எலி பெருச்சாளியானதும் மீண்டும்
பெருச்சாளி எலி ஆனதுமான கதை !
தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ,
மத்திய அரசு ஒரு நல்ல காரியம் செய்து விட்டது !
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரங்களை
ரத்து செய்வது என்று முடிவு செய்து விட்டது !
நீண்ட நாட்களாக பலரும் எழுப்பி வரும் கோரிக்கை இது.
சுதந்திர இந்தியாவின் பெரும் சாபக்கேடு அரசியல்வாதிகள்.
(மிகச்சில விதிவிலக்கானவர்களைத் தவிர )
எந்தெந்த வழிகளில் ஏமாற்றிப் பிழைக்கலாம் என்பதே
அல்லும் பகலும் சிந்தனை இவர்களுக்கு.
அமைச்சர் பதவியோ, வேறு அரசு வாரியங்களின்
பதவிகளோ எதுவும் கிடைக்காத அரசியல்வாதிகளைத்
திருப்திப்படுத்த – இந்தா நீயும் சம்பாதித்துக் கொள் –
என்று வழி காட்ட கண்டு பிடிக்கப்பட்ட சாதனம் தான்
தனியார் பொறி இயல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள்.
புற்றீசல் போல, காளான்களைப் போல முளைத்துவிட்ட
இந்த கல்லூரிகளின் பிறப்பிடமே தமிழ் நாடு தான்.
நாளா வட்டத்தில், தனியார் கல்லூரி என்கிற வழியில்
சம்பாதித்ததில் திருப்தி அடையாததால், எலி பெருச்சாளி
ஆன கதையாக, தனியார் கல்லூரிகள் நிகர் நிலைப்
பல்கலைக்கழகங்களாக – அடித்துப் பிடுங்கும்
பெரியண்ணன்களாக வளர்ந்தன.
குறிப்பிடத்தக்க சில கல்வி நிறுவனங்களைத்தவிர
மற்ற நி.நி.பல்கலைக்கழகங்கள் அனைத்தும்
பணம் சம்பாதிக்க புதிது புதிதாக வழியைக் கண்டு பிடிப்பதில்
தான் அக்கரை செலுத்தின. மாணவர்களுக்கு இஞ்சினீயர் /
டாக்டர் பட்டம் பெற முடிந்ததே தவிர உண்மையில்
அதற்கான முறையான கலவியை அவர்கள்
பெறவே முடியவில்லை.
மக்களில் பலர் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்ததைத்தான்
இன்று உச்ச நீதி மன்றத்தின் தலையீட்டிற்குப் பின்னர்
மத்திய அரசு நிறைவேற்ற முன்வந்துள்ளது.
இதுவும் நிறைவேறினால் தான் நிச்சயம்.
துரதிருஷ்டவசமாக மாணவர்கள் சிலரும், பெற்றோர்
சிலரும் இதனை சரியாகப் புரிந்துக்கொள்ளவில்லை.
இதனால் பாதிக்கப்படப் போவது நிச்சயமாக இந்த
பணப் பெருச்சாளிகள் மட்டும் தான்.இதன் காரணமாக
அவர்கள் கிளப்பி விடும் புரளிகளால் சில மாணவர்களும்,
பெற்றோரும் அச்சமடைந்துள்ளனர்.
பிடுங்கப்படுவது நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்கிற
அந்தஸ்தும், தடுக்கப்படுவது அதன் மூலம் அவர்கள்
அடித்து வந்த கொள்ளைகளும், அதிகார துஷ்பிரயோகமும்
மட்டும் தான்.
இந்த நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக
உயர்வு பெறும் முன்னர் அவை இருந்தது போலவே
கல்லூரி என்கிற அந்தஸ்துடன் தொடரும்.
அங்கு படிக்கும் அனத்து மாணவர்களும் அண்ணா
பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படுவார்கள்.
இதற்கான உறுதிமொழியை அரசாங்கம்
ஏற்கெனவே கொடுத்துள்ளது.
கணட கண்ட ராமசாமி / குப்புசாமி நி.நி.
பல்கலைக்கழகங்களின் பட்டங்களை விட,
அண்ணா பல்கலைக்கழக பட்டத்தைப்
பெறுவது மாணவர்களின் மதிப்பையும், வேலை
வாய்ப்பையும் கூட்டவே செய்யுமே தவிர எந்த விதத்திலும்
பாதிப்பை ஏற்படுத்தாது.
மேலும், அவர்கள் எந்த பிரிவில் படித்து வந்தார்களொ,
அதே பிரிவில் படிப்பைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள்.
அந்த குறிப்பிட்ட பிரிவு தற்போது அண்ணா
பல்கலைக்கழகத்தில் இல்லை என்றால் – தற்போது
அவர்களுக்காகவே புதிதாகப் பிரிவுகள் துவக்கப்படும்.
எனவே உண்மையான மாணவர்களும், பெற்றோர்களும்
அஞசத்தேவையே இல்லை.
அஞ்ச வேண்டியவர்கள், ஊழல் துணைவேந்தர்களும்,
இணைவேந்தர்களுமாகப் பணியாற்றி வந்த
(மனைவிமார், மச்சான்மார்,மாமனார்மார்,அண்ணன்மார்,
தம்பிமார் போன்ற “மார்”களும்,) உரிய தகுதி இல்லாமல்
உரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் அரைச்
சம்பளத்திற்கு பணியாற்றி வரும் 70 வயது 80 வயது
ரிடையர்டு தாத்தாக்களும் தான்.
இவர்களுடன் இன்னொரு பிரிவு மாணவர்களும் இப்போது
சேர்ந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் யார் தெரியுமா ?
வெளி மாநிலங்களைச் சேர்ந்த, முறையாக கல்வித
தகுதி பெறாத, அவர்கள் மாநிலத்தில் படிப