வழக்கு முடியும் வரை ராஜா, கனிமொழி சொத்துக்களை முடக்கி வைக்க முடியுமா ?

வழக்கு முடியும் வரை ராஜா, கனிமொழி
சொத்துக்களை முடக்கி வைக்க முடியுமா ?

இந்த விவகாரத்தை எப்படி எடுத்துக்கொள்வது –
எப்படி விளக்குவது என்றே புரியவில்லை.

என்னுடைய இடுகைகளைப் படிக்கும் ஒரு பெண் –
இல்லத்தரசி -என்னிடம் கேட்டிருக்கிறார்.
அதெப்படி – இவ்வளவு
பெரிய தொகையை –
ஒரு லட்சத்து எழுபத்தி  ஆறாயிரம் கோடியை –
மற்றவர்களுக்குத் தெரியாமல்
ஒருவர்  அபகரித்து இருக்க  முடியும் என்று.

அத்தகைய நண்பர்களுக்காக
ஒரு சின்ன விளக்கம் கொடுக்க முயலுகிறேன்.

ஒருவரிடம்  அரசுக்கு சொந்தமான ஒரு சொத்தை
விலை பேசி விற்கும் பொறுப்பு இருக்கிறது.
அதன் விலை 100 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம்.
அதை வாங்க வருபவரிடம், தனிப்பட்ட முறையில்
தொடர்பு கொண்டு, 100 ரூபாய் பெறுமான இந்த
சொத்தை உனக்கு 10 ரூபாய்க்கு விற்க ஏற்பாடு
செய்கிறேன். மிச்சமுள்ள 90 ரூபாயில் உனக்கு
பாதி எனக்கு பாதி என்று பேரம் பேசுகிறார்.
இந்த பேரத்தை ஒப்புக்கொண்டால்
வாங்குபவர் கொடுக்கப்போவது 10 (அரசுக்கு)
+45 (விற்கும் அதிகாரம் உள்ளவருக்கு கொடுக்க
வேண்டிய கமிஷ்ன் ) = மொத்தம் 55 ரூபாய் மட்டுமே.
100 ரூபாய் பெறுமானமுள்ள பொருள் 55 ரூபாய்க்கு
கிடைத்தால் அவர் ஏன் ஒப்புக்கொள்ள மாட்டார் ?

இதில் விற்கும் பொறுப்பில் உள்ளவருக்கு கிடைப்பது
ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 45 ரூபாய் கமிஷன்.
இந்த முறையில் அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக
கணக்கிடப்பட்டுள்ள இழப்பு  தான் ரூபாய் ஒரு லட்சத்து
எழுபத்தி ஆறாயிரம் கோடி.
இது எவ்வளவு பெரிய தொகை என்று நினைத்துப்
பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.

இந்த இழப்பை மதிப்பீடு செய்து வெளியிட்டு இருப்பது
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் அல்ல.
இந்தியாவிலேயே  உயர்ந்த பொறுப்பை வகிக்கும்,
மத்திய அரசின் உயர் தணிக்கையாளர்
கண்ட்ரோலர் அன்டு ஆடிட்டர் ஜெனரல்
என்கிற அதிகாரி. அதுவும் சம்பந்தப்பட்ட
அனைத்து ஆவணங்களையும்  பரிசீலனை செய்த
பிறகு அவர் கொடுத்திருக்கும் மதிப்பீடு இது.

ஸ்பெக்ட்ரம் என்பது இந்திய மக்களின் சொத்து.
எப்படி தங்கம், வைரம், நிலக்கரி போன்ற
கனிம வளங்கள் அந்த அந்த நாட்டு மக்களின் –
அந்தந்த நாட்டு அரசாங்கத்தின் – சொத்தாகக்
கருதப்படுகிறதோ அது போல் – ஸ்பெக்ட்ரம்
என்பது தொலைபேசித்துறையில் ஏலத்தில்
விற்கப்படும்  அலை வரிசைக்கான  உரிமை.

இந்த வளத்தை தான்
கொள்ளை அடித்திருக்கிறார்கள்.

இப்போதைக்கு, உடனடியாக,  இவர்களை
ஒன்றுமே  செய்ய முடியாது.
மிஞ்சி மிஞ்சிப் போனால் –  ராஜாவுக்கு பதில்
ராணி இதே துறைக்கான  அமைச்சராவார்.

அதற்கான  முயற்சிகள்  இன்றே  துவங்கி விட்டன!

சுப்ரீம் கோர்ட்டில் துவங்கி இருக்கும் வழக்கு முடிய
இன்னும் எத்தனை ஆண்டுகள்  ஆகுமோ !

முதலில் மக்களுக்கு புரிய வேண்டும்.
விழிப்புணர்ச்சி வரவேண்டும். பின்
அரசாங்கம் மாற வேண்டும் – அல்லது கோர்ட்
உத்திரவு வரவேண்டும்.

அதற்குள் – சம்பாதித்த சொத்தும் பணமும்
எத்தனையோ  பெயர்களுக்கு/இடங்களுக்கு
கை மாறி விடுமே.

யாராவது, முனைந்து கோர்ட்டில், இவர்களது
பெயரிலும், இவர்களது  நெருங்கிய உறவினர்கள்/
பினாமிகள்  பெயரிலும்  கடந்த 3 வருடங்களில்
வாங்கப்பட்டுள்ள   அசையும் மற்றும் அசையா
சொத்துக்களை  முடக்கி வைக்க  முயற்சி
எடுப்பார்களா ?

எதாவது பொது நல அமைப்புகள் தாம் முயற்சி
செய்ய வேண்டும்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, raja, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.