ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் !

ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான்
நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து
விட்டார் !


கோவையில் நடந்து கொண்டிருக்கும்,
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்,

“தாய்த்தமிழ் வளர்க்க” என்ற தலைப்பில்

திமுக மகளிரணி முன்னணி பேச்சாளரும்
முனைவருமான தமிழச்சி தங்கபாண்டியன்
கவிதை ஒன்றினைப் படித்தார்.

இந்த மாநாட்டைப் பற்றி ஒன்றும்
எழுதக்கூடாது என்று கையைக் கட்டிப்போட்டு
இருந்த என்னை கட்டுப்பாட்டை மீறி
எழுத வைத்து விட்டது
அந்தக் கவிதை !

நம்  எழுத்தில், பேச்சில், வழக்கில்
பிறமொழிக்கலப்பு என்பது இரண்டறக் கலந்த
ஒன்றாகி விட்டது.

இதற்காக  நாம் மெனக்கெட்டால் அன்றி,
பயிற்சி எடுத்துக்கொண்டாலன்றி இந்தக்
கலப்பட வழக்கிலிருந்து மீள முடியாது
என்பதே உண்மை.

இந்த எண்ணத்தை உறுதி செய்கிறார்
திருமதி  தமிழச்சி….

பெயரில் மட்டும் தமிழை வைத்துகொண்டு
விட்டால் அவர் பேசுவது எல்லாம்
தமிழாகி விடுமா என்ன ?

எதுகை மோனையிலும், கலைஞரைப்
புகழ்வதிலும் எடுத்துக்கொண்ட அக்கரையை
எழுத்திலும்  காட்டி இருக்க வேண்டாமா ?

தட்டச்சில் மிஞ்சிப் போனால்
இரண்டு பக்கங்கள் வரக்கூடிய – அதுவும்

முன்பே யோசித்து தயாரிக்கக்ப்பட்ட
அந்தக் கவிதையில் (?)-

தமிழ் வேடம் பூண்டு
வெளிப்படும் பிறமொழிக்
கலப்புச் சொற்களை
மட்டும் கீழே எடுத்துத் தந்திருக்கிறேன்.

நீங்களே சரி பார்த்துக்கொள்ளுங்கள் –

திசைமானி
எதிர்காலம்
ஆயுதம்
உலகம்
சமத்துவம்
கிரீடம்
பூர்வம்
பயம்
மண்டலம்
காலம்
தற்காலிகம்
கான்கிரீட்
தீர்க்கதரிசி
பேனா
நாடகம்
கவிதை
பூமி
இதிகாசம்
ருசி
அபூர்வம்
சிங்கம்
பவனி
ரயில்
ரகசியம்
ஆலயம்
கண்ணாடி
சிலிக்கான்
சாத்திரம்
காத்திரம்
பாத்திரம்
கோத்திரம்
மடம்
நவீனம்
ஜடை
ரசம்
அகராதி
அவமானம்
மானம்

தன்னை அலங்கரித்துக் கொள்வதில் இருக்கும்
ஆர்வம் தமிழை அலங்கரிப்பதிலும்
இருக்க வேண்டாமா ?

“தாய்த்தமிழ் வளர்க்க” என்று இவர் வந்ததால்
பொறுக்க இயலாமல் நான் இதை எழுத
வேண்டியதாயிற்று.
வரம்பு மீறி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன்.

முக்கியமான  ஒன்றைச் சொல்ல மறந்து
விட்டேனே – கலைஞர்  தேர்ந்தெடுத்த
“உலகம்” தூய தமிழ்ச் சொல்லா ?

அதற்கிணையான  சொற்கள் –
தமிழில் எவ்வளவோ இருக்கின்றனவே
கலைஞருக்கு ஏன் இது தோன்றவில்லை ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழச்சி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

9 Responses to ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் !

 1. sudarmathi francis சொல்கிறார்:

  தாய்த் தமிழை வளர்க்க தமிழறிஞர்களை விடுத்து தமிழ் அரசியல் அறிஞர்களை அழைத்தால் இப்படித் தான். மெல்ல இவர்களால் தமிழ் சாகுமோ????

 2. ஜெகதீஸ்வரன் சொல்கிறார்:

  ஆகா அருமையான கட்டுரை!.

  தமிழனுடைய உடனடித்தேவை வேலை வாய்ப்பை நல்கக் கூடிய தமிழ். அதுக் கிடைத்திட்டால் தமிழ் படிக்க போட்டியும் போடுவான் தமிழன்.

