பெரியாரை ஏன் ஏற்க மறுக்கிறார் கலைஞர் கருணாநிதி ?

பெரியாரை ஏன் ஏற்க மறுக்கிறார்
கலைஞர் கருணாநிதி ?

ஒரு மாதத்திற்கு முன்பே
அரைகுறையாக இந்த இடுகையை எழுதி
வைத்திருந்தேன்.
முடித்து வெளியிட வேண்டும் என்று
நினைத்திருந்த சமயம் -சுடச்சுட நிறைய விஷயங்கள்
கிடைத்ததால்,  தள்ளிப் போய்க் கொண்டே
இருந்தது.  இப்போதும் இதை எழுத
முனைந்ததற்கு காரணம்  இதை அடுத்து
எழுத நினைத்திருக்கும் இன்னொரு தலைப்பு.

இதை எழுதி விட்டு – அதை எழுதினால் தான்
பொருத்தமாக இருக்கும் என்பதால் இப்பொழுது இது !!

அண்மையில் சென்னை மாமல்லபுரம் அருகில்
பரதர் இளங்கோ ஆசிய கலாசார மையத்தின்
கட்டுமானப் பணிகள் மற்றும் சிற்பங்கள் செதுக்கும்
பணிகளை  துவக்கி வைத்து பேசிய முதல்வர்
கருணாநிதி அவர்கள் கண்ணகி தமிழர் கலாச்சாரத்தின்
அடையாளம் என்றும் அந்த பெருமையை தான்
கடுகளவும் விட்டுக் கொடுக்க முடியாது என்றும் பேசினார்.
அவரது  உரையிலிருந்து –

————————————————————————————————————————

”  இந்த இடத்திலே இன்றைக்கு இந்தக் கலாச்சார
மையத்தை நிறுவுகின்ற பணியை நான் உங்களுக்கு
விளக்கிச் சொல்ல வேண்டும்.
என்னுடைய கொள்கை உறுதியைப் பற்றி
உங்களுக்கெல்லாம் தெரியும்.(!)

இங்கே பேசியவர்கள் குறிப்பாக கனிமொழி
குறிப்பிட்டதைப்போல, தமிழர்களுடைய உரிமையை,(?)

தமிழர்களுடைய கலாச்சாரப் பெருமையை (!)

கடுகளவும் விட்டுக்கொடுக்க என்றைக்கும் நான் தயாராக
இருக்க மாட்டேன் என்பதை நீங்கள் எல்லாம்
மிக நன்றாக அறிவீர்கள்.(!!)

அந்த வகையிலே இதே இடத்தில் இப்படியொரு
கலாச்சார மையத்தை அமைப்பதற்கு பத்மா அவர்கள்
முயற்சி எடுத்து, கடந்த ஆட்சியிலே அந்த முயற்சிக்கு
வெற்றி கிடைத்து, பரத முனிவர் நாட்டியாலயம்
என்றோ அல்லது கலாச்சார மையம் என்றோ
பெயரோடு இது விளங்குவதாக இருந்தது.

எனக்கு இந்தக் கலாச்சார மையத்துக்கு இளங்கோ
அடிகளுடைய பெயர் அமைய வேண்டும் என்று விருப்பம்.

பத்மாவிற்கு பரத முனிவர் பெயர் மீது பாசம்.

எனவே இரண்டையும் இணைத்து பரதர் இளங்கோ
கலாச்சார மையம் என்று வைத்துள்ளோம்” என்று
பேசி இருக்கிறார்.

—————————————————————————————————————————

அதாவது  பத்மா சுப்ரமணியம் தாம் விரும்பி,
அதற்காகப் பாடுபட்டு,  அமைக்க விருக்கும்
மையத்திற்கு அவர் விரும்பும் பெயரை வைக்க
விடாமல், தமிழ் கலாச்சாரத்தைக் காப்பாற்றியே தீருவது
என்கிற தன் கொள்கைப்படி, இளங்கோவடிகள்
பெயரையும் சேர்த்தே “பரதர் இளங்கோ கலாச்சார மையம்”
என்று பெயர் வைக்க வைத்து விட்டாராம்.
இதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தை தான் காப்பாற்றி
விட்டதாக வேறு பெருமை கொள்கிறார்.

இதில் இரண்டு கேள்விகள் எழுகின்றன –

1)பத்மா துவங்க விருக்கும் மையத்திற்கு கலைஞர்
தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, மையத்தை
உருவாக்குபவரின் விருப்பத்திற்கு மாறாக
பெயர் மாற்றம் செய்திருக்கிறார். அதில் பெருமை
வேறு கொள்கிறார்.  கலைஞருக்கு  கண்ணகி மீதும்

இளங்கோவடிகள் மீதும் அவ்வளவு ஆர்வம் இருந்தால்,
தானே ஒரு மையத்தை உருவாக்கி அதற்கு
இளங்கோவடிகள் பெயரையோ, கண்ணகி பெயரையோ
வைப்பது தான் நியாயமாக இருக்கும்.

(அவரைக் குறை சொல்லிப்பயன் இல்லை என்று
தோன்றுகிற்து.  அடுத்தவர் பெற்ற பிள்ளைகளுக்கு
தன் விருப்பம் போல் பெயர் வைப்பது தானே
அரசியல்வாதிகளின் முதல் இலக்கணம் ! )

2)அடுத்ததாக ஒரு அடிப்படைக் கேள்வி –
எதை முன்னிருத்தி இவர் தமிழ் கலாச்சாரம் என்கிறார் ?

இளங்கோவடிகளின்  கண்ணகி கதையை எந்த ஒரு
பகுத்தறிவாளராவது ஏற்றுக் கொள்ள முடியுமா ?

