9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் – கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன் என்ன தொடர்பு ?

9 வருடத்தில் 900 கோடி பண்ணிய நீரா ராடியா –
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தந்த வாக்குமூலம் –
கனிமொழி,பூங்கோதை,ராஜாவிற்கு இவருடன்
என்ன தொடர்பு ?


13ந்தேதி உச்ச நீதி மன்றத்தில் பிரமாண பத்திரம்
தாக்கல் செய்த மத்திய அரசு நீரா ராடியாவின்
தொலைபேசி உரையாடல்கள் மே 2009 -ல்
ஏன் ஒட்டுக்கேட்கப்பட்டது என்பதற்கான
விளக்கங்களை அளித்துள்ளது.

9ஆண்டுகளில் 900 கோடி ரூபாய் அளவிற்கு
நீரா ராடியா பணம் சேர்த்திருப்பதாகவும்,
அந்நிய நாடுகள் சிலவற்றிற்கு
அவர் உளவாளியாக பணி புரிவதாகவும்,
இந்திய தேசத்தின்
இறையாண்மைக்கு எதிரான செயல்களில்
ஈடுபடுவதாகவும் –
நவம்பர் 16, 2007 -ல்
நிதியமைச்சருக்கு ஒரு புகார் வந்ததாகவும்
அதையொட்டியே அவரது 14 தொலைபேசிகளையும்
ஒட்டுக்கேட்கவும், ரகசியமாகப் பதிவு செய்யவும்
மத்திய அரசு ஒப்புதல் கொடுத்ததாகவும்
தெரிவித்துள்ளது.

அவரது அனைத்து பதிவு செய்யப்பட்ட
உரையாடல்களும்
உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு
அதன் பாதுகாப்பில் உள்ளது.

இந்த பெண்மணியின்  உரையாடல்கள்
முழுதும் வெளியானது -திமுக விற்கு
மட்டும் அல்லாமல்,  மத்திய அரசுக்கும்,
காங்கிரஸ் கட்சிக்கும்
பெருத்த சங்கடத்தை உண்டு பண்ணி உள்ளது.

பிரதம மந்திரியும், காங்கிரஸ் தலைமையும்
எடுக்கும் முடிவுகளில் இந்த பெண்மணி சர்வசகஜமாக
தலையிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

யார் யார் மத்திய அமைச்சராக பதவி பெறவேண்டும்
என்பதிலிருந்து, யார் யாருக்கு எந்த எந்த அமைச்சகம்
என்பது வரை அனைத்தையும் இந்த அரசியல்
அதிகாரத் தரகர்  கையாண்டிருப்பது
வெட்ட வெளிச்சமாக வெளியாகி உள்ளது.

இத்தகைய  பெண்மணி ஒருவரிடம் –
தமிழ் நாட்டின் ஆளும் கட்சியைச் சேர்ந்த
கனிமொழி, ராஜா ஆகியோர்  வைத்திருந்த தொடர்புகள்
ஆச்சரியத்தையும், ஆத்திரத்தையும் கிளப்பி உள்ளன.


இவற்றில் முதல் தவணையாக சுமார்
800 பதிவுகளை
15 நாட்களுக்கு முன்னர் ஓப்பன் மற்றும்
அவுட்லுக் பத்திரிகைகள் வெளியிட்டு
பெரும் பரபரப்பை  ஏற்படுத்தின.
அது  ராஜாவின் ராஜினாமா வரை சென்றது.

இப்போது இரண்டாவது தவணையில் அவுட்லுக்
பத்திரிகை இன்னும் சில உரையாடல்களின்
விவரங்களை  வெளியிட்டுள்ளது.
தமிழ் நாட்டைப் பொறுத்த வரையில்
கனிமொழியின் தோழி அமைச்சர்
பூங்கோதையின்  பேச்சு இரண்டாவது தவணையில்
வெளியாகி உள்ளது.

இரண்டாவது வெளியீட்டில் சுவாரஸ்யமான  சில –

கனிமொழி அமைச்சர் பதவி பெறுவது பற்றி
ஒரு சமயத்தில் நீரா கூறுகிறார் –
இன்னும் வாய்ப்பு இருக்கிறது.
கனிமொழியின் தாயார் (ராஜாத்தி அம்மாள்)
ஜோதிடத்தை நம்புவதையும், பிரார்த்தனையையும்
தொடர வேண்டும். அது நல்ல விளைவுகளைக்
கொண்டு வரலாம்.

———————————
கடந்த காலத்தில் கூறப்பட்ட லஞ்சப் புகார்கள்
காரணமாக டி.ஆர். பாலுவை பிரதமருக்குப்
பிடிக்கவில்லை.
எனவே அவருக்கு வாய்ப்பு மிகக் குறைவு.

——————————-

தயாநிதி மாறனை காங்கிரஸ் கட்சிக்கு
பிடித்திருக்கிறது. எனவே அவர் அமைச்சர்
ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்.


ஆனால் தொலை தொடர்பு அமைச்சகம்
தயாநிதி மாறனுக்கு கிடைக்காமல் இருக்கவும்,
ராஜாவுக்கு அந்த அமைச்சகம் கிடைக்கவும்
தகுந்த விதத்தில் காங்கிரஸ் தலைமையிடம்
தன்னால் இயன்ற அனைத்தையும்
நீரா ராடியா  செய்வார்.