  இதையெல்லாம் விட்டுவிட்டு தமிழை வளர்க்கின்றார்களாம் !

  = ஜெகதீஸ்வரன்.
  http://sagotharan.wordpress.com/

 3. வித்யாசாகர் சொல்கிறார்:

  அன்புடையோருக்கு..,

  வணக்கம் தோழர். உங்களை போன்றோரின் எழுதுகோல் முனை மடங்கிப் போகுமெனில், சமூக அக்கறைக்கு ஒரு கால் உடைந்து விட்டதாய் அர்த்தம் கொள்ளுங்கள். எழுத வேண்டாமென்று நினைத்தேன் என்ற வார்த்தை உரைக்கிறது.

  யாரை குற்றப் படுத்தி எழுதும் நோக்கிலல்லபதிவுகள் இடப் படுவது. தவறை தவறென்று யார் செய்யினும் எடுத்துக் காட்டும் கடமை நம் ரத்தத்தில் நிறைந்ததென்பதே மீண்டும் உங்களை எழுத வைத்துக் காணும்.

  அதுபோல், தமிழச்சியை இரண்டொரு மேடையில் சந்தித்துள்ளேன். எடுத்துக் காட்டுகையில் மாற்றிக் கொள்ளக் கூடியவர் தான். சமூகம் பற்றி அவருக்கு எழுத எத்தனை அக்கறை உண்டோ; அது பிறருக்கும் உண்டென்று புரிந்தவர் தான் அவர். தவறு நேருமெனில் திருத்திக் கொள்வோம். திருத்திக் கொள்ள இப்படி தோழமை அறிவிப்பு செய்வோம். தன்னை மாய்த்துக் கொள்கிறேன் என்பது என்பது போல், எழுதுவதையே நிறுத்திக் கொள்கிறேன் என்பது தகுமா????

  நிறைய எழுதுங்கள். வலிக்காமல் தான் எழுதுகிறீர்கள். நிறுத்தவேண்டிய அவசியமொன்றுமில்லை தோழர். நேரம் கிடைக்கையில் அல்லது அவசியம் பொருத்து வெகு கண்டிப்பாக உங்கள் பதிவுகளை படிக்கிறோம்.

  வித்யாசாகர்

 4. Kalhandhaiccoe சொல்கிறார்:

  -உ-/~=தெய்வவொண்டீந்தமிழ்!=~/=>..(தொடர்ச்சி..):=[9]_^திசைமானி,+ஆயுதம்,+உலகம், +பயம்,+மண்டலம்,+காலம்,+நாடகம்,+கவிதை,+பூமி,+சிங்கம்,+ஆலயம், +கண்ணாடி, +சாத்திர-காத்திர-பாத்திர-கோத்திரங்கள், +மடம்,+சடை,+அகராதி,+மானம், +அவமானம்_=இவை யாவும் தமிழே,..அன்றித் தமிழ்சற்றுத் திரிந்த வடிவமே. என்ன, இவற்றுள் யாவும் ‘சங்கம் ஏறிய’ சொல்லாகா. மற்றுச், சில, பின்னைநாட் சமயத் தீந்தமிழ் நல்கிய வளனும், மக்கட் பேச்சின் வழக்காறும் மேவியவாம். இவைபோல்வன தமிழல்ல எனத்தள்ளுகை ஒரு காலம்போன நெறியாறு. இன்னும் விரிக்கிற் பெருகும். மேற்சுட்டிய சொல்லொவ்வொன்றுக்குந் தக்க விளக்கந் தரலும் வாகின் இயல்வதே,மன்.~”சேரர் கொற்ற”த்தோம்,_*நாவலந் தமிழகக் **கொங்குதேய-நின்று.{=பி.கு.:-இங்குச் சொன்ன இவைதெரிந்தன்று நீவிர் சுட்டிய அத் துதிபாடிப் பெண்பாற் கவி %அக் கொல்லாக் கொலஞனை அடியலம்பிக் கொட்டிய வார்த்தைக் கோவை..!}- |=சிவ**சிவ=|

 5. Kalhandhaiccoe சொல்கிறார்:

  -உ-/=(தொடர்ச்சி..)=>..[10]_மேல், அச்சில் விட்டுப்போன ஓரிரு சொல்:–^திசைமானி, +எதிர்காலம், +ஆயுதம்(~”ஆய்த”[கூர்மைமிக்க ஒலிநுண்மை] எழுத்து..), +உலகம்,_+”தீர்க்கதரிசி”யில்,..’தீர்க்கம்’… |=சிவ**சிவ=|

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  போதுமய்யா போதும்.
  திட்டுவதாக இருந்தால்
  நேரடியாகத் திட்டி விடுங்கள்.

