விழுப்புரத்தில் ஞாயிறு (07/03/2010)அன்று
கலைஞர் பேசியது –
——————————–
(இதில் ஒரு எழுத்து கூட என் சேர்க்கை அல்ல.
நக்கீரன் செய்தியில் வந்ததில் இருந்து சில
பகுதிகளை (மட்டும் ) தொகுத்துப் போட்டிருக்கிறேன் –
அவ்வளவு தான். இதனைப் படிக்கும்போது எனக்கு
ஏற்பட்ட எண்ணங்கள் மற்றவர்களுக்கும் ஏற்பட்டால்
அதற்கு முழு பொறுப்பு கலைஞரே தான் !
என் பங்கு இதில் எதுவுமே இல்லை !)
—————————–
இதுவரை செய்தது இந்த நாட்டு மக்களுக்குப் போதும்,
இனி செய்ய வேண்டியதை இருப்பவர்கள் வந்து
செய்யுங்கள் என்ற அழைப்புவிடுகின்ற நிலையிலே
உள்ளவன்.
86 வயதிலே இருக்கிறேன் என்று
எனது வயதை இங்கு பேசியவர்கள் அடிக்கடி
குறிப்பிட்டு என்னுடைய மனதில் பெரிய
குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர்.
86 வயது என்பதை இப்படி அடிக்கடி சொல்லிக்
காட்ட வேண்டுமா? அது எனக்கு ஒரு சோர்வை
ஏற்படுத்தாதா?
காலையில் இருந்து மேடைகளில் 86, 86 என்று
சொன்னார்கள். நல்லவேளை என் மனைவி
என்னோடு கூட்டத்துக்கு வரவில்லை.
வந்திருந்தால் எவ்வளவு வேதனைப்பட்டு இருப்பாள்
என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தமிழகத்தில் உள்ள சிறுபான்மை, குறிப்பாக
இஸ்லாமிய சமுதாய மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்,
பிற்படுத்தப்பட்டோர் ஆகியோர் ஒன்று சேர்ந்து அதன்
நிழலிலே நீதி கோருகின்றார்கள்… அவர்களுக்கு
அப்படி என்ன அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்றால்,
வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்பில் இடமில்லை.
அவற்றை உயர் ஜாதிக் காரர்கள், சீமான்கள்,
பூமான்கள் அதை தங்களின் வேட்டைக் களமாக
ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் …
நீதி கோரி தொடங்கிய கட்சி,….. இன்றைக்கும்
அதே நீதியைக் கோரி இன்னமும் தொடர்ந்து
போராடிக் கொண்டிருக்கிற நிலையில்…
தி.மு.க. ஏழைகளின் இயக்கம். இங்கே ஏதோ
பொன்முடி பொன்னாலான தகடுகளைத் என்னிடம்
தந்தார். நான் உள்ளபடியே வருத்தப்படுகிறேன்.
அது வெறும் தங்கமாக இருந்தால் வாங்கிய
மேடையிலேயே வீசியிருப்பேன்….
இந்தப் பழக்கத்தை இன்றோடு விட்டுவிடுங்கள்.
ஏனென்றால், அந்தப் பொன்னின் துளியளவு
தகட்டைப் பார்த்தாலே ஆகா, கண்ணைப்
பறிக்கிறதே, என்று எண்ணும் ஏழை, எளியவர்கள்
இந்தக் கூட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை
மறந்துவிடாதீர்கள்….
மக்கள் ஏழையாக இருக்கிறார்கள் என்பதற்காக நாம்
ஏழையாக இருக்க முடியாது. நாம் ஏழ்மையில்
இருந்து விடுபட வேண்டும் என்று எண்ணும் அதே
நேரத்தில் மக்களையும் ஏழ்மையில் இருந்து
விடுவிப்பவர்களாக இருக்க வேண்டும்.
எளிமையானவர்களைப்போல வாழ்ந்தாலே போதும்.
ஒரு கட்சி நடத்துபவர் என்ற எளிமை நமக்குத்தேவை.
நாம் எளிமையாக இருந்தால்தான் எளியவர்களை
காப்பாற்ற முடியும்.
எங்கே இருக்கிறது பணம். யாரோ கேட்ட குரல்
காதில் விழுகிறது, சட்டசபையில் கேட்ட குரல்.
நாங்கள் நினைத்தால் பணத்திற்கா பஞ்சம் ?
மாற்றுத்திறனுடையவருக்காக ஒரு தனி இலாகாவை
ஏற்படுத்த வேண்டும் என்று ஐ.நா. சபையில்
ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
அதை நிறைவேற்ற வேண்டும் என்று இந்தியா
எண்ணவில்லை. அதை நிறைவேற்ற வேண்டும்
என்று மத்திய அரசுக்கு நினைவூட்ட இருக்கிறேன்.
நினைவூட்ட வேண்டுமா, வேண்டாமா என்று இங்கு
விழுப்புரத்தில் குழுமி இருக்கும் நீங்கள் கையை
உயரே தூக்கி உங்கள் பதிலை தெரிவியுங்கள்.
ஐ.நா.சபையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி
மாற்றுத் திறனாளிகளுக்கென தனி ஒரு இலாகாவும்,
அதற்கொரு மந்திரியும் நியமிக்கலாம்
என்று கருதுகிறேன்.