ஊர் ஊராகப் போகும் மந்திரிகள்…………………….

ஊர் ஊராகப் போகும் மந்திரிகள்…………………….

2ஜி அலைக்கற்றை ஊழல் (இல்லை  என்பது) குறித்துப் பேச
கலைஞர்  உத்திரவின்  பேரில் மந்திரிகள் அத்தனை
பேரும் ஊர் ஊராக அலைகிறார்கள்.
கூட்டம் போடுகிறார்கள்.
கூடுதல் வசீகரம் (special attraction ) –
மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், மானமிகு வீரமணி !!
கவிஞர் கனிமொழியின் தோழி கவிஞர்  சல்மா !

திருச்சியில் மூன்று நாட்கள் முன்னதாக ஒரு கூட்டம்
உறையூரில்  நடந்தது. போயிருந்தேன்.
நீதிமன்ற வளாகத்திலிருந்து உறையூர் வரை
ஒரு கிலோ மீட்டர்  தொலைவிற்கு குழல் விளக்குகள்,
தோரண அலங்காரங்கள் !!
கூட்டத்திற்கே குறைந்தது 5 லட்சம் செலவாகி இருக்கும்.
ஆறு மணிக்கு கூட்டம் என்றார்கள்.
நீண்ட நேரம் ஆகியும்  கூட்டம் வரவில்லை !
மேடையில் மது அருந்தியிருந்த, கரை வேட்டி கட்டியிருந்த,
ஒருவர் அயிட்டம் பாட்டு பாடிக்கொண்டே
ஆபாச  நடனம் (?) ஆடிக்கொண்டிருந்தார்.

பேச்சாளர்கள் –
திருவாளர்கள் துரைமுருகன், நேரு, ஜெகத்ரட்சகன்.
அவர்களால் முடிந்த வரை தலைவர் கட்டளையை
நிறைவேற்றினார்கள்.

ஆனால்  கேட்கத்தான் எதிரே  ஆளில்லை.
70 -80  பேர்களே  இருந்தார்கள்.

அவர்கள் வாதத்தின் சாரம் –
ராஜா தாழ்த்தப்பட்டவர் என்பதால்
பத்திரிகைகளும், வட இந்திய தொலைக்காட்சிகளும்
அவருக்கு எதிராக செய்யும் சதி இது.

திமுக அரசின் சாதனைகளைக் கண்டு மகிழ்ந்து
மக்கள் மீண்டும் இந்த அரசை தேர்ந்தெடுத்து விடப்
போகிறார்களே என்று பயந்த எதிர் கட்சிகள்
கிளப்பும்  இல்லாத பிரச்சினை இது.

இது ஊழல் என்று தணிக்கை குழுவே சொல்லவில்லை.
நஷ்டம் என்று தான் சொல்லியது !

ரூபாய் இருபதுக்கு அரிசியை வாங்கி கிலோ ஒரு ரூபாய்க்கு
தமிழக அரசு 19 ரூபாய் நஷ்டத்தில் போடுவது போல்(?)
மக்களுக்கு தொலை/செல் பேசிகள் மலிவாக
கிடைப்பதற்காக ராஜா மலிவு விலைக்கு
2ஜி ஒலிக்கற்றைகளை கொடுத்து செய்த சாதனை !!
———————————————————————————

அந்த மந்திரிகளுக்கும், அவர்களை ஊர் ஊராக அனுப்பிய
அவர்கள் தலைவருக்கும் ஒரு வேண்டுகோள்.
தயவு செய்து உங்கள் கூட்டங்களில் கீழ்க்கண்ட
விஷயங்களையும் விளக்கி பேசுங்களேன் !

