ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ?
பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ?
இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ?
வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ?
வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ?
(பகுதி-8)
சென்ற பகுதியில்(பகுதி-7) பெரியாரின் உழைப்பு
வீணாகவில்லை- அவர் உழைப்பிற்கு நிச்சயம்
அர்த்தம் இருக்கிறது என்று முடித்திருந்தேன்.
ஆனால் எந்த அளவிற்கு ?
1) பிராம்மணர் ஆதிக்கம் அகன்று விட்டது.
( ஆனால் புதிய பிராம்மணர்களாக,
ஆதிக்க சக்திகளாக, அதிகார வர்க்கமாக,
பல அரசியல்வாதிகள் –
அமைச்சர்கள், எம் எல் ஏ க்கள், எம்பி க்கள்,
வட்ட, மாவட்ட செயலாளர்கள், தலைவர்களின்
வாரிசுகள் என்று உருவெடுத்துள்ளார்கள் !)
2 ) பிராம்மணர்களால் கடைப்பிடிக்கப்பட்டு
வந்த தீண்டாமை பெரியாரின் தொடர்ந்த
முயற்சிகளால் ஒழிக்கப்பட்டு விட்டது –
உண்மையே.
(ஆனால் தென் மாவட்டங்களில் ஜாதி இந்துக்கள் (?)
என்று கூறிக்கொள்ளும் சில உயர் (?) ஜாதியினர்
இரட்டை டம்ளர் முறைகளை இன்னும்
அனுசரிக்கிறார்கள் எனகிற உண்மையை பதவிக்கு
வரும் எல்லா அரசுகளுமே
ஓட்டு வங்கியை கணக்கில்கொண்டு இதை
கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.
பாப்பாரப்பட்டியிலும்,
கீரிப்பட்டியிலும், உத்தவபுரத்திலும் நடக்கும்
கொடுமைகளுக்கு யார் காரணம் ? பார்ப்பனர்களா ?
உயர் ஜாதி இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளும்
இவர்களை வெளிப்படையாகக் கண்டிக்க எந்த திராவிட
இயக்கமும் முன்வரவில்லையே – ஏன் ? )
3) விதவைத் திருமணங்களும்,
கலப்புத் திருமணங்களும், இன்று சகஜமாக
நடைபெறுகின்றன / ஏற்றுக் கொள்ளப்படுகின்றன
என்பது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய
சமுதாய முன்னேற்றம் தான்.கடந்த 50 ஆண்டுகளில்
சமுதாயத்தில் மிகப்பெரிய மனமாற்றம்
ஏற்பட்டிருக்கிறது. பின்னர் பலர் சேர்ந்துக் கொண்டாலும்,
இதற்கு முழு முதல் காரணம்
தந்தை பெரியாரே தான்.இந்த மட்டில் அவர் உழைப்பு
வீண் போகவில்லை.
4) இதே போல் பெண்கள், கல்வியிலும்,
வேலை வாய்ப்பிலும் பெரிதும்
முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் –
சொத்துரிமை பெற்றிருக்கிறார்கள் !
பொருளாதார ரீதியாக பெண்களுக்கு ஓரளவு
சுதந்திரம் கிட்டியுள்ளது.
5) ஜாதிகள் – இடையில் சில காலம் நிச்சயமாக
ஒழிந்திருந்தன.
அய்யர்,அய்யங்கார், முதலியார், நாயுடு, செட்டியார்,
ரெட்டியார், கவுண்டர்,பிள்ளை போன்ற வால்கள்
பெயரைத் தொடர்ந்து வராத காலமும் நம்
சமுதாயத்தில் இருந்தது !
ஆனால் அண்மைக் காலங்களாக மீண்டும்
ஜாதிப்பெயர்களை
வெளிப்படையாக, பெருமையாக
கூறிக்கொள்வதும்
ஜாதிச் சங்கங்களை உருவாக்குவதும் தீவிரமாக
நடைபெற்று வருகிறது.
