தமிழர் பிரச்சினை தீரும் வரை அவமானம் தொடரும்: சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி.

தமிழர் பிரச்சினை தீரும் வரை
அவமானம் தொடரும்:
சொல்வது நானல்ல -சிங்கள பெண் எம்.பி.

வதை முகாம்களில் உள்ள தமிழ் மக்களை
மீள்குடியேற்றி, நியாயமான அரசியல்
தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின்
முன் தொடர்ந்து தலைகுனிவுக்குள்ளாவதை
இலங்கையால் தவிர்க்கவே முடியாது.
ஐய்ஃபா விழாவில் நடந்துள்ள அவமானம்
தொடரும்

என்று இலங்கை ஐய்க்கிய தேசிய கட்சியின்
சிங்கள பெண் எம்பி ரோஸி சேனநாயக்க

கூறியுள்ளார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர்
அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்
கூட்டத்தில் பங்கேற்ற ரோஸி கூறியதாவது:

போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து
வாழும் மக்களை மீள்குடியேற்றி விட்டதாக
ராஜபக்சே வெளிநாட்டு ஊடகங்களுக்கு
பேட்டி கொடுத்து வருகிறார்.

இது அப்பட்டமான பொய்.

உண்மையில், மூன்றில் இரண்டு பங்கு
மக்கள் இன்றும் அகதி முகாம்களில்
எந்தவிதமான வசதிகளுமின்றி வாழ்கின்றனர்.

மக்களை மீள்குடியேற்றியதாக அரசாங்கம்
கூறுகின்றது. ஆனால் அம்மக்கள் இன்றும்
தகரக் கொட்டகைகளில் மிருகங்களைப்போல் வாழ்கின்றனர்.

உண்ண உணவில்லை,
வாழ்வதற்கு வழியில்லாது,
தொழில் இல்லாது
பிள்ளைகளுக்கு கல்வி இல்லாது,
அடிப்படை வசதிகளின்றி
பரிதாபமான நிலையில் உள்ளனர்.

மறுபுறம் யுத்தம் முடிந்து ஒரு வருடம்
கழிந்தபோதும் இதுவரையில்
தமிழ் மக்களுக்கு வழங்கப்போகும்
அரசியல் தீர்வு என்னவென்பதை
மகிந்த அரசாங்கம் முன்வைக்கவில்லை.

இந்த சூழலில் சர்வதேச ரீதியாக
புகழ்பெற்ற ஐய்ஃபா திரைப்பட விழா
இலங்கையில் நடைப்பெற்றது. இது
இலங்கைக்கு கவுரவம்தான்.

ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரான
அரசாங்கத்தின் நடவடிக்கைகளால்
தென்னிந்தியா உள்பட சர்வதேச
நாடு களில் வாழும் தமிழ் மக்கள்
இவ்விழாவில் நடிகர்கள் கலந்து
கொள்ளக்கூடாது என கடும்
ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.

இதன் மூலம் இலங்கைக்கு களங்கமும்
அவமானமும் ஏற்பட்டுள்ளது. இதற்கான
முழுப்பொறுப்பும் ராஜபக்சே
அரசாங்கத்தையே சேரும்.

ஐய்ஃபா சினிமா விழாவின் தூதுவரும்
ஏற்பாட்டாளருமான அமிர்தாப்பச்சன்,
அபிஷேக் பச்சன், உலகப் புகழ் பெற்ற
நடிகை ஐய்ஸ்வர்யாராய் போன்ற நடிகர்களும்,

தென்னிந்திய புகழ் நடிகர்கள் கமல்ஹாசன்,
ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம்
போன்ற முக்கிய பிரமுகர்கள்,
புகழ் பெற்றவர்கள் இந்நிகழ்வில்
கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கம் சார்பில்
அழைப்பிதழ் கொடுக்கப்பட்டும் அதை
வாங்கவே மறுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

தென்னிந்தியாவிலும் சர்வதேச ரீதியிலும்
இலங்கை அரசுக்கு எதிராக எழுந்துள்ள
எதிர்ப்பு நிலைதான் இதற்குக் காரணம்.

இதன் மூலம் தமிழ் மக்களுக்கு இலங்கை
எந்த நியாயத்தையும் வழங்கவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யுத்தத்தில் வெற்றி பெற்று பயங்கரவாதத்தை
ஒழித்து ஒரு வருடம் கழிந்த போதும்

இனப் பிரச்சினைக்கான தீர்வை அரசாங்கம் வழங்கவில்லை.

வெறுமனே அரசியலமைப்பு திருத்தம்,
ஆசியாவில் ஆச்சர்யமிக்க நாடாக
மாற்றுவோம் என அரசு தரப்பில் வாய்கிழிய கூறித்திரிகிறார்களே தவிர தமிழ் மக்களுக்கு
அதிகாரப் பரவலாக்கலை வழங்குவதற்கான
அறிகுறியே இல்லை.

இப்படியொரு சூழலில், இந்தியாவிலும்
உலகிலும் அரசாங்கத்திற்கு எதிராக
கிளர்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே
இருக்கும். இலங்கைக்கு அவமானங்களும்
தொடரவே செய்யும்.

ஐய்பா சினிமா விழா என்பது உலகப் புகழ்
பெற்றது. ஆசியாவின் ஆஸ்கர் என
வர்ணிக்கப்படுவது.

சர்வதேச திரைத்துறையில் மூன்றில்
இரண்டு பங்குடன் பெரும் ஜாம்பவானாகத்
திகழும் இந்திய திரைத்துறை

வேறு நாடுகளில் இதனை நடத்துவது
அந்த நாட்டுக்கு கவுரவத்தையும், புகழையும் பெற்றுக்கொடுக்கும்.
ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளால் கவுரவத்துக்குப் பதில்

அவமானமே மிஞ்சியுள்ளது. அரசாங்கம்
தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து,
அதிகாரப் பரவலாக்கல்,
இனத்துவ கவுரவத்தை வழங்கும்
அரசியல் தீர்வை உடனே அறிவிக்க வேண்டும்.

அதைவிடுத்து தமிழ் மக்களை
ஓரம் கட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்தால்
உலக நாடுகளிலிருந்து நாம்
தனிமைப்படுத்தப்படுவோம் என்றார்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கமலஹாசன், சரித்திரம், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, ரஜினி, ராஜ பக்சே, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.