டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில்
ப.சி. அவர்கள் பேச்சு
சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்ந்த
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில்
பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்
கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார் –
அதையொட்டி நாமும் சில கருத்துக்களை
முன்வைக்க விரும்புகிறோம்.
1) தீண்டாமை ஒழிந்து விட்டதாக மகாத்மா காந்தி
சொன்னபோது தீண்டாமை ஒழியவில்லை என்று
டாக்டர் அம்பேத்கர் அழுத்தந்திருத்தமாகச் சொன்னார்.
இன்னும் கூட தீண்டாமை ஒழியவில்லை.
இரட்டை டம்ளர் முறை இன்னும் வழக்கத்தில்
இருக்கிறது.இதை எதிர்த்து மக்கள் போராட வேண்டும்.
நம் கருத்து -இதைச் சொல்ல காங்கிரஸ் கட்சி
வெட்கப்பட வேண்டாமா ? சுதந்திரம் அடைந்து
63 ஆண்டுகள் ஆகியும், இதில் 55 ஆண்டுகளுக்கு
மேல் ஆட்சியில் இருந்தும் காங்கிரஸ் கட்சியால்
இன்னும் இரட்டை டம்ளர் முறையை கூட ஒழிக்க
முடியவில்லை என்றால் என்ன அர்த்தம் ?
மக்கள் தான் போராட வேண்டும் என்றால் பிறகு
அரசு எதற்கு ? அதிகாரம் எதற்கு ?
அதிகாரிகள் எதற்கு ?அமைச்சர்கள் தான் எதற்கு ?
2)காங்கிரஸ் கட்சியில் நேற்றைய தலைமுறைக்கு
தலைவர்களை அடையாளம் காட்டியதுபோல
இன்றைய தலைமுறைக்கு சோனியாகாந்தியை
அடையாளம் காட்டியதுபோல அடுத்த தலைமுறைக்கு
ராகுல் காந்தியை அடையாளம் காட்டியுள்ளோம்.
நம் கருத்து – ஆமாம். நேற்று ஜவஹர்லால் நேரு,
அதற்குப் பின் அவர் மகள் இந்திரா
அதற்கு பிறகு அவர் மகன் ராஜீவ் காந்தி –
அதற்கு பிறகு அவர் மனைவி சோனியா காந்தி –
அவருக்குப் பிறகு அவர் மகன் ராகுல் காந்தி –
பரம்பரை வாரிசுகளை அடையாளம் வேறு
காட்ட வேண்டுமா ?
3)கட்சியில் மட்டும் அல்ல ஆட்சியிலும்
இளைஞர்களுக்கு பொறுப்புகள் வழங்கும் காலம்
வந்துவிட்டது. இந்த கருத்தை நான் வலியுறுத்தி
சொல்ல விரும்புகிறேன்.
நம் கருத்து -கார்த்தி சிதம்பரத்தை அருகில்
வைத்துக் கொண்டு
இதைச் சொன்னால் என்ன அர்த்தம் என்று
மக்களுக்கு நன்றாகவே புரிகிறது.
4)காங்கிரஸ் கட்சி ஒன்றுதான் கக்கனை உள்துறை
அமைச்சராக ஆக்கியது. இந்தியாவில் எந்த
கட்சியாவது தலித் மக்களை உள்துறை
அமைச்சராக ஆக்கி இருக்கிறதா?
ந.க -பாபு ஜகஜீவன்ராமை பிரதமர் ஆக விடாமல்
தடுத்தது எந்த கட்சி என்று சொல்ல முடியுமா ?
5)தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பை
ஏற்கக்கூடிய வாய்ப்பு வரும் நேரத்திலே தலித்
ஒருவர் உள்துறை அமைச்சராக வருவார்.
தலித் ஒருவர் நிதி அமைச்சராக வருவார்.
தலித் ஒருவர் தமிழ்நாட்டிலே முதல் அமைச்சராகவும்
வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ந.க -இந்த உறுதி மொழி எதுவுமே வேண்டாம்.
காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில்
தனியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்
அவல நிலை நிச்சயம் ஏற்படாது.
ஒரு வேளை தப்பித் தவறி எதிர்காலத்தில்
கூட்டணி ஆட்சி ஏற்பட்டு விட்டால் –
கார்த்தி சிதம்பரம் தமிழ் நாட்டு உள்துறை
அமைச்சராகவோ, நிதி அமைச்சராகவோ,
வர மாட்டார் என்று மட்டும்
உறுதி அளித்தால் போதுமானது.
(முதல் அமைச்சர் காத்திருப்பு பட்டியலில்
ஏற்கெனவே நிறைய பேர் இருக்கிறார்கள் –
எனவே அந்த வாய்ப்பு நிச்சயமாக இல்லை )
பின் குறிப்பு – அதென்ன 2 ஜி ஸ்பெக்ட்ரம் பற்றி
யார் யாரெல்லாமோ பேசுகிறார்கள் – அய்யா
விஷயம் தெரிந்தவர் – பேச மாட்டேன் என்கிறாரே !
(ஒரு வேளை விஷயம் தெரிந்ததால் தான் பேச மாட்டேன் என்கிறாரோ ? ! )