வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ?
வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ?
(பகுதி-2 )
அரசியல் முறையில் ஆங்கிலேயரிடமிருந்து
விடுதலை கிடைத்தாலும் –
அதிகாரம் மீண்டும் பிராம்மணர்களிடமே இருக்கும்.
எனவே சுதந்திரம் கிடைத்தாலும் அதனால்
சமுதாய ஏற்றத்தாழ்வுகளில் எந்த வித்தியாசமும்
வந்துவிடப் போவதில்லை.
எனவே சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று
கூறுவதை விட,
சுய மரியாதை பெறுவது என் பிறப்புரிமை
என்று கூறுவது தான்
பொருத்தமாக இருக்கும் என்றார் பெரியார்.
சுதந்திரத்திற்காக போராடுவதாக மகாத்மா காந்தி
கூறினாலும்,
அவர் செயல் இந்து மதத்திற்கு புத்துயிர்
ஊட்டுவதாகவே அமைந்து
வருவதாக பெரியார் கருதினார். இதை
வெளிப்படையாகவும்
கூறத்தயங்கவில்லை அவர் !
1929-ல் முதல் சுய மரியாதை இயக்க மாநாடு
நடைபெற்றது.
பெரியாரின் புரட்சிகரமான கொள்கைகள்
தமிழக மக்களை மட்டும் அல்லாமல்
உலகில் தமிழர் வாழும் பகுதிகள் அனைத்தையும்
சென்றடையத்துவங்கின. சிங்கப்பூர்,
மலேயா போன்ற நாடுகளில் கூட பெரியாரின்
கொள்கைகள் பரவ ஆரம்பித்தன.
அந்த கால கட்டத்தில் தமிழ்நாடு, கேரளா,
ஆந்திரா, கர்னாடகா போன்ற தனித்தனி
மாநிலங்கள் உருவாகவில்லை.
ஆங்கிலேயரின் ஆட்சியில் இவை அனைத்தும்
ஒன்று சேர்ந்து மெட்ராஸ் ராஜதானி
( Madras Province ) என்று
அழைக்கப்பட்ட ஒரே மாநிலம் தான் இருந்தது.
இதில் வாழும் தமிழர், தெலுங்கர், கன்னடியர்,
மலையாளிகள் ஆகியோர் தான்
திராவிடர்கள் என்று அறியப்பட்டார்கள்.
இந்த மாநிலம் தான் திராவிட மாநிலம்.
பிராம்மணர்கள் வடக்கே இருந்து வந்தவர்கள் –
ஆரியர்கள் என்கிற
வேற்று இனத்தை சேர்ந்தவர்கள்.
வடமொழியை ( சம்ஸ்கிருத மொழியை )
தாய் மொழியாகக் கொண்டவர்கள்.
இந்த ஆரியர்கள் துரத்தப்பட வேண்டும்.
ஆரியர்களின் ஆதிக்கத்திலிருந்து திராவிட
நாட்டை மீட்க வேண்டும் என்பது
பெரியாரின் முக்கிய கொள்கை ஆயிற்று.
அந்த கால கட்டத்தில் இருந்த
பிராம்மணர்களின் ஆதிக்கம் அந்த அளவிற்கு
அவரை கொண்டு சென்றது !
1920-களில் ஆங்கிலேயர்களால் கொண்டு
வரப்பட்ட இரட்டை ஆட்சி முறை
காரணமாக தேர்தல்கள் வந்தன.
காங்கிரஸ் கட்சி இந்த இரட்டை ஆட்சி
முறையை ஏற்றுக்கொள்ளாமல் தேர்தலில்
போட்டி இடுவதை தவிர்த்தது.
இந்நிலையில் தேர்தலில் போட்டி இட்ட
நீதிக்கட்சி வெற்றி பெற்று ஆட்சி
அதிகாரத்தையும் கைப்பற்றியது.
ஏறத்தாழ 10 வருடங்கள் ஆட்சியிலும்
பங்கு பெற்றது.
ஆனால் பதவிமோகம்
எந்த கட்சியைத் தான் விட்டு வைத்தது ?
தேர்தலில் பங்கு,
அரசு அதிகாரங்கள் ஆகியவற்றால்
நீதிக்கட்சியில் நிறைய உட்பூசல்கள்
உருவாகி அது தன் செல்வாக்கையும்
மெல்ல மெல்ல இழக்க ஆரம்பித்தது.
இந்த நிலையில் தான் 1938 -ல் பெரியார்
ஈவேரா அவர்களின் தலைமையில்
சுயமரியாதை இயக்கமும், நீதிக்கட்சியும்
ஒன்றாக இணந்தன.
தொடரும் – ( நாளை சந்திப்போமா ? )