மனமோகனா …
பர்ஸ்ட் நியுயார்க் என்பது அந்த அமெரிக்க வங்கியின் பெயர் !
அதன் டைரெக்டர்களில் ஒருவர் நமது கதாநாயகன்.
(30 வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் வசித்து
வரும், பல வகையான வியாபாரங்களில் ஈடுபட்டு வரும் –
ஒரு இந்தியர் தான் அவர் ).
டைரெக்டர் பதவியில் இருந்த அதே வங்கியில் இருந்து தன்
பெயரிலேயே 1 கோடியே 20 லட்சம் டாலர் (கிட்டத்தட்ட
60 கோடி ரூபாய்) கடன் பெற்றுக்கொண்டார். வருடங்கள்
பல கடந்தன. கடனைத் திருப்பச்செலுத்தவில்லை.
வங்கி வழக்கு தொடர்ந்தது – கொடுத்த கடனை வசூல் செய்ய.
என்னிடம் இருந்தால் தானே கொடுக்க. சுத்தமாக கையில்
காசே இல்லை என்றார். இவ்வளவு பெரிய சொகுசு பங்களாவில்
வசிப்பது எப்படி என்று கேட்டதற்கு அவர் வசூல் கோர்ட்டில்
சொன்ன பதில் –
இந்த இருப்பிடம் என்னுடையதல்ல. என் தம்பியுடையது!
நான் வாய்வழியான (?) ஒப்பந்தம் மூலம் அவருக்கு மாதம்
5000 டாலர் வாடகை கொடுத்து இங்கு குடியிருந்து
வருகிறேன். நானும் என் மனைவியும் ஒரு ஓட்டலில்
வேலை செய்து மாதம் 6,700 டாலர் சம்பாதிக்கிறோம்.
அதில் இந்த வாடகை போக மீதி வருமானத்தில் தான் எங்கள்
வாழ்க்கையே ஓடுகிறது !
வழக்கு விவரமாக நடைபெற்றபோது பல விஷயங்கள்
வெளி வந்தன. மிகப்பெரிய ஆடம்பரமான பங்களாவில்
உயர்தர வாழ்க்கை நடத்தி வந்த அந்த நபருக்கு இந்த
ஓட்டல் உத்தியோகத்தைத் தவிர வேறு பல வழிகளிலும்
வரும்படி இருந்தது.ஆனால் எதுவும் வெளியில் சொல்லிக்
கொள்ளும்படி இல்லை !
தான் டைரெக்டராக இருந்த வங்கியில், தகுதி இல்லாத
நபர்களுக்கு கடன் வாங்கிக்கொடுப்பதையும் பின்னர்
அவர்களுக்கு தன் செல்வாக்கைக் கொண்டு கடனில்
இருந்து தள்ளுபடி வாங்கித் தருவதையும் வாடிக்கையாகக்
கொண்டிருந்திருக்கிறார் இந்த நபர்.இதிலேயே எக்கச்சக்கமான
வரும்படி !
1997ஆம் ஆண்டிலேயே இந்த நபருக்கு கொடுக்கப்பட்ட
1 கோடியே 20 லட்சம் டாலரைத் தள்ளுபடி செய்ய
முகாந்திரம் ஏதும் இல்லை என்ற முடிவிற்கு வந்தது வங்கி.
ஆனாலும் வசூல் செய்ய மும்முரமான வழி எதுவும்
காணப்படாத நிலையில் 2000ஆவது ஆண்டு, அதிபர்
பில் கிளிண்டன் பதவிக் காலம் முடிவடைவதற்கு சரியாக
ஒரு மாத காலத்திற்கு முன்னர் இவருக்கு கடனில் இருந்து
பெரும் தள்ளுபடி அளிக்க்கப்பட்டு வெறும் ஒரு லட்சத்து
25 ஆயிரம் டாலருடன் அவர் கடன் சமன் செய்யப்பட்டு
விட்டது.
அதாவது சுமார் 60 கோடி ரூபாய்க்கு பதிலாக
வெறும் ஆறு கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டு கடன்
முடித்து வைக்கப்பட்டது. (பில் கிளிண்டனிடம்
அந்த அளவிற்கு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார்
இந்தப் பேர்வழி -பதிலுக்கு இவர் கில்லாடி கிளிண்டனுக்கு
என்ன பதில் உபசாரம் செய்தாரோ – அவருக்கும்
கிளிண்டனுக்கும் மட்டுமே வெளிச்சம் !)
1992 க்கும் 1995 க்கும் இடையே இந்தியாவில்,
வங்கிப்பண பறிமாற்ற மோசடிகளில் ஈடுபட்டதாக
CBI யால் 5 வழக்குகள் இவர் மீது தொடுக்கப்பட்டன.
பின்னர் அதே CBI யால் இந்த வழக்குகள் திரும்பப்
பெற்றுக்கொள்ளப்பட்டன !( ஏனோ ?)
2008ம் ஆண்டு – வாஷிங்கனில் (அமெரிக்கா) உள்ள
இந்திய தூதரைத் தொடர்பு கொண்ட இந்திய பிரதமரின்
அலுவலகம், இந்த நபருக்கு பத்மஸரீ பதக்கம் அளிக்க
பரிந்துரை செய்து கடிதம் அனுப்பும்படி கேட்டுக்கொண்டது.
(இந்த நபர் அமெரிக்காவில் இருப்பதால், முறைப்படி
இந்திய தூதரகத்தின் மூலம் தான் இதற்கான பணி
துவக்கப்பட வேண்டும்.)
அப்போதைய இந்திய தூதரான ரொனென் ஸென் இந்த
நபரின் பின்னணியை விவரித்து, இப்பேற்பட்ட ஆசாமிக்கு
பதக்கம் அளிப்பது முறையாகாது என்று பிரதமரின்
அலுவலகத்திற்கு பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
ரொனென் ஸென் பணி ஓய்வு பெற்று சென்று விட்ட பிறகு
மீண்டும் பிரதமர் அலுவலகத்திலிருந்து இந்திய தூதரைத்
தொடர்பு கொண்டு (இந்த முறை பத்ம பூஷன் !)
பரிந்துரை கடிதத்தை விரும்பியவாறு பெற்றிருக்கிறார்கள் !
அதன் விளைவு கடந்த 26/01/2010 குடியரசு தினத்தை
முன்னிட்டு பத்ம பூஷன் பட்டம் இவருக்கு அளிக்க்கப்
பட்டிருக்கிறது.கூறப்பட்டுள்ள காரணம் – இந்திய அமெரிக்க
நல்லுறவை வளர்க்க அரும்பாடு பட்டமை !
பாரத ரத்னா,பத்மவிபூஷனுக்கு அடுத்தபடியாக நாட்டின் மிக உயரிய
விருதான பத்ம பூஷன் பதக்கத்தை இவ்வாறு பெற்ற நபர்-
அமெரிக்க இந்தியரான – திரு. சந்த் சிங் சட்வால்.
நான் இவரைப் பார்த்திருக்கிறேன் –
தாடி வைத்திருப்பார் !
டர்பன் கட்டி இருப்பார் !!
ஆமாம் இவரும் ஒரு சீக்கியர் !!!
இது ஒன்று போதாதா இவர் பதக்கம் பெற ?