
டைம்ஸ் ஆப் இந்தியா  மீடியா மூலமாக வெளியாகி
இருக்கிறது.  இந்த விஷயம் எப்படி வெளியே வந்தது
என்பது யாருக்கும் தெரியவில்லை.

ஆனால் இவை ஆதாரபூர்வமானவை
தான் என்றும், தான் பதவியில் இருக்கும்போது,
தன் முன்னிலையில் தான்
இந்த வாக்குமூலங்கள் பெறப்பட்டன என்றும் சிபிஐ
முன்னாள் டைரெக்டர் ஜோகிந்தர் சிங்
ஒரு பேட்டியில்  தெரிவித்திருக்கிறார்.

———————————————
டைம்ஸ் ஆப் இந்தியா மீடியா மூலமாக
வெளிவந்திருக்கும் விவரங்கள் –

சோனியா காந்தி குடும்பத்திற்கும்
க்வொட்டராச்சிக்கும்
எவ்வளவு நெருக்கம் இருந்தது என்பதைப் பற்றிய
விரிவான விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

நரேஷ் சந்திர கோசெயின் என்கிற சிபிஐ அதிகாரி,
மற்றும் கொட்டொரொச்சியின் கார் டிரைவராகப்
பணி புரிந்து வந்த சசிதரன் என்கிற நபர்  ஆகிய
இருவரும் சிபிஐ விசாரணையின் போது
கொடுத்த வாக்குமூலங்களின் மூலம்
வெளிவந்துள்ள விவரங்கள் –

இத்தாலியைச் சேர்ந்த க்வொட்டராச்சியையும்
அவரது மனைவியையும் முன்னாள் பிரதமர்
ராஜீவ் காந்தியின்
வீட்டில் பணி புரிந்து வந்த  எஸ்பிஜி
(ஸ்பெஷல் ப்ரொடெக்ஷன் க்ரூப் ) பிரிவைச் சேர்ந்த
ஊழியர்கள் அனைவரும்  நன்கு அறிவார்கள்.
பிரதமர் ராஜீவின் வீட்டிற்கு எப்போது வேண்டுமானாலும்
எந்தவித முன் அனுமதியுமின்றி வந்து போகும் அளவிற்கு
அவர்கள், உரிமையும் நெருக்கமும் பெற்றிருந்தார்கள்.

ராஜீவ் காந்தி, பிரதமர் என்கிற முறையில்
உள் நாட்டிலும்  வெளிநாடுகளிலும்
சுற்றுப்பயணம் செல்கையில்
சிறு வயதினராக இருந்த ராகுல் காந்தியையும்,
ப்ரியங்கா காந்தியையும் க்வொட்டராச்சியின் வீட்டில்
அவர்களது பொறுப்பில் தான் விட்டு விட்டுச் செல்வது
வழக்கம்.

சில சமயம்  ராஜீவ் தனியே சுற்றுப்பயணம்
செல்கையில், சோனியாவும் க்வொட்டராச்சியின்
வீட்டிலேயே தங்குவது வழக்கம்.
அத்தகைய நேரங்களில்,
பிரதமர் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வந்த
எஸ்பிஜி  பிரிவினர்  க்வொட்டராச்சி வீட்டுக்கும்
பாதுகாப்பு அளிப்பது வழக்கமாக இருந்தது.

இரு குடும்பத்தாரிடையே இருந்த நெருக்கம்
ராஜீவின் மரணத்திற்கு பின்னரும் தொடர்ந்தது.
ராஜீவ் காலமானதற்கு பிறகு, க்வொட்டராச்சியின் மீது
போபர்ஸ் ஊழல் குறித்து மத்திய அரசின் நடவடிக்கைகள்
(வி.பி.சிங் ஆட்சியின் போது )
தீவிரம் அடைந்தபோது கூட இந்த நெருக்கம் தொடர்ந்தது.

க்வொட்டராச்சியின் மீது கைது உத்திரவு பிறப்பிப்பதற்கு
முதல் நாள் நள்ளிரவு  அவர் திடீரென்று நாட்டை விட்டு
வெளியேறி விட்டார்.

அந்த கால கட்டத்தில் க்வொட்டராச்சியின்
கார் டிரைவராகப் பணி புரிந்த சசிதரன் என்பவர்
கொடுத்துள்ள வாக்குமூலத்தில்
(அவரது கார் டைரியைப் பார்த்து
கொடுத்த தகவல் ) ராஜீவின் மறைவிற்கு பின்னரும் –
நாட்டை விட்டு திடீரென்று வெளியேறும் நாள் வரை
21 முறைகள் கொட்டொரொச்சி சோனியா காந்தியின்
வீட்டிற்கு சென்றுள்ளதாகக் கூறி இருக்கிறார்.

கொட்டொரொச்சி, எப்போதும் கார்  ஓட்ட
வர  வேண்டும் என்றாலும்
முன்கூட்டியே தகவல் அளிப்பவர்.
கடைசி நாளான – அன்றிரவு மட்டும்
முன் தகவல் அளிக்கவில்லை.
திடீரென்று கூப்பிட்டு
ஏர்போர்ட் போகச் சொன்னார்.
அவரிடம் ஒரே ஒரு
சூட்கேஸ்  மட்டுமே இருந்தது.
முகம் வெளிறி இருந்தது.
அவசர  வேலையாக வெளிநாடு செல்வதாகக்
கூறினார்.(அதற்குப் பின் மீண்டும் இந்தியாவிற்கு
வரவே இல்லை !)

———————————-

மேற்கண்ட வாக்குமூலங்களும்
உண்மையாகத் தான் இருக்க வேண்டும் !
சிபிஐ முன்னாள் டைரெக்டரே ஆமோதித்து
இருக்கிறாரே – (ஜோகிந்தர் சிங்கின்
தொலைக்காட்சி பேட்டியை
நானே  பார்த்தேன்!)

ஆனால் – நான் சொல்ல வருவது இதையும்  அல்ல …!

நாளை தொடர்வோமே !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராஜீவ் காந்தி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to கொட்டொரொச்சி கார் டிரைவர் மற்றும் சிபிஐ அதிகாரியின் வாக்குமூலங்கள் – (ஏன் இத்தனை மர்மங்கள் – 2)

  1. Prabhu Raja சொல்கிறார்:

    தங்களின் கட்டுரைகளை தொடர்ந்து படித்து வருகிறேன், மிகவும் வெளிப்படையாகவும் அதாரம் மிக்கதாகவும் உள்ளது, இன்றைய அரசியல் சூழ்நிலையில் தங்களின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, மிக்க நன்றி

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.