செத்துப் போவதற்கு உதவி !

செத்துப் போவதற்கு உதவி !

நீண்ட நாட்களாக ஒரு விஷயம் என் மனதில்
உறுத்திக்கொண்டே இருக்கிறது. நாளையோ,
எதிர்காலத்திலோ – எனக்கும்,
இதைப் படிக்கும் வேறு யாராவது ஒருவருக்கும் கூட
அந்த நிலை வரலாம் என்பதால் நான் என்
எண்ணத்தை இங்கு வெளிப்படையாகப் பதிவு செய்ய
விரும்புகிறேன்.

என்னைப் பொறுத்த வரை, நான்  நல்லபடியாக
இயங்கும் வரை – என் சுய தேவைகளை நானே
பூர்த்தி செய்துக் கொள்ளக்கூடிய நிலையில்
இருக்கும் வரை தான்
உயிருடன் இருக்க விரும்புகிறேன்.
அடுத்தவர் உதவி இன்றி என்னால் இயங்க இயலாது
என்கிற நிலை ஏற்படுமானால், நான் என் இயக்கத்தை
நிறுத்திக்கொள்ளவே விரும்புவேன்.

நீண்ட நாட்களாக என் மனதில் இருந்ததை
இப்போது எழுதத் தூண்டியது சில தினங்களுக்கு
முன் நடந்த ஒரு நிகழ்ச்சி.

நண்பர் அல்ல. ஆனால் எனக்குத் தெரிந்த
ஒருவர், எண்பது வயதைத் தாண்டியவர்.
முதுமையால் ஏற்பட்ட
தளர்ச்சி காரணமாக மிகவும் தள்ளாமையுடன்
காணப்படுவார்.
அவரது மனைவி, அவரை விட 5 வயது குறைந்தவர்.
கடந்த 4-5 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால்
அவதியுற்று வந்தார்.
கிடைக்கும் பென்ஷனை வைத்துக்கொண்டு இருவரும்
காலந்தள்ளிக் கொண்டிருந்தார்கள். அவர்களை
கவனித்துக் கொள்ளும் அளவிற்கு நெருங்கிய
சொந்தம் யாரும் இல்லை.

கடந்த 6 மாதங்களாக மனைவி படுத்த படுக்கையானார்.
அவர் மீண்டும் எழுந்து நடமாட முடியாத அளவிற்கு
குணப்படுத்த முடியாத நோய்.
திடீரென்று ஒரு தகவல் கிடைத்தது.
சென்று பார்த்தேன்.
வலியும் வேதனையும் தாங்க முடியாத
அந்த மூதாட்டி தன் வேதனையைப் பொறுக்க
முடியாமல், தான் இனி வாழ விரும்பவில்லை
என்றும் தனக்கு விஷம் கொடுத்து விடுதலை
கொடுக்கும்படியும் தன் கணவரிடம்  வேண்டி
இருக்கிறார்.

மனைவி படும் துயரை சகிக்க முடியாத
அந்த முதியவர், மனைவிக்கு அவர் விரும்பியபடியே
விஷம் கொடுத்து விட்டார்.
போலீசுக்கும் போன் செய்து அந்த தகவலைக்
சொல்லி விட்டு அவர்கள் வருகைக்காக அமைதியாகக்
காத்திருந்தார் !

என் இதயத்தை என்னென்னவோ செய்தது
இந்த நிகழ்வு. அந்த மூதாட்டிக்கு இதைத் தவிர
வேறு நல்ல நிவாரணம் கிடையாது – உண்மை.
ஆனால் – அவதிப்படும் மனைவிக்கு நிவாரணம்
கிடைக்க வேண்டும் என்பதற்காக செய்த செயலால்
அந்த முதியவர்
இனி படப்போகும் துன்பங்கள் ?
(“நான் கடவுள்” என்கிற திரைப்படத்தில் –
இயக்குநர் பாலா கிட்டத்தட்ட இது போன்ற
நிகழ்ச்சியை உருவாக்கி இருந்தார் )

கருணைக் கொலை (euthanasia) என்பதை
சட்டபூர்வமான நடவடிக்கையாக்க வேண்டும்
என்று  உலகில் பல பகுதிகளிலும்  மனித நேய
உணர்வாளர்கள் வற்புறுத்தி வருகிறார்கள்.

உலகில் இது வரை ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் –
அமெரிக்காவில் உள்ள ஒரேகான் மாகாணத்தில்
மட்டும் தான் கருணைக்கொலை சட்டபூர்வமாக்கப்
பட்டிருக்கிறது.

