மணிரத்னம் ….
சினிமா பற்றிய நல்ல பின்புலம்
இருந்தாலும்,
நான் இதுவரை சினிமா பற்றி
எழுத நினைத்ததில்லை !
சினிமா பற்றி அங்குலம் அங்குலமாக
ஆராய்ந்து
அருமையாக விமரிசனம் எழுதும்
பல வலைஞர்கள்
ஏற்கெனவே இருக்கிறார்கள் !
இருந்தாலும் இப்போது எழுத வேண்டும்
என்று தோன்றியது – எழுதுகிறேன்.
காரணம் நான் இன்று பார்த்த ராவணன்
படமும் வலையில் தொடர்ந்து வரும்
நெகடிவ் விமரிசனங்களும் !
மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படம்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான
எதிர்பார்ப்பு !
எதிர்பார்ப்புகளே ஏமாற்றங்களை
உருவாக்குகின்றன.
அதிக எதிர்பார்ப்புகள் -அதிக ஏமாற்றம் !
ராமாயணத்தை சிதைத்து விட்டார் மணி.
வசனங்கள் புரியவே இல்லை.
படம் மிகவும் மெதுவாகப் போகிறது.
ஐஸ்வர்யா ராய்க்கு வயதாகி விட்டது.
நகைச்சுவைக் காட்சிகளே இல்லை.
பெண்கள் ரசிக்க படத்தில் எதுவுமே இல்லை –
என்றெல்லாம் கடுமையான விமரிசனங்கள்
வந்து கொண்டிருக்கின்றன.
கமர்ஷியலாக படம் வெற்றி பெறுமா -?
தெரியவில்லை.
என்னுடைய பார்வையில் –
இந்தப் படத்தில் வரும் சில
கதாபாத்திரங்களும்
அவற்றின் சில செயல்கள்பாடுகளும்
ராமாயண கதாபாத்திரங்களை
நினைவுபடுத்துகின்றன.
அவை தற்செயல் அல்ல –
வேண்டுமென்றே தான்
புனையப்பட்டுள்ளன.
ஆனால்
ராமனையோ – ராவணனையோ
ஆதரிக்கவும் இல்லை.
அவமானப்படுத்தவும் இல்லை.
இது நிச்சயமாக இன்னொரு
கீமாயணம் இல்லை.
ஒரு வித்தியாசமான கற்பனை –
அவ்வளவே !
அற்புதமான இடங்கள்.
பசுமையான காடுகள், மரங்கள், அருவிகள்
நீர்வீழ்ச்சிகள் – சாதாரணமாக நமக்கு
காணக்கிடைக்காத காட்சிகள் !
மிகப்பிரமாதமான ஒளிப்பதிவு.
மனித நடமாட்டமே இல்லாத,போக்குவரத்து
மிகவும் கடுமையாக இருக்கக்கூடிய
இந்த இடங்களில் –
மின்சார வசதியே இல்லாத
காடுகளுக்கிடையில்,அருவிகளுக்கிடையில் –
மாதக்கணக்கில் இத்தனை கலைஞர்களையும்,
தொழிலாளிகளையும், டெக்னீஷியங்களையும்
அழைத்துச்சென்று, தங்க வைத்து
படம் எடுப்பது –
மிகப்பெரிய உழைப்பு.
நிச்சயமாக உலகத்தரம் வாய்ந்த ஒரு படம்.
படத்தின் தரத்தைப் பற்றி நாம் நிச்சயமாக
பெருமைப்படலாம்.
வசூலை மனதில்கொண்டிருந்தால் –
ப்ரியாமணி கற்பழிப்புக் காட்சியை
15 நிமிடங்களுக்கு நீட்டித்திருக்கலாம்.
படத்தில் பாதி நேரம் நீரிலேயே இருக்கும்
ஐஸ்வர்யா ராயை வெவ்வேறு கோணங்களில்
பெண்மை ததும்ப மிகக்கவர்ச்சியாகக்
காட்டி இருக்கலாம்.
ஒரு ஓவியன் – தன் திருப்திக்காகத்தான்
படம் வரைகிறான். மற்றவர்கள்
எதிர்பார்ப்பதை அல்ல.