பெண்ணடிமைத்தனத்தையும், மூட நம்பிக்கைகளையும்
பெருமைப்படுத்தி பாடும் சிலப்பதிகாரம்  கூறுவது தான்
தமிழர் கலாச்சாரமா ?

கற்புக்கரசி என்பதற்கு உரிய இலக்கணம் என்ன ?
எதைக் கொண்டு கண்ணகியை  கற்புக்கரசி என்கிறார்கள் ?

சிலப்பதிகாரம், அது எழுதப்பட்ட காலத்தில்(கி.பி.
இரண்டாம் நூற்றாண்டு ) நிலவிய தமிழர்
வாழ்க்கையை முறைகளைப்பற்றிச் சொல்கிறது.

அப்போதே தமிழரிடையே  ஜாதிகள் இருந்தது
தெரிய வருகிறது.

சைவ, வைணவ வழிபாட்டு முறைகளும்,
திருமண நிகழ்வுகள் – சடங்குகள் பற்றியும் தெரிய
வருகிறது.அப்போதே அந்தணர்கள் இருந்ததும்,
அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு
வந்ததும் எழுதப்பட்டிருக்கிறது.

முக்கியமாக சிலப்பதிகாரம் கூற வருவது என்ன ?
அது ஒரு கதையா அல்லது உண்மையில்
நடந்த நிகழ்வா ?
கற்பனைக் கதை என்றாலும் சரி –
நடந்த சரித்திரம் என்றாலும் சரி –
ஏற்க முடியாத, பாராட்ட முடியாத,
பிற்போக்குத்தனமான
பாத்திரப்படைப்புகள்,
நம்ப முடியாத நிகழ்வுகள்  –
இதில் எவற்றைப் பாராட்ட ?
எதற்காகப்  பாராட்ட ?

முதலாவதாக –
மூலக்கருத்து –

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்
(எமனை நம்புகிறாரா கலைஞர் ?)

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
(கதையின் இறுதியில் வானத்தில் இருந்து
தேவர்கள் வந்து கண்ணகியை அழைத்துப்
போனார்களாம் !)

ஊழ்வினை உருத்து வந்து உருட்டும் என்பதும் ?
(ஊழ்வினையை – மறுபிறப்பை கலைஞர்
நம்புகின்றாரா ?)

இந்த மூன்று கருத்துக்களுமே  பகுத்தறிவாளர்கள்
ஏற்றுக் கொள்ளத்தக்கதா ?  இவற்றை
கலைஞர் ஏற்று, பாராட்டி, போற்றுவது எப்படி ?

கண்ணகியின் பாத்திரம் – எந்த விதத்தில்
மெச்சத்தகுந்தது ?

கட்டிய மனைவியை விட்டு பிரிந்து –
வேறோர் பெண்ணுடன் சில காலம் வாழ்ந்து விட்டு,
அவள் கசந்தவுடன் மீண்டும் வரும் கணவனை
ஏற்றுக் கொள்ளும் பெண் – ஒரு
கையாலாகாத பெண்ணாகக் கருதப்படுவாளே தவிர
பத்தினி என்று எப்படி போற்றப்படுவாள் ?

குற்றமற்ற கணவன் கோவலனுக்கு அநியாயமாக
தண்டனை கொடுத்த மன்னனிடம் சீறி எழுகிறாள்.
அது அவள் தைரியத்தைக் காட்டுகிறது.
அதற்காகப் பாராட்டலாம்.

ஆனால் பின் என்ன செய்கிறாள் ?
இளங்கோவடிகளின் கூற்றுப்படி –
தன் வலது கையால் இடது மார்பை கிள்ளி
மதுரை நகர் மீது எறிந்து, மதுரை நகரை
எரி  என்று உத்திரவிடுகிறாள்.  மதுரையும்
அவ்வாறே எரிகிறது.

கிள்ளி எறியக்கூடிய வகையிலா அமைந்திருக்கிறது
பெண்களின் மார்பகம் ?
இல்லை யாராவது மார்பகத்தைக்கிள்ளி எறிந்து
எரி என்றால், அது எதையும் எரித்து விடுமா ?

அரசன் நெடுஞ்செழியன் செய்த குற்றத்திற்காக
மதுரை நகரையே அழிக்கும் செயல் எந்தவிதத்தில்
பாராட்டத்தக்கது ? இது நம்பத்தக்கதா ?

இறுதியில் வானவர்கள் வந்து கண்ணகியை
அழைத்துப்போனார்களாம் !

சரி நடந்த நிகழ்வல்ல –
கற்பனைக் கதை தான்  என்று சொன்னாலும்,
கண்ணகியின் பாத்திரம் எந்த விதத்திலும்
ஏற்கத் தகுந்ததும் அல்ல –
அவள்  செயல்  போற்றத்தக்கதுமல்ல.

இந்த இடுகையை எழுதும்போதே  பெரியார் அவர்கள்
கண்ணகியைப் பற்றியும் இளங்கோவடிகளைப்பற்றியும்
சொல்லி இருந்ததை முன்பு படித்தது
ஓரளவு நினைவுக்கு வந்தது.

இருந்தாலும் நாம் எழுதுவதை எழுதி விட்டு,
பிறகு  அது  கிடைக்கிறதா என்று தேடுவோம் என்று,
முதலில்  எனக்குத் தோன்றியதை எழுதினேன்.

பிறகு தேடியதில், பெரியாரின்
எழுத்துக்களே  கிடைத்தன.

பெரியாரின் திட்டுகள் பிரசித்தி பெற்றவை.
அவரது கொள்கைகளையும்,
கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களும்
கூட ரசித்துப் படிக்கலாம்.

இடுகை  நீளமாகி விட்டது –
பெரியாரின்  வசவை  நாளைக்கு
வாங்கிகொள்வோமே !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலை நிகழ்ச்சி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.