  அதற்கு உங்களுக்கு உரிமை உண்டு.

  அதற்காக இப்படியா ?

  • Kalhandhaiccoe சொல்கிறார்:

   -உ-/~=தெய்வவொண்டீந்தமிழ்!=~/=> #காவிரியார்க்கு, வணக்கம்.தங்கள் அகவை உள்ளிட்ட தற்சுட்டு விளத்தம் பின்னரே கண்டேம்! நிற்க.
   -#-அதனை யார் சொன்னது, தங்களைத் “திட்டு”வதா..?!_மற்று,அது, தாங்கள் பட்டியலிடாநின்ற சொல்லவற்றுட் பல நந்தமிழே,..அன்றித் தமிழ்மரூஉவே எனக் காட்டல்வேண்டி யாம் பதியலானதன்றோ..?_பன்முகக் கல்வியீடுபாடும், பன்னாடு-பலமாநிலத்தும் சென்றும், உறைந்தும், அவ்வம் மக்களொடு அளவளாவிக் கலந்தும், அவர்மொழி யறிந்தும் பெற்ற பட்டாங்குடைய தாங்கள் இப்படி ‘விசுக்’கெனச் சினவுகை பாந்தமோ..உரைமின்?!
   தங்கள் தாய்மொழி யீடுபாடுங் கரிசனையும் மேலுஞ் சிறவாநின்று, அறிவுங்கூர்ந்து துலங்கிச் செல்வான் வேண்டியே யாந் திறஞ்சொல்லப் போந்தது..~#> அவ்வழியிற் றங்களைத், தவத்திரு மறைமலையடிகளின் ஆன்றவிந்தாய்ந்துரைக்குஞ் செந்தமிழ் நூற்பலவொடு, மொழிநூன் மூதறிவர் தேவநேயப் பாவாணர்தம் நன்மொழி நூல்யாவும் படித்தறியத் தூண்டற்கும், அதன்மேல்: சாத்தூர் சேகரன், குரு.அரசேந்திரன் போன்றோர் ஆக்கமும் பார்த்தெண்ண வைத்தற்குமே யாம் கருத்துரைக்க முனைந்ததென்க!=இதன்வழி, நும் ‘புகல்தளம்[’பிளாக்’] இதனுள் நுழைந்து மேவியுலாவுநரும் வல்ல தமிழறிவு,உணர்வுகளும் மொழியாய்வுப் புலம்படர் பாங்கும் பெற்றோங்க வாய்ப்பாமன்றே..?/={எமக்கோ அகவை: ௬௫-க்குமேல்; ’மேல்’ எத்தனையுங் கூட்டிக்கோடல் – நுங்கள் விருப்பமொப்ப..!}-இவண்,_”சேரர் கொற்ற”க் கொற்றாண் வயவர்:’களந்தைக்கோ’,*கொங்குதேய-நின்று.|=சிவ**சிவ=|

 7. நெற்குப்பை தும்பி சொல்கிறார்:

