பகல் கொள்ளையைத் தடுக்க …
நம் நாட்டில் எத்தனையோ விதங்களில் மக்கள்
கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள்.
ஏமாற்றப்படுகிறார்கள்.
விவரம் புரியாமல் –
கேட்கும் வழி தெரியாமல் –
வாய்மூடி, மௌனமாக தினம் தினம்
செத்துக்கொண்டிருக்கும் பாமர மக்களைக்
காக்க,அரசாங்கமோ, அர்சியல்வாதிகளோ
எதுவுமே செய்வதில்லை.
காரணம் –
அவர்களுக்கும் இந்தக் கொள்ளையில்
பங்கு இருக்கிறது
என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?
– மக்களுக்கு மிகவும் தேவைப்படும்
உயிர் காக்கும் மருந்துகள். மருந்துகளை யாரும்
ஆடம்பரம் என்று எந்த வகையிலும்
சொல்லிவிட முடியாது. அவசியம் ஏற்பட்டாலொழிய
யாரும் மருந்துப் பொருட்களை வாங்குவதில்லை.
அத்தகைய, அத்தியாவசியமான பொருட்கள் யாவும்
மக்களுக்கு நியாயமான முறையில், தரத்தில்,
விலையில் -கிடைப்பதை உறுதி செய்வது
ஒரு ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தின்
கடமை இல்லையா ?
மருந்து தயாரிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட
வகுப்பினரின்,
குழுவினரின்,
– ஏகபோக உரிமையாகி விட்டது.
சாதாரணமாக எந்தப் பொருளாக இருந்தாலும்,
அதன் விலையை நிர்ணயிக்கும்
விஷ்யங்கள் என்ன என்ன ?
1) மூலப்பொருட்களின் விலை,
(cost of raw materials)
2) உற்பத்திச்செலவு,(cost of
production/manufacturing)
3) லாப சதவீதம் (profit percentage )
இவை குறித்த தகவல்கள் யாவும் வெளிப்படையாகத்
தெரிய வேண்டும். கத்தரிக்காய், வெங்காயம்,
உருளைக்கிழங்கு போன்ற -சாதாரண
விவசாயப்பொருட்களுக்கு கூட –
உற்பத்தியாகும் இடத்தில் என்ன விலை,
விற்பனைக்கூடத்திற்கு கொண்டு செல்ல
ஆகும் செலவு எவ்வளவு,
மொத்த விற்பனைகூடத்தில் என்ன விலை,
சில்லரையில் எந்த விலைக்கு விற்கப்படுகின்றது –
என்று விலா வாரியாக வெளிப்படையாகச் செய்திகள்
அறிவிக்க்கப்படும்போது —
மருந்துகள் தயாரிப்பில் – ஒவ்வொன்றையும்
தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களின்
வெளிப்படையான,
புரியும்படியான பெயர் என்ன (அட்டையில்
அச்சடித்திருக்கும் புரியாத பெயர்களை விடுங்கள் ),
அதன் விலை என்ன,
உற்பத்திச் செலவுகள்,
போக்குவரத்துச்செலவுகள் என்ன,
லாப சதவீதம் என்ன –
என்பது யாருக்காவது தெரியுமா ?
எந்த மருந்து உற்பத்தியாளராவது
தெரியப்படுத்துகின்றார்களா ?
மொத்த விற்பனை கூடத்தில் (wholesale market)
10 ரூபாய்க்கு விற்கப்படும் வெங்காயம், சில்லரை
வண்டிக்காரரிடம் 15 ரூபாய்க்கு விற்கப்பட்டால், அதன்
நியாயம் நமக்குப் புரிகிறது.
ஆனால் ஒரு மருந்துப் பொருளின் உற்பத்தி விலை
50 காசுகளாக இருக்கும்போது,
அதன் விற்பனை விலை 50 ரூபாய்கள்
என்று கொள்ளை விலை கூறினால் –
இதைத் தடுக்க வேண்டிய
பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு இல்லையா ?
