தினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் –
சில கேள்விகள் !
இன்றைய தினமணி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள
ஒரு செய்தி –
“சென்னை, பிப். 7: முதல்வருக்கு தமிழ்த் திரையுலகம்
சென்னையில் சனிக்கிழமை நடத்திய பாராட்டு விழாவை
தினமணியில் ஏன் செய்தியாகப் பிரசுரிக்கவில்லை என்று
பல வாசகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும்
தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை வினவினர்.
முதல்வர் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்
முறையாக அனுப்பப்படவில்லை.
கேட்டபோது, “”அரங்கில் நுழைவதற்கான
அனுமதியையும் (பாஸ்), நிகழ்ச்சிக்கான
அழைப்பிதழையும் – தேவையென்றால் பிலிம் சேம்பரில்
வந்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்று நிகழ்ச்சி
ஏற்பாட்டாளர்கள் வாய்மொழியாகக் கூறினர்.
மேலும் புகைப்படக்காரரை அரங்கினுள் அனுமதிக்க
முடியாது, கலைஞர் தொலைக்காட்சியைத் தவிர
மற்றவர்கள் இந்த நிகழ்ச்சியைப் படம் பிடிக்க
அனுமதி இல்லை என்று கண்டிப்பாக
மறுத்துவிட்டனர். (ஆனால்
ஒரு சில புகைப்படக்காரர்கள் அனுமதிக்கப்பட்டதாகத்
தெரிகிறது.)
இந்தக் காரணங்களால்தான் இந்த நிகழ்ச்சியை
செய்தியாகத் தர முடியவில்லை.”
இதில் சில கேள்விகள் எழுகின்றன –
இந்த நிகழ்ச்சியில் தமிழக முன்னணி நட்சத்திரங்கள்
அனைவரும் கலந்து கொண்டதால், அவர்களால்
கலை நிகழ்ச்சிகளும், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும்
நடத்தப்பெற்றதால், இந்த நிகழ்ச்சிக்கு வணிக
முக்கியத்துவம் உள்ளது. இந்த நிகழ்ச்சியை
ஒளிபரப்பும் தொலைக்காட்சி, விளம்பரங்களின் மூலம்
கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு
இருக்கிறது.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை படம் பிடிக்க
முதல்வரின் சொந்த குடும்ப நிறுவனமான “கலைஞர்”
தொலைக்காட்சியை மட்டுமே அனுமதிப்பது என்றால்,
ஒட்டுமொத்த வருமானமும் கலைஞரின் சொந்தத்
தொலைக்காட்சிக்கே என்றாகிறது.
முதல்வர் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு
பிரிவினருக்கு சில ஆதாயங்களை/ சலுகைகளை
அளிக்கிறார்.அதற்கு நன்றி செலுத்தி அவர்கள்
கலை நிகழ்ச்சிகளை அளிக்கிறார்கள். அந்த
நிகழ்ச்சிகளைப் படம் பிடித்து விற்று முதல்வரின்
குடும்ப தொலைக்காட்சி கோடிக்கணக்கில் பணம்
சம்பாதிக்கிறது.
முதல்வரின் அதிகாரப் பிரயோகத்தின் மூலம்
அவரது சொந்த குடும்ப நிறுவனமான கலைஞர்
தொலைக்காட்சி கோடிக்கணக்கில் சம்பாதிப்பது
எந்த விதத்தில் முறையாகும் ?
அரசாங்க சொத்தை தனக்குத் தானே
விற்றுக்கொண்டதாக –
முன்னாள் முதலமைச்சரின் மீது வழக்குப் போட்ட
இந்நாள் முதல்வர் தன் மீதும் அதே போன்ற வழக்கு
உருவாக வழி வகுக்கின்றாரா ?
அரசாங்க
அதிகாரத்தைப் பயன்படுத்தி சுயலாபம் சம்பாதிப்பது
தவறு இல்லையா ?