இதற்கு திராவிட இயக்கங்கள் வெட்கம் சிறிதும்
இன்றி ஓட்டு வங்கியை மனதில் கொண்டு
மாற்றி மாற்றி ஜாதி சங்கஙகளுக்கு ஆக்கமும்
ஊக்கமும் அளிக்கும் வேதனை
தொடர்ந்து கொண்டிருக்கிறது !
6) வடநாட்டினரின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக
உருவாக்கப்பட்ட திராவிட இயக்கங்கள் இன்று
அதே வடநாட்டினருடன்
கைகோத்துக்கொண்டு பதவி சுகம் அனுபவிப்பதில்
போட்டி போடுகின்றன.
பதவிக்காக எந்தவித கொள்கைகளையும்
தியாகம் செய்யத்தயாராக இருக்கின்றன.
இதன் விளைவாகவே லட்சக்கணக்கான
இலங்கைத்தமிழர்கள்
சகல இன்னல்களுக்கும் உள்ளாக நேர்ந்தது –
இதே காரணத்தால், அவர்கள் படும்
இன்னல்கள் இன்னும் தொடர்கின்றன.
7) தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு
அளிக்கப்படும் சலுகைகள் –
திரும்பத் திரும்ப ஒரு கூட்டத்தினராலேயே
அனுபவிக்கப்படுகின்றன.
இடவசதி சலுகைகளைப்பெற்று அரசுப் பதவிகளில்
இடம் பெற்றவர்கள்
மீண்டும் மீண்டும் தங்கள் வாரிசுகளையே
உள்ளே நுழைக்கின்றனர்.
ஒருதலைமுறை வசதி பெற்றவர்களை
சலுகைகளில் இருந்து ஒதுக்கிவிட்டு –
காத்திருக்கும் மற்றவர்களும் முன்னேற
வாய்ப்பு அளிக்க வேண்டும் என்கிற நியாயத்தை
யாரும் உணர்வதாகவோ,
கேட்பதாகவோ இல்லை.
இதே போல் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை
எத்தனை கால்மானாலும் – காலியாகவே
வைத்திருந்து கண்டிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களைக்
கொண்டே நிரப்ப வேண்டும் என்கிற
விதிமுறையை திராவிட இயக்கங்கள் அரசாட்சி
செய்யும் காலத்திலும் கடைப் பிடிப்பதில்லை.
தகுதியான வேட்பாளர் கிடைக்கவில்லை என்று
காரணம் காட்டி இந்த நிபந்தனை அடிக்கடி
தளர்த்தப்படுகிறது.
தாழ்த்தப்பட்ட இன மக்களின் தலைவர்கள்
என் கூறிக்கொள்வோரை கூட்டணியில் சேர்த்துக்
கொண்டு விட்டால் – அவர்களும் வாய் திறப்பதில்லை !
8) மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டு
58 ஆண்டுகளுக்கு மேல்
ஆகி விட்ட இன்றைய நிலையில் – ஆந்திரம்,
கர்நாடகம், கேரளம், தமிழ் நாடு
என்று 4 மாநிலங்கள் தனித்தனியே பிரிந்து
அவை நிலைப்பட்டு விட்ட
இன்றைய நிலையில் திராவிடம் என்கிற
சொல்லே அர்த்தமற்றதாகி விட்டது !
எங்கும் குறுகிய மனப்பான்மை –
குடிக்கத் தண்ணீர் கூட தரமறுக்கும் இந்த
அண்டை மாநிலங்களுடன்
தமிழ்நாடு எந்த வகையில் சேர்ந்து வாழ முடியும் ?
திராவிட நாடு கோரிக்கை
தொலைந்து போனதே நல்லதாகி விட்டது !
இன்னும் இந்த கட்சிகள் “திராவிட” என்று
போட்டுக்கொண்டு ஏமாற்றுவதை மக்கள்
அனுமதிக்கக் கூடாது.
தமிழ் நாட்டில் இனி தமிழர் முன்னேற்றத்திற்காகப்
பாடுபடுவோரே தேவை.
தமிழர் கழகங்களே தேவை.
இன்று தந்தை பெரியார் இருந்தாலும் இதையே
தான் சொல்லி இருப்பார்.
தொடரும் ..