மருந்துப் பொருட்களின் தயாரிப்பாளர்கள்/
உற்பத்தியாளர்கள்
எண்ணிக்கையில் மிகச்சிலர் தான்.
அவர்கள் தங்களுக்குள்
கூட்டணி அமைத்துக்கொண்டு எல்லாருமே
விலையை கொள்ளை லாபத்திற்கு
உயர்த்தி அறிவித்தால்,
இதைக் கண்டு பிடிக்க, தடுக்க
சாமான்ய மக்களால் முடியுமா ?
மருந்து தயாரிப்பாளர்கள்,
மருத்துவ மனைகள்,
மருத்துவர்கள்,
விற்பனைப்பிரதிநிதிகள்,
இவர்கள் தங்களுக்குள் கூட்டணி
அமைத்துக்கொண்டு –
அரசியல்வாதிகளையும் கைக்குள்
போட்டுக்கொண்டு பொதுமக்களைக் கொள்ளை
அடிக்கிறார்களே
இதை யார் தடுப்பது ? எப்படித் தடுப்பது ?
மருந்து தயாரிப்பு நிறுவனங்களும்,
விற்பனைப் பிரதிநிதிகளும
(medical representatives ) தொடர்ந்து
மருத்துவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டெ
இருக்கிறார்களே –
இதன் பொருள் என்ன ?
குறிப்பிட்ட மருந்துப் பொருட்களின்
விற்பனை அளவைப் பொறுத்து சம்பந்தப்பட்ட
மருத்துவர்களுக்கு
கமிஷன் போவது அரசாங்கத்துக்கோ,
அரசியல்வாதிகளுக்கோ தெரியாதா ?
50 காசு மாத்திரையை 50 ரூபாய்க்கு விற்கும்
இந்த அநியாயத்தை, பகல் கொள்ளையைத்
தடுத்து நிறுத்தவே
முடியாதா ?
ஏன் முடியாது ? நிச்சயம் முடியும் –
20 – 30 சதவீத லாபத்திற்கு
மேல் எந்த மருந்துப் பொருளின் விலையும்
நிர்ணயிக்கக்ப்படக்கூடாது
என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால் –
விலையைத் தொடர்ந்து கண்காணித்தால் –
இது நிச்சயம் முடியும் !
எந்த நொண்டிக் காரணத்தையாவது சொல்லி
இது நடைமுறையில்
சாத்தியமில்லை என்று கூறுவார்களேயானால் –
மருந்து உற்பத்தியை
அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும்.
பின் தன்னாலேயே மருந்துகள் நியாயமான
விலைக்கு கிடைக்கும் !
மக்களின் நலனைக் கருதி -போக்குவரத்தை
நாட்டுடைமை
ஆக்கவில்லையா ?
அது போல் மக்களின் நலன் கருதியே
மருந்து உற்பத்தியையும் நாட்டுடைமை ஆக்கலாம்.
இந்த முயற்சியை அரசியல்வாதிகள் மேற்கொள்ள
முன்வர மாட்டார்கள் – வரும்படி போய்விடுமே !
(பொது நியதியையும் மீறி எந்தக் கட்சியாவது
முன் வந்தால் நல்லதே –
இருக்கும் ஒன்றிரண்டு நேர்மையான கட்சிகளும்,
அரசியல்வாதிகளும் -பிழைக்கத் தெரியாதவர்கள்
என்று முத்திரை குத்தப்பட்டு செல்வாக்கின்றி
இருக்கிறார்களே !)
சக்தியுள்ள தனி மனிதர்களோ, தொண்டு
நிறுவனங்களோ இந்தக் கருத்தை முன்கொண்டு
செல்ல வேண்டும். மக்கள் கருத்தைத் திரட்ட
வேண்டும்.
போதிய அழுத்தம் கொடுக்க்கப்பட்டால் –
இதனைச்செய்ய வேண்டிய கட்டாயம்
அரசாங்கத்துக்கு ஏற்படும். சாதாரண மக்களுக்கும்
விடிவு பிறக்கலாம் !