(அதற்கு முன்னர் – பத்திரிகை நிருபர்களாகப் பணியாற்றும்
தமிழ் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
நீங்கள்  அரசியல்  தலைவர்களிடம் பேட்டி
காணும்போது பெரும்பாலும்  அவர்கள் சொல்வதை
மட்டும் குறித்துக்கொண்டு வந்து பிரசுரத்திற்கு அனுப்பி
விடுகிறீர்கள். அதில் உங்கள் சாமர்த்தியம் – திறமை –
ஆர்வம் எதுவுமே  தென்படுவதில்லை.
மாறாக எந்த தலைவரை பேட்டி எடுத்தாலும்,
பேட்டிக்கு  முன்னதாகவே  அவர்   பின்னணியை
நன்கு ஆராய்ந்து விட்டு (after sufficient home work )
துருவித் துருவி நல்ல ஆழமான, சம்பந்தப்பட்டவர்
தானாகச் சொல்லாத, சொல்ல விரும்பாத விஷயங்களையும்
வெளிக்கொண்டு வரும் வகையில் கேள்விகளையும்
முன்னதாக யோசித்து தயாரித்துக்கொண்டு  செல்ல வேண்டும்.
மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியமுள்ள விஷயங்களை
வெளிக்கொண்டு வருவதில்  தான் உங்கள்
சாமர்த்தியம் இருக்கிறது. பேட்டி கொடுப்பவர் பதில்
சொல்ல மறுத்தால் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டாம்.
பதில் சொல்ல மறுக்கிறார் என்பதே ஒரு வகை பதில் தான்.
அதையும் அப்படியே எழுதுங்கள்.
மக்களுக்கு இது புரியும்.
தமிழ் நாட்டு  அரசியலில் –
போலிகளையும், ஊழல் பேர்வழிகளையும், அம்பலப்படுத்த
வேண்டிய மகத்தான பணி உங்களுடையது.)

இப்போது பொதுக்கூட்டம் போடும் மந்திரிகளுக்கான
கேள்விகள் –

(முதலாவதாக 2ஜி க்கு தொடர்பில்லாத ஒரு கேள்வி –
நீங்கள் இந்த ஊருக்கு வந்தது அரசாங்க செலவிலா இல்லை
சொந்த செலவிலா-இல்லை கட்சி செலவிலா ?
இந்த செலவிற்கு  எங்காவது கணக்கு காட்டப்படுகிறதா ?
அரசின் செலவில் வந்திருந்தால் – இது சரியா ?
சொந்த செலவில் என்றால் – அந்த பணம் நீங்கள்
உழைத்து சம்பாதித்ததா ?
கட்சி செலவில் என்றால் – தேர்தல் கமிஷனுக்கு
ஆண்டுதோறும் கொடுக்க வேண்டிய  ரிப்போர்ட்டில்
இது சேர்க்கப்படுகிறதா ?)

1)எதிர்கட்சிகளுக்கு தான் காட்டம். சரி.
கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி
ஏன் வாய் மூடி இருக்கிறது ?
முக்கியமாக  ப.சி.ஏன் மௌனம் சாதிக்கிறார் ?
ராஜாவை ஆதரித்து ப.சிதம்பரத்தை ஒரு
வார்த்தையாவது உங்களால் சொல்ல வைக்க முடியுமா ?

2) மத்திய மந்திரி ஆனவுடன் ஏன் ராஜா அவ்வளவு
பினாமி கம்பெனிகளை தன் குடும்பத்தினர் பெயரிலும்,
நண்பர்கள் பெயரிலும் உருவாக்கினார் ?

3) முக்கால்வாசி கம்பெனிகளில் அவரது மனைவி,
சகோதரர் போன்றவர்கள் பங்குதாரர்களாக
முதலில் ஆனது எப்படி ? பிறகு விலகியது எதனால் ?

4) சுய நிதி கல்லூரிகளை ஆரம்பிக்கும் அளவிற்கும்,
அதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை
பெரம்பலூரை ஒட்டி வாங்கவும் ராஜா குடும்பத்தினருக்கு
திடீரென்று நிதி வசதி  வந்தது எப்படி ?

5) பத்து வருடங்களுக்கு முன்னர் அவருக்கு வருமான வரி
கட்டும் அளவிற்காவது வருமானம் இருந்ததா ?

6) எந்த வருடத்திலிருந்து ராஜா வருமான வரி கட்டுகிறார் ?

7) பெரம்பலூர், ஊட்டி,சென்னை போன்ற ஊர்களில்
வசதியான பங்களாக்களை வாங்கும் அளவிற்கு  அவருக்கு
பணவசதி ஏற்பட்டது எப்படி ?
எம்.பி.சம்பளத்திலேயே அவ்வளவு மிச்சம்
பிடிக்க முடிந்ததா ?

8) அவரது பினாமி நண்பர் சாதிக் பாட்சாவின்
க்ரீன் ஹவுஸ் பில்டர்ஸ் நிறுவனம் குறுகிய காலமான
மூன்று வருடங்களில் 600 கோடி ரூபாய் பண்ணியது எப்படி ?

9) 2ஜி அலைக்கற்றை விண்ணப்பம் பெறும் கடைசி
தேதியை  செப்டெம்பர் 30 லிருந்து திடீரென்று –
“இப்படம்  இன்றே கடைசி”என்று டூரிங்க் கொட்டகைகளில்
போடுவது போல் 25 என்று  மாற்றி 25ந் தேதி அன்றே-
ராஜா உத்திரவை மாற்றிப் போட்டது யாருக்காக ?

