திராவிடர்களுக்காக இயங்கும்
க்ட்சிகளுக்கு இனியும்
இங்கே வேலை இல்லை !
வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !!
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ?
வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ?
(பகுதி-9) – நிறைவுப் பகுதி.
இன்றைய தினத்தில் மொழியின் அடிப்படையில்
மட்டுமே மக்கள்
ஒன்று பட முடியும் !
தமிழ் பேசும் அனைவரும்,
தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட
அனைத்து மக்களும் –
உலகில் எந்த மூலையில் இருந்தாலும்
ஒரே இனம் தான் –
எனவே இனி நிலைக்கப்போவது –
நிலைக்க வேண்டியது தமிழை,
தமிழரை, முன்நிறுத்தும் இயக்கம் தான் !
ஒழியட்டும் இந்த திராவிடம்
என்கிற மாயை !
ஜாதி, மதம், நாடு – ஆகிய எல்லைகளைக்
கடந்து நம் அனைவரையும் இணைக்கக்கூடிய
ஒரே பாலம் – இனி, தமிழ் என்கிற
நமது மொழியாகத்தான் இருக்க முடியும்.
உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஆண், பெண்,
ஆண்டான், அடிமை, ஜாதி, மதப் பூசல்கள்
இன்றி தமிழர்கள் கௌரவமாக வாழ
பெரியார் கண்ட கனவும், எதிர்பார்ப்பும்
அதுவாகத்தான் இருக்க முடியும்.
கணிணிகளும், வலைப்பின்னல்களும்
உலகத் தமிழர்களை
ஒன்றுபடுத்தி இணைக்கும் அற்புதமான பணியினை
செவ்வனே செய்து வருகின்றன !
பதவிப்பித்து பிடித்து அலைகிற சுயநல
அரசியல்வாதிகளையும்,
தேவை ஏற்படும்போது மட்டும் திராவிட வேடம்
பூண்டு கொள்ளும் போலிகளையும்,
எல்லா விதத்திலும் ஏமாற்ற முயல்கின்ற
அரசாங்கங்களையும் –
மறந்து ஒதுக்கி விட்டு உலகத்தமிழர்கள்
அனைவரும்
தமிழ் மொழி என்கிற ஒரு குடையின் கீழ்
திரளும் அவசியம் வந்து விட்டது !
திராவிட இயக்கத்தை சிந்தித்து, உருவாக்கி,
வளர்த்த தந்தை பெரியார் இன்று இல்லாமல்
போய் விட்டாலும், –
அவர் உருவாக்கிய இயக்கம் இன்று வீழ்ந்து விட்டாலும் –
குறுகியகால தேர்தல் லாபங்கள் –
கொள்கையையும், லட்சியங்களையும்
நீர்த்துப்போகச்செய்து விடும் என்று –
தந்தை பெரியார் கூறிய உண்மையை
இன்று கண் எதிரே பார்த்துக்கொண்டிருக்கிறோம் !
திராவிட இயக்கங்கள், பணத்துக்காகவும்,
பதவி சுகத்திற்காகவும் எப்படி அலைகின்றன
எவ்வளவு பலவீனப்பட்டு விட்டன என்பதை
இன்று ஒன்றும் செய்யவொண்ணாமல்
பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் !
ஆனால் இந்த வீழ்ச்சியிலும் நமக்கு ஒரு பாடம்
கிடைத்து தான் இருக்கிறது !
உறுதியாகப் பிடித்துக் கொள்வோம்
அந்தப் பாடத்தை !!
தேர்தல் வெற்றியிலும், அதிகார போதையிலும்
ஆசை கொள்ளும் இயக்கங்கள் இனி நமக்குத்
தேவை இல்லை.
கொள்கைக்காக வாழ்பவர் தாம்
ந்மக்குத் தேவை – பதவிக்காக எதையும்
துறப்பவர்கள் அல்ல !
தேர்தலை மறந்து, சமுதாய முன்னேற்றத்திற்காக,
தமிழர் முன்னேற்றத்திற்காகப்
பாடுபட முன்வருவோரே நமக்குத் தேவை.
——————–
இத்துடன் சேர்த்து கடந்த 9 பகுதிகளில் இந்தத்
தலைப்பில் என் கருத்துக்களைக் கூறி வந்தேன்.
இவை அனைத்தும் என் கருத்து மட்டும் தான்.
இவற்றை மற்றவர்கள் ஏற்றுகொள்ள வேண்டும்
என்கிற அவசியம் ஏதுமில்லை.
தந்தை பெரியாரைப் போற்றும் நிறைய
எழுத்தாளர்கள், இணையம் முழுவதும் நிரம்பி
இருக்கிறார்கள். அதில் பலர் இந்த இடுகைகளைப்
படித்திருக்கலாம். அவர்கள் இது பற்றி
தங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும்
என்று அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
இது பற்றிய ஆக்கபூர்வமான, விவாதங்களை
வரவேற்கிறேன்.
– காவிரிமைந்தன்