திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும்
இன்றைய நிலை பற்றிய ஒரு கருத்தாய்வு –
இன்றைய தலைமுறையினர் தெரிந்துக் கொள்வதற்காக
ஒரு விரிவான பின்னணியுடன் –
எப்போது துவங்கியது இந்த இயக்கம் ?
தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட திராவிட
இயக்கத்தின் வரலாறு உண்மையில் நீதிக்கட்சியின்
(justice party – south indian
liberation federation )
தோற்றத்திலிருந்தே துவங்குகிறது.
20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் – அதாவது
1910 களில் ஆங்கிலேயர் ஆட்சியில்
சமுதாயத்தின் பல துறைகளிலும் பிராம்மணர்களின்
ஆதிக்கம் பெருத்தோங்கி இருந்தது.
நீதித்துறை, கல்வி, அரசாங்க நிர்வாகப்
பிரிவுகள், பத்திரிக்கைகள் என்று அனைத்து
துறைகளிலும் பிராம்மணர்கள் நிறைந்து
காணப்பட்டனர். பிராம்மணர்களின் செல்வாக்கு
உச்ச கட்டத்தில் இருந்த அந்த
காலகட்டத்தில் – தகுதியும்,வசதியும் இருந்தும்
வாய்ப்பு கிடைக்காத, பண வசதி படைத்த,
செல்வந்தர்களின் சிலரின் சிந்தனையில் –
பிராம்மணர்கள் இருக்கும் வரை சமுதாயத்தில்
மற்ற சமூகத்தினர் வாய்ப்பு பெறவே இயலாது
என்ற கருத்து தோன்றி மெல்ல மெல்ல
வலுப்பெற ஆரம்பித்தது.
இதன் விளைவே பிராம்மணர் அல்லாதோருக்காக
துவக்கப்பட்ட நீதிக்கட்சி.(ஜஸ்டிஸ் கட்சி)
1916 -ல் இதைத் துவக்கியவர்களில்
முக்கியமானவர்கள் டாக்டர் டி.எம்.நாயர்,
ஸர் பிட்டி தியாகராசர் ஆகியோர்.
( 1920 -ல் ஜஸ்டிஸ் கட்சி விழாவில் ..)
(ஸர் பி.தியாகராயர் )
துவக்கத்தில் இது செல்வந்தர்களின் கட்சியாகவும்
அதன் முக்கிய நோக்கம்
பிராம்மணர் ஆதிக்கம் இல்லாத சமுதாயத்தை
உருவாக்குவதாகவும் இருந்தது.
இதன் காரணமாக பிராம்மணர் அல்லாதோரிடையே
இந்த கட்சி மெல்ல மெல்ல
செல்வாக்கு பெறவும் துவங்கியது.
மற்றோரு பக்கம் காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு
கொண்டு சமுதாயப்பணிகளில்
ஈடுபட்டு வந்தார் பெரியார் ஈவேரா
(ஈரோடு வேங்கட ராமசாமி ) அவர்கள்.
(பெரியார் ஈவேரா )
அரசியலை விட- சமுதாய சீர்திருத்தமே முக்கியம்
என்று நினைத்த பெரியார் ஈவேரா அவர்கள்
தன் கொள்கைகளுக்கு ஏற்ற இயக்கம்
காங்கிரஸ் அல்ல என்ற முடிவுக்கு வந்தார்.
1925-ல் சுய மரியாதை இயக்கத்தை துவக்கினார்.
சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு மனம்
பொங்கினார் பெரியார்.
தீண்டாமைக் கொடுமை ஒழிய வேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்கள் சம உரிமை பெற வேண்டும்.
மக்களிடையே ஏற்றத்தாழ்வு கூடாது.
ஆணும் பெண்ணும் சரி சமம்.
ஜாதிவேறுபாடுகள் இருக்கும் வரை இது
சாத்தியமில்லை. எனவே – ஜாதிகள்
ஒழிய வேண்டும். அவற்றை வளர்க்கும் –
மதங்களும், கடவுள் நம்பிக்கைகளும்
ஒழிக்கப்பட வேண்டும். மூட நம்பிக்கைகள்
ஒழிய வேண்டும்.
தர்மத்தின் பெயராலும், கர்மத்தின் பெயராலும்
இழைக்கப்படும் ஏற்றத்தாழ்வுகள் நீக்கப்பட வேண்டும்.
மக்கள் சுயமரியாதையுடன் வாழ வேன்டும்.
ஒவ்வொரு மனிதனும் காரணம் புரிந்து
செயல்பட வேண்டும்.
யாரும் யாருக்கும் அடிபணியத் தேவைஇல்லை-
என்பன அவரது அப்போதைய முக்கிய குறிக்கோள்கள் –
சுமார் 85 வருடங்களுக்கு முன்னர் நமது சமுதாயத்தில்
இத்தகைய கருத்துக்களை யோசிக்கவோ, சொல்லவோ
யாருக்கும் துணிச்சல் இருந்ததில்லை !
பெரியார் ஒரு அற்புதமான சிந்தனையாளர் !
தொடரும் – (நாளை சந்திப்போம்)