10)அதெப்படி மதியம் 2.45 மணிக்கு ஒரு உத்திரவு
போடுகிறீர்கள்.  3.30 மணிக்குள் குறிப்பிட்ட தொகைக்கு
வங்கி டிடி கொடுக்க வேண்டும் என்று  ?
45 நிமிடங்களுக்குள் இதை எப்படிச் செய்ய முடியும் ?

11) அதெப்படி  சில  கம்பெனிகள் மட்டும்
சொல்லி  வைத்தது போல்
ஏற்கெனவே சரியாக அதே தொகைக்கு
டிமாண்ட் டிராப்டுடன்
தயாராக இருந்து உடனே கட்டின ?
சில டிடி க்கள்  மும்பையிலிருந்து ஏற்கெனவே
அதே தொகைக்கு  வாங்கி  வைக்கப்பட்டு
இருந்தது எப்படி ? இவை எப்படி ஏற்கப்பட்டன ?

12) ரூபாய் 1600 கோடிக்கு  லைசென்ஸ்  வாங்கிய
நிறுவனங்கள்  உடனே அதை  வேறு கம்பெனிக்கு
6500 கோடிக்கு  விற்று லாபம்  சம்பாதித்தது எப்படி ?
இது எப்படி அனுமதிக்கப்பட்டது ?
சினிமா தியேட்டர்களில் சிலர் டிக்கெட் வாங்கி
பிளாக் மார்க்கெட்டில் அதிக  விலைக்கு விற்பதற்கும்
இதற்கும் என்ன வித்தியாசம் ?
இதுவும் எதிர்க்கட்சிகள்  சதியா ?

13) நீரா ராடியாவும், ரத்தன் டாடாவும்   சென்னையில்
கனிமொழி/ராஜாத்தி அம்மாளின் சியடி  காலனி
வீட்டிற்கு வந்து விருந்து சாப்பிட்டது எப்படி ?
இருவரும் பள்ளித் தோழர்களோ ?
நீண்ட நாள் பழக்கமோ ?

14) அண்ணாசாலையில்  ஏதோ டாடா வோல்டாஸ்
நிறுவனம் என்கிறார்களே ? அது என்ன ? அதைப்பற்றி
கொஞ்சம்  விளக்க முடியுமா ?

15)  வாடகையில் பாதி கட்ட வேண்டும் என்றார்களே –
அது என்ன ? விளக்குங்களேன் !

16) ராஜாத்தி அம்மளின் காசாளர்  சரவணன் என்பவரை
இந்த சம்பவம் வெளிவந்ததிலிருந்து காணவில்லை
என்கிறார்களே – அவர் எங்கே போனார் ?
அவருக்கு என்ன ஆயிற்று சொல்ல முடியுமா ?

17) அது யார் விற்பனை பத்திரத்தில் கையெழுத்துள்ள
மலேசியா ஷன்முகனாதன் ?

18) ஏதோ 250 கோடி ரூபாய் சொத்து 25 கோடி ரூபாய்க்கு
கை மாறியது என்றார்களே – அது விவரம் என்ன ?

19) இந்த 25 கோடி எப்படி செலுத்தப்பட்டிருக்கிறது ?
– இந்தியப்பணமாகவா
அல்லது அந்நிய செலாவணியாகவா ?

20)  கடைசி  கடைசியாக  ஒரே ஒரு கேள்வி –
அது ஏன் கனிமொழி நீரா ராடியாவிடம் அவ்வளவு
மன்றாடுகின்றார் – ராஜாவுக்கு எப்படியாவது
தொலை தொடர்பு துறையை பெற்றுக்
கொடுக்க வேண்டும் என்று ?
கனிமொழிக்கு இதில் ஏன் அவ்வளவு ஆர்வம் ?
வேறு யாருக்கும்   இல்லாத ஆர்வம் ?

(பத்திரிக்கை  நண்பர்களே –
இதில்  பாதி கேள்விக்காவது விடை
வாங்கப் பாருங்களேன் ! )

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சிதம்பரம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராஜாத்தி அம்மையார், வருமான வரி, ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஊர் ஊராகப் போகும் மந்திரிகள்…………………….

 1. Ganpat சொல்கிறார்:

  Dear Kaviri mainthan,
  Wishing you happy & prosperous new year,
  Regards,

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி.
   அனைவருக்கும் புத்தாண்டு இனிதே
   அமைய உளமார்ந்த வாழ்த்துக்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.