—————————-

கருணாநிதி இது விஷயத்தில் மிகக் குழப்பமாக
இருக்கிறார். தற்கொலை செய்து கொள்ளப் போவதாக
பயமுறுத்தும் மகள்(கனிமொழி ?) ஒரு பக்கம்;
இதைச்செய்தே தீர வேண்டும் என்று வற்புறுத்தும் மனைவி
(தயாளு அம்மாள் ?) ஒரு பக்கம். எந்தப் பக்கம்
போவதென்று தெரியாமல் தவிக்கிறார்.

——————————-

தயாநிதி மூலமாக காங்கிரஸ்
தலைமை கூறுவது அவரிடம் சரியாகப் போய்ச்
சேருவதில்லை.

காங்கிரஸ்  தலைமை நேரடியாக கனிமொழி மூலம்
கலைஞரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
அது ஒன்று தான் சிக்கல்களைத் தீர்க்க உதவும்.

——————————–
பூங்கோதை அழகிரியைப் பற்றிப் பேசும்போது-
அடாவடி அரசியல்வாதி என்கிறார்.

நீரா ராடியா அழகிரிக்கு மத்திய அமைச்சர்
பதவி கிடைப்பது உறுதி என்றும்
ஆனால் அவரால் டில்லியில் அதிக நாள்
தாக்குப் பிடித்து இருக்க முடியாது என்றும் கூறுகிறார்.
அழகிரியுடன்  நல்ல முறையில் தோழமையை
வளர்த்துக் கொள்வது தான் கனிமொழிக்கு நல்லது
என்றும் கூறுகிறார்.

————————————-

முன்னதாக டி.ஆர். பாலு விடமிருந்த
தரைவழி போக்குவரத்து –  வரும்படி அதிகம்
தரும் அமைச்சகம்.
இந்த முறை அது கமல்நாத் திற்கு  போகிறது.
அவர் பங்கு 15% –
சர்வ சகஜமாகப் போய் விடும்.
அவரைப் பொருத்த வரை
இந்த தரைவழி போக்குவரத்து துறை ஒரு ஏடிஎம் !
அதாவது பணம் காய்ச்சி மரம் –
நினைத்த போதெல்லாம் பணம் பண்ணலாம் !

————————-

மான்டெக் சிங் அலுவாலியா (திட்டக்குழு
துணைத்தலைவர் ) நிதி அமைச்சகத்திற்கு
குறி வைக்கிறார். ஆனால் பிரனாப் முகர்ஜி
இருக்கும் வரை அது அவருக்கு கிடைக்காது.
ராஜ்ய சபா உறுப்பினர் ஆக அவர் முயற்சிப்பதே
நல்லது.

——————————–

நாட்டின் சர்வ சக்தி மிகுந்த இடங்களில்
இந்த நீரா ராடியா சர்வ சகஜமாகப் போய் வருவதும்,
எவரிடம் வேண்டுமானாலும், எதைப்பற்றி
வேண்டுமானாலும் பேசும் வாய்ப்பை
அவர் உருவாக்கி வைத்திருப்பதும் –
பிரமிப்பைத் தருகிறது.

தொழில் அதிபர்கள்  ஆனாலும் சரி –
அரசியல்வாதிகள் ஆனாலும்  சரி –
டில்லி தொலைக்காட்சி அரசியல்-செய்தி
நிகழ்ச்சி தயாரிப்பாளர்களானாலும் சரி
இவரிடம் அப்படியே  வழிகிறார்கள் !
இவர் சொல்வதை எல்லாம் கேட்கிறார்கள்.

ஏன் ? எப்படி ?
அவர் அவர் வேண்டுவதைக் கொடுத்து –
சலுகைகளைப் பெற வேண்டிய விதத்தில் பெற்று  –
இவருக்கு வேண்டியதை சாதித்துக் கொள்கிறார் !

ஒரே சமயத்தில் பல நிறுவனங்களுக்காக
பணி  புரிகிறார் !
கீழ்க்கண்ட 4 நிறுவனங்களுக்காக
ராஜாவிடம்  பல சலுகைகளைப் பெற்றுக்
கொடுத்திருக்கிறார் –

ஸ்வான் டெலிகாம்

ஏர்செல்

யுனிடெக் வயர்லெஸ்

டாடாகாம்

சட்ட விரோதமான சலுகைகளை  ராஜா
சும்மா  கொடுப்பாரா ?
சலுகைகளை அள்ளிக் கொடுத்து -அதற்கான பலன்களைப்
பெற்றுக் கொண்டதால் தான்
ராஜா இப்போது பம்மிப் பதுங்கிக் கொண்டிருக்கிறார் !

——————————-
பின் குறிப்பு – இத்தனை விவரங்கள் பத்திரிகைகளிலும்,
தொலைக்காட்சிகளிலும் – வெளிவந்த பின்னரும்
இதில் சம்பந்தப்பட்ட  நீரா ராடியா, கனிமொழி, ராஜா
ஆகிய யாருமே இவற்றை  இது வரை மறுக்கவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.