அனைத்து நாடுகளுக்கும், பல விஷயங்களில்
முன் மாதிரியாகத் திகழும் ஸ்விட்சர்லாந்து
நாட்டில் கருணைக்கொலையை சட்டபூர்வமாக்காமல்
ஒரு நோயாளி தன்னைத் தானே  சாகடித்துக்கொள்ள
உதவுவதை சட்டபூர்வமாக்கி இருக்கிறார்கள்.

அதாவது, சரியான மனோநிலையில் உள்ள,
குணப்படுத்த இயலாத நோயால் வாடும் ஒரு
நோயாளிக்கு, அவர் விரும்பினால், ஒரு
தகுதி வாய்ந்த மருத்துவர் அவர் சுலபமாகச்
சாவதற்குரிய வழியை பரிந்துரைக்கலாம்.
இதில்  சாவிற்குரிய மருந்தை நோயாளி
தன் கையாலேயே  உட்கொள்ள வேண்டும்.

ஐரோப்பாவில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் மட்டுமே
இந்த சட்டபூர்வமான தற்கொலை அனுமதிக்கப்
பட்டிருப்பதால், பல நாடுகளிலிருந்தும்
தீராத நோய் உடையவர்களுக்கு ஸ்விட்சர்லாந்தே
புகலிடமாகி விடுகிறது.

டெத் வித் டிக்னிடி ஆக்ட் –

இத்தகைய போக்கைத் தடுக்க, இங்கிலாந்து
நாடு இப்போது உதவி செய்யப்பட்ட சாவை
சட்டபூர்வமாக்கும் பணியைத் துவங்கி இருக்கிறது.

இங்கிலாந்து சட்ட மேல் சபை முன்னாள் தலைவர்
சார்லஸ்  பால்கனர் என்பவரது தலைமையில்,
ஒரு குழு இதற்கான பரிந்துரைகளை ஆராய்ந்து
பரிந்துரைக்க உருவாக்கப்பட்டிருக்கிறது.
2011 -ல் இங்கிலாந்து நாட்டில் இது
சட்டபூர்வமாக்கப்பட்டு விடும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

“கௌரவமாகச் சாக அனுமதி”(dignity in dying)
என்று ஒரு இயக்கம் இதற்காக மிகத்தீவிரமாக
ஆதரவைத் தேடி  பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது.

இப்போது சுவிஸ் நாட்டில் இருக்கும் முறைப்படி –
தான் மேற்கொண்டு வாழ விரும்பவில்லை என்றும்,
தான் சாவதற்கு சட்டபூர்வமாக உதவி செய்யும்படியும்,
15 நாட்கள் இடைவேளையில் இரண்டு முறை
நோயாளி டாக்டரை  கேட்டுக்கொள்ள வேண்டும்.
சொந்தமாக எழுதிக்கொடுக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட நபர் தீராத நோயால்(குணப்படுத்த
முடியாத நோயால் ) வேதனைப்படுபவராக
இருக்க வேண்டும்.

தீராத நோயால் வாடுபவர்களுக்கு விமோசனம் அளிக்கும்
வகையில், வலி இல்லாமல் சுலபமாக சாவை அளிக்கும்
இத்தகைய சட்டம் ஒன்று இந்தியாவிலும் வருவதற்கான
முயற்சிகளை  யாராவது துவக்கினால் தேவலை.

இது தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க
தேவையான பாதுகாப்பு முறைகளை யோசித்து,
நிபுணர்களின் உதவியுடன் ஒரு சட்டத்தை உருவாக்கலாம்.

முதல் படியாக – இத்தகைய கருத்தை மக்கள்
திறந்த மனதுடன் அணுகக்கூடிய இணக்கமானதொரு
சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

முயற்சியைத் துவக்கலாமா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசு, அழகு, ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், இரக்கம், ஓய்வு, கட்டுரை, சுதந்திரம், தமிழீழம், தமிழ், பூ வனம், பூமி, பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to செத்துப் போவதற்கு உதவி !

  1. metro boy சொல்கிறார்:

    I fully agree with your views.
    Any legislation in this regard would be ahead of time : with so much diparity among different sections of Indian society – education, economic level, social level, there is plenty of scope for its misuse.
    It better comes some day: may be in five/ten years from now.

  2. மகேஷ் சொல்கிறார்:

    மிக மிக நல்ல கருத்து. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவிக்கும் தவிப்பு இன்று கலந்துரையாடல். நமக்கு வரும் நிலை வெகு தூரத்தில் இல்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.