போகும்போது எது /என்ன கூட வரும் ?

போகும்போது எது /என்ன  கூட வரும் ?

சில நாட்களுக்கு முன்னர் ஜிகே எழுதிய
இடுகை ஒன்று ஏனோ இப்போது  நினைவிற்கு
வந்தது. அதை கீழே எடுத்துப் போட்டுள்ளேன்.

நன்றி – http://www.gkpage.wordpress.com

எது வரும் ? யார்  வருவார்கள் ?

வாழ்க்கையில்  நாம் பல நபர்களைப் பார்க்கிறோம்.
பணம்  சேர்ப்பது ஒன்றை மட்டுமே  குறிக்கோளாகக்
கொண்டிருப்பார்கள்.பணம்  இருந்தால் மற்ற
எல்லாவற்றையும் அடைந்து விடலாம் என்பது
இவர்கள் எண்ணம்.

அல்லும்  பகலும்  அதற்காகவே
அலைந்து கொண்டு  இருப்பார்கள். இவர்களிடம்
எப்போதுமே  ஒரு வித பதட்டம் இருந்துகொண்டே
இருக்கும்.
வாழ்க்கை முழுதும்
அதற்காகவே  ஓடிக்கொண்டிருப்பார்கள்.

யோசித்துப் பாருங்கள். நமக்கு எது தேவை ?
நல்ல மனைவி, நல்ல குழந்தைகள்,
சிறந்த   நண்பர்கள்,
நல்ல ஆரோக்கியம்,அமைதியான,
நிம்மதியான வாழ்வு –  இவையே
வாழ்க்கைக்கு அவசியம்.

வாழ்க்கைக்கு பணம் அவசியம் தான்.
ஆனால் பணம் ஒன்றே  வாழ்க்கை ஆகி விடாது.

பணத்தால் வாங்க முடியாத  விஷயங்கள்
நிறைய உண்டு.மன நிம்மதியை  பணத்தைக் கொண்டு
வாங்க முடியுமா ?
கோடி ரூபாய் இருந்தாலும், சர்க்கரை வியாதி
உள்ளவர் நினைத்ததைச் சாப்பிட முடியுமா ?

செல்வத்தை சேர்ப்பது கடினம்.சேர்த்த செல்வத்தைப்
பாதுகாப்பதோ  அதைவிட  கடினம் –
எனவே நிம்மதியைக் கெடுக்கும்
செல்வத்தின் மீதான  பற்றை விட்டு விடு
-என்கிறார் ஆதிசங்கரர்.

மனைவியோ, பிள்ளைகளோ, சொந்தக்காரர்களோ –
நீ போகும்போது  யாரும் வரப்போவதில்லை –
நீ யாரையும்  அழைத்துச்செல்லப்போவதில்லை -எனவே
குடும்பத்தினர்  மீதான பற்றை விட்டு விடு என்கிறார்.

ஆனால்  யார்  கேட்கிறார்கள் ?
சங்கரருக்கென்ன – சந்நியாசி  தானே –
சுலபமாகச் சொல்லி விட்டுப் போய் விடுவார்.
அவருக்கு அது  சுலபம் !

ஆனால் -சொத்தையும், சம்சாரத்தையும்
கட்டிக்கொண்டு திண்டாடும்  நம்மைப் போன்ற
சராசரி  மனிதனின்  நிலை என்ன ?

மிகுந்த  பரபரப்பான,செல்வந்தரான வியாபாரி  ஒருவர்
அடிக்கடி தனக்குப் பிடித்த ஆன்மிகவாதியான குரு
ஒருவரிடம் செல்வது வழக்கம்.

அவர் சார்ந்த மடத்திற்கு
நிறைய  நிதிஉதவியும் அளிப்பதும் வழக்கம்.
ஒரு நாள்  அவர் தன் குருவிடம் கேட்டாராம் -”நான்
இவ்வளவு  பணம் சம்பாதிக்கிறேன். இருந்தும் எனக்கு
நிம்மதியோ, சநதோஷமோ  இல்லை.
எப்போதும்  பதட்டமாகவே  இருக்கிறது. எனக்கு நிம்மதி
ஏற்பட ஒரு வழி சொல்லுங்கள்”  என்று.

அதற்கு பதில் அளித்த குரு,”பற்றை விட்டால் நிம்மதி
தானாகவே  வரும்.  நீ பணத்தின் மீதும்,
குடும்பத்தினர் மீதும் உள்ள பற்றை முதலில் விடு”

என்றார்.

அந்த செல்வந்தர்”என்னிடம் பணம் சேர்ந்து விட்டது.
எனவே பணத்திற்காக  அலைவதை வேண்டுமானால்
நிறுத்தி விடலாம்.
ஆனால் என் குடும்பத்தினருக்கு என் மீது அளவில்லாத
பாசம். கொள்ளை அன்பு. நான் இல்லாமல் அவர்களால்
அரைக்கணம்  கூட இருக்க முடியாது.
அப்படிப்பட்டவர்களை
என்னால் எப்படி ஒதுக்க முடியும்” என்றார்.

அதை பரிசோதித்துப் பார்த்து விடலாமா என்றார் குரு.
ஒத்துக்கொண்டார்  செல்வந்தர். சவம் போல் அசைவின்றிக்
கிடக்கும் யோக வித்தை ஒன்றை அவருக்குச் சொல்லிக்
கொடுத்த  குரு வீட்டிற்குச் சென்று அதைப் பிரயோகிக்கச்
சொன்னார்.