  உங்கள் பதிவின் சாரம் தெளிவு.
  அப்படிப் பார்த்தால் தமிழச்சி மட்டுமல்ல, வாலி முதற்கொண்டு அத்துணை “கவிஞர்கள்” படித்த கவனங்களிலும் ( “கவிதை” என்பதே தமிழ் இல்லை என்கிறீர்கள்!) பிற மொழி சொற்கள் மிகுந்தே உள்ளன. கவி வட மொழி சொல் என்னும்போது கவி அரங்கம் எப்படி?
  ஆனால் ஒன்று சொல்ல வேண்டும்: சில சொற்கள் தமிழிலிருந்தும் வட மொழிக்கு சென்றிருக்கின்றன என நான் கருதுகிறேன். உதாரணம் : நீர், மீன், முதலிய சொற்கள் வட மொழியில் இருந்தாலும் அவை தமிழில் முதலில் வந்திருக்க வேண்டும் எனத்தோன்றுகிறது. உலகம் “லோகம்” என்பதிலிருந்து வந்திருக்கலாம் எனத் தோற்றினாலும் இருவழி பயணம் இருந்திருக்கக்கூடும் .
  கோடு எந்த இடத்தில் வரைந்து இதற்கு அப்பால் வந்தவை திசை சொற்கள் என எந்த காலத்திலும் தெளிவு இல்லை.
  பாவம் bhaavam என்றாலும் (முக baavam ), பாவம் (புண்ணியத்துக்கு எதிர்ச்சொல்) இரண்டுமே வட மொழியிலிருந்து வந்தது போல் தெரிகிறது. bhaavam என்பதற்கு மாற்று சொல் இல்லாமலேயே பல நாள் கழித்து விட்டோம்.
  கிரீடம், தீர்க்க தரிசி, இதிகாசம், சிலிகான், கோத்திரம், ஜடை ,ரயில் என்ற சொற்களை வேற்று மொழி சொல் என தள்ளி விட்டாலும், உலகம், கவிதை, ஆலயம், பாத்திரம் என்ற சொற்களை அதே போல் தள்ளிவிடுவது எளிது அல்ல. அவற்றுக்கு வேறு சொல் இருந்தாலும் அவை தமிழ் சொற்கள் என ஒரு தலைமுறை நம்பி விட்டது.
  முந்தைய நூற்றாண்டுகளில் எப்படியோ தெரியாது; கடந்த நூறு ஆண்டுகளில் அறிவியல் வளர்ச்சியின் காரணமாக தொலை தொடர்பு, ஊடகங்கள், அரசு முறைகள், காரணமாக பலப்பல மொழிகளுடன் தமிழின் interaction மிக பல மடங்கு ஆகிவிட்டது. இந்த கால கட்டத்தில் வேறு மொழி சொற்களை எவ்வாறு எதிர் கொள்வது என தமிழ் அறிஞர்கள் சிந்திக்கவில்லை; சொல்ல வில்லை. வாதிடவில்லை;
  இன்னும் வரும் காலத்தில், தனித்தமிழ் என்பது நடைமுறையில் சாத்தியமா* என்றே தெரியவில்லை. குறைந்த பட்சம்* கவிதைகளில் திசை சொற்களை தவிர்த்து எழுத முயலலாம். * குறியிட்ட சொற்கள் தமிழ் சொற்கள் இல்லை தான்; அவற்றுக்கு ஈடான சொல் எனக்கு உடனே தோன்றவில்லை; மன்னிக்கவும்.
  நெற்குப்பை தும்பி
  http://makaranthapezhai.blogspot.com
  .

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   என்னைப் போன்றவர்,
   உங்களைப்போன்றவர் என்று
   சாதாரண மொழி அறிவுடையவர்கள்
   அனைவரும்
   தூய தமிழில் தான் எழுத வேண்டும்
   என்று எதிர்பார்க்க முடியாது.
   அப்படிப் பார்த்தால்
   இணையத்தில் இத்தனை எழுத்துக்கள்
   வர முடியாது.

   நம் எழுத்தில் கலப்படம் வருவது சகஜமே.
   நாம் தமிழில் புலமை பெற்றவர்கள் என்று
   சொல்லிக்கொண்டு எழுத வரவில்லை.

   ஆனால், புலமை பெற்றவர்கள் என்று
   சொல்லிக் கொண்டு, மற்றவர்களுக்கு
   அறிவுரை சொல்ல வருபவர்கள்,
   பேராசிரியராகப் பணிபுரிபவர்கள்,
   கவியரங்கங்களில் கவிதை
   தயாரித்துக்கொண்டு வருபவர்கள் –
   இன்னும் சற்று மெனக்கெட வேண்டாமா
   என்பது
   தான் என் ஆதங்கம்.

   தமிழச்சி அவர்கள்
   தமிழ் அறியாதவர் அல்ல.
   முயன்றால், இன்னும் கொஞ்சம்
   அக்கரை எடுத்துக்கொண்டிருந்தால்,
   இதைவிட நல்லதாக, தூய தமிழ்ச்சொற்களைக்கொண்டதாக
   கவிதை படித்திருக்கலாம்.

   அதுவும் உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டில்
   உரை ஆற்ற வரும்போது, அதற்கான
   மெனக்கெடல், உழைப்பு வேண்டாமா ?

   அவரது கவிதையில்,
   தலைவரைத் திருப்திப்
   படுத்த வேண்டும் என்கிற நோக்கம் தான்
   முன் நிற்கிறதே தவிர
   தமிழைச் சிறக்கத்தர வேண்டும்
   என்கிற எண்ணம் வெளிப்படவில்லை
   என்பதே என் கருத்து.

   உங்கள் பதிவுக்கு,
   கருத்துப் பரிமாற்றலுக்கு
   மிக்க நன்றி நண்பரே.

   -காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.