ஒரு இசைக்கலைஞன் -தான் ரசிப்பதைத்தான்
உருவாக்குகிறான்.
மணிரத்னம் ஒரு அற்புதமான திரைச்சிற்பி.
தான் நினைப்பதை, தனக்குப் பிடித்த விதத்தில்
உருவாக்குகிறார். அவருக்குப் பிடித்தது
மற்றவர்களுக்கும் பிடித்திருந்தால் அது ஹிட்
ஆகிறது. உச்ச கட்ட பாராட்டுகளைப்
பெறுகிறது.
ஆனால் மற்றவர்கள் எதிர்பார்ப்பது போல்
அது அமையவில்லை என்றால் – அம்மம்மா
எவ்வளவு தாக்குதல்கள் ?
நம்மிடையே இருக்கும் மிகப்பெரிய
கெட்ட பழக்கம். ஒன்று தலைமேல்
தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவோம்.
இல்லை ஏறி மிதித்து துவம்சம் செய்து
விடுவோம்.
படைப்பாளியை அவன் போக்கில்
விட்டு விடுவோமே. முடிந்தால் பாராட்டுவோம் –
ஊக்குவிப்போம். இல்லையென்றால் –
இருக்கவே இருக்கிறது – அடுத்த படைப்பு !
நமது எதிர்பார்ப்புகளை சிறிது ஒத்திப்போடுவோமே !
மாறாக அவன் படைப்புத்திறனை
சிதைக்க வேண்டாமே !
ஏற்கெனவே பலமுறை நிரூபிக்கப்பட்ட
அவன் திறமையை சந்தேகிக்க வேண்டாமே.
இந்தியா முழுதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய
படைப்பாளிகள் திரையுலகில் எத்தனை
பேர் இருக்கிறார்கள் ?
அதுவும் தமிழரிடையே ?
உலகம் போற்றக்கூடிய ஒரு படைப்பாளியை
தமிழனாகப் பெற்றதற்காக நாம் பெருமை
அல்லவா பட வேண்டும்.
அவன் மனம் தளர, தன்னம்பிக்கை இழக்க
நாமே காரணமாகி
விடலாமா ?
விமரிசனங்கள் இவற்றை
மனதில் கொண்டதாக
அமைவது நல்லது – என்பது என் கருத்து.
இத்தனை நியாயமாக ஒரு கலைஞனையும் முன்னிறுத்தி சிந்திக்க தெரிந்தவர் அத்தனை பேருக்கும் இப்படம் பிடிக்கும் தோழர். மிக அருமையான படம். இப்படத்தை நன்றாக இல்லை என்போர் ஒன்று நீங்கள் சொல்வது போல் அதிக எதிர்பார்ப்போடு படம் பார்த்திருக்க வேண்டும் அல்லது, எப்படி எல்லாம் குறை சொல்லலாம் என்று பார்க்க வேண்டும், அல்லது வெறுமனே மாறுபட்ட கருத்தை பதிந்து தன்னை முன்னிலை படுத்த எண்ணியிருக்க வேண்டும். தங்களின் பதிவு நியாயமானது. மிக்க நன்றிகள்.
மணிரதனத்தை நான் நேரில் சந்தித்துள்ளேன். பேசியுள்ளேன். கண்ணத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களை தந்தவர். இந்திய எல்லை கொடு வரை புரட்சிகரமான படங்களால் தொட்டவர்.
இத்தனை பெருமைகள் கொண்டும் கர்வமில்லாத மனிதர் அவர். எனக்கே ஆச்சர்யமான தருணம் அது அவரை சந்தித்த தருணம். அதிலும் இப்படம் எத்தனை பெரிய முயற்சி உழைப்பு?? அது புரியாமல் மிக சாதாரணமாக விமர்சனம் இடுகிறார்கள்.
போகட்டும். நான் பார்த்த வரை ரசித்து ரசித்து பார்த்தேன். முதன் முறையாய் நம் தளத்தில் இப்படத்திற்கான விமர்சனமும் இட்டுள்ளேன்.
http://vidhyasaagar.com/2010/06/19/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/
அவரவர் அவரவர் வேலைகளை செய்கிறார்கள். நாம் நம் வேலையை செய்வோம்!
மிக்க பாராட்டுக்களுடன் ..
வித்யாசாகர்