அதே போல் செல்வந்தரும் வீடு சென்று இறந்தது போல்
யோகாசனத்தில் படுத்துக் கிடந்தார்.
மனைவி, பிள்ளைகள், உறவினர் யாவரும் அவர் இறந்து
விட்டதாகவே எண்ணி  கதறி அழுதனர். அப்போது,
குருவும் செல்வந்தரின் வீட்டிற்குச் சென்றார்.

அவர்களிடம் சொன்னார்.  “உங்களில்  யாராவது ஒருவர்
உயிரைத்  தர  முன் வந்தால் போதும்.இப்போதும் இவரைப்
பிழைக்க வைக்க என்னால் முடியும்” என்று.

அதுவரை  கதறி அழுதுக்கொண்டிருந்தவர்கள்
ஒவ்வொருவராக பின் வாங்கத்தொடங்கினார்கள்.
ஒவ்வொருவரும் தான் தொடர்ந்து உயிர் வாழ வேண்டியதன்
அவசியத்தைச் சொல்லி நகர ஆரம்பித்தார்கள்.

கடைசியாக எஞ்சியது செல்வந்தரது  மனைவி மட்டுமே.
அந்த மனைவியோ “அவருக்காக  யாரும் உயிர்
விட வேண்டாம். நாங்கள்  அவர் இல்லாமலே
வாழப் பழகிக் கொள்கிறோம்” என்றாள் !

……..

வாழ்க்கையில் நிறைய அனுபவப்பட்ட பிறகு தோன்றுகிறது.
யாரோடும் – யார் வாழ்க்கையும் முடிந்து போய்
விடுவதில்லை.  அதெல்லாம் அப்போதைக்கான
ஒரு பிரமை. அவரவர்  வாழ்க்கையை அவரவர்
வாழ்ந்தேயாக வேண்டி இருக்கிறது !

இது தான் வாழ்க்கை.நாம் கொண்டு வந்தது எதுவுமில்லை.
கூட  வரப்போவதும்  எதுவுமில்லை.  எனவே
எதன் மீதும் அளவு கடந்த  பற்று கொண்டு நிம்மதியை
இழக்க வேண்டாம்  என்பதே  சங்கரர் கூறுவது.

இதையே தான் வள்ளுவரும் சொன்னார் –
“பற்றுக  பற்றற்றான் பற்றினை – அப்பற்றினைப்
பற்றுக  பற்று   விடற்கு “  –   என்று.

சங்கரர்  கூறும்  அளவிற்கு சுத்தமாகப் பற்றை விட
இயலா விட்டாலும்,
நடைமுறையில், இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு வழியை
கடைப்பிடிப்பது – முயன்றால்  சாத்தியமே.

குடும்பத்தை – மனைவியை, குழந்தைகளை,
பெற்றோர்களைப் பாதுகாப்பதும்,  பராமரிப்பதும்
நம்  கடமையே.  அதிலிருந்து நாம்
எங்கும் தப்பி ஓட முடியாது. அது நெறியும் ஆகாது.
எனவே – அதன் பொருட்டு
செல்வத்தை ஈட்டுவதும்  அவசியமாகிறது.

ஆனால் – பணத்தின் பின்னாலேயே  அலைவதையும்,
அதற்காக  எதையும் செய்யத் துணிவதையும்,
யார் மீதும்  அளவுகடந்த பற்று வைப்பதையும்,
சொந்தம்  கொண்டாடுவதையும் –
முயன்றால் தவிர்க்கலாம்.

எதுவும்  நிரந்தரமில்லை, யாரும் நிரந்தரமில்லை –
என்கிற  உண்மையை  எப்போதும்
மனதில் ஒரு மூலையில்  இருத்திக்கொள்ள
முயற்சித்தால் –

இன்ப துன்பங்களை  ஓரளவிற்கு
சம நிலையில் எதிர்நோக்கும் பக்குவத்தைப்
பழக்கிக் கொண்டால் -வரும் துன்பங்களிலிருந்து
ஓரளவு  விடுபடலாம்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், ஈழம், கட்டுரை, சாட்டையடி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to போகும்போது எது /என்ன கூட வரும் ?

 1. ரோமிங் ராமன் சொல்கிறார்:

  //போகும்போது எது /என்ன கூட வரும் ?//
  ஆன்மீகவாதிகள் சொல்லக்கூடும் – நாம் செய்த நற்காரியங்களின் பலன்கள் (அ) புண்ணியம் என்பர். இது நாம் காணாதது!!
  நாம் காண்பது: மனைவி= நான் ஆசைப்பட்டதெல்லாம் இனி யாரு வாங்கித்தருவார்? பிள்ளைகள்: இனி என்னை யாரு ஸ்கூல்ல கொண்டு விடுவாங்க?? சகோதரர்: இனி யாரு எனக்கு …etc.etc.etc…
  இப்படி பார்ப்போமே!! போகும்போது எது / என்ன விட்டு செல்லலாம்?? காந்தி,காமராஜர ,வள்ளலார், இயேசு,ராஜாஜி,கக்கன்,வினோபாஜி,விவேகானந்தர் போன்றோர் எல்லாம் விட்டுச்சென்றது என்னவென கண்டு நாமும் யோசிக்கலாமே!! (தயவு செய்து விட்டுச்சென்றது தெருப்பெயர்கள் என்று எழுதி விடாதீர்கள் !!)

 2. Kannan சொல்கிறார்:

  Nicely posted.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.