தமிழ்த் தொலைக் காட்சிகளில் …
தொலைக் காட்சி என்பது விஞ்ஞானம் மனித குலத்துக்கு
அளித்துள்ள மிகச்சிறந்த பரிசு.
மிகச்சுலபமாக, உடனடியாக,
எதையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் கொண்டது.
வயது முதிர்ந்தவர்களாகட்டும்,பெண்களாகட்டும்,
சிறு வயதினராகட்டும்- எல்லாத் தரப்பினரையும்
கவரக் கூடியது;
உவகை தரக்கூடியது, உதவக் கூடியது.
ஒரு சமுதாயத்தை
மிகவும் அறிவார்ந்ததாகவும், பண்பு நிறைந்ததாகவும்,
உயர்ந்த மரபு உள்ளதாகவும், கலை உணர்வு
மிக்கதாகவும் உருவாக்கக்கூடிய வல்லமை
உடையது.
ஆனால் நம் தொலைக்காட்சி நிலையங்களோ,
இதனை சற்றும்
உணர்ந்ததாகத் தோன்றவில்லை.
ஒரு சில இதை உணர்ந்திருந்தாலும் சரியான
விதத்தில் பயன்படுத்திக் கொள்வதில்லை.
(மக்கள் தொலைக்காட்சி நீங்கலாக )
முட்டாள்தனத்தில் ஒன்றோடொன்று
போட்டியிடுகின்றன.
அவர்கள் முட்டாள்களா – அல்லது பார்ப்பவர்களை
முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு
நிகழ்ச்சிகளை
அமைக்கின்றார்களா என்று தெரியவில்லை !
கோணங்கித்தனமாக உடை அணிந்துகொண்டு,
கேவலமான தமிழ் உச்சரிப்புடன்,
ஆபாசமான அங்க அசைவுகளுடன்,
அறிவிப்பாளர்களாக இளைஞர்கள், இளைஞிகள் !
அர்த்தமில்லா நெடுந்தொடர்கள் (மெகா சீரியல்கள்).
மிகவும் மென்மையானவர்கள் என்று கருதப்படும்
நம் பெண்களை
இவர்கள் சித்தரிக்கும் விதம் மகா கொடுமை.
இவர்கள் உருவாக்கும் பாத்திரங்கள் நமக்கு மனித
குலத்தின் மீதே நம்பிக்கை இல்லாத அளவிற்கு
வெறுப்பேற்றுகின்றன.
மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை, அறிந்து
கொள்ள வேண்டியவை, பார்க்க வேண்டியவை,
கேட்க வேண்டியவை எவ்வளவோ உள்ளன.
நாம் பார்க்க இயலாத இடங்கள்,(அற்புதமான இயற்கை
அழகு கொஞ்சும் ஊர்கள், மலைப் பிரதேசங்கள,
நம்மை அடுத்துள்ள நாடுகள், தொலைவில் உள்ள
நாடுகள், அவற்றில் உள்ள முக்கியத்துவம் பெற்ற
இடங்கள் , அருவிகள், நீர்வீழ்ச்சிகள், சுற்றுலாத்
தலங்கள்,அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறைகள்) –
தொழிற்சாலைகள் (ஒர் கண்ணாடிப் பொருள்
உருவாவதையோ,
கார் உருவாவதையோ, கப்பல் உருவாவதையோ,
ராணுவ டாங்குகள் உருவாவதையோ எவ்வளவு பேர்
பார்த்திருப்பார்கள் ?),
சரித்திரத்தில் இடம் பெற்ற முக்கியமான நிகழ்வுகள்
(முதல் உலகப்போரையோ
இரண்டாம் உலகப்போரையோ நம்மில் யாராவது
பார்த்திருக்கிறோமா?)
மொழி அறிவை வளர்க்கக்கூடிய நிகழ்ச்சிகள்,
அறிவுத்திறனை
பெருக்கக்கூடிய வினா-விடை புதிர் நிகழ்ச்சிகள்,
மாணவர்களுக்கும், மேல்நிலைக் கல்வியைத்
தொடரும் நிலையில் உள்ள இளைஞர்களுக்கும்
தேவைப்படும் செய்திகள்,
தொழிலாளர்களின் வேலைத்திறனை
மேம்படுத்திக் கொள்ள உதவும் செய்திகள்,முறைகள்,
இயல், இசை, நடனம், போன்ற நுண்கலைகளை
ரசிக்கும் அடிப்படை அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகள்,
கிரிக்கெட்டைத்தவிர்த்து மற்ற
விளையாட்டுகளையும், உடற்பயிற்சி முறைகளையும்
சொல்லித்தரக்கூடிய, அவற்றில்
ஆர்வத்தை உண்டு பண்ணக்கூடிய நிகழ்வுகள் –
இப்படி சமுதாயத்திற்கு எவ்வளவோ உபயோகமாக
இருக்க வேண்டிய ஒரு சாதனம் –
சமுதாயச் சீர்கேடுகளை உண்டு பண்ணும்,
ஊக்குவிக்கும் ஒரு அருவருப்பான, ஆபாசமான
ஊடகமாக பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கின்றதே !
இதனை மாற்றும் திறன் கொண்டவர்கள்
யாராவது வருவார்களா ?
//இதனை மாற்றும் திறன் கொண்டவர்கள்
யாராவது வருவார்களா ?//
கடுமையான சட்டங்கள் மூலமே இதனை செய்யமுடியும். என்ன செய்ய சட்டம் இயற்றுவோரே தொலைகாட்ச்சி சேனல் வைத்திருக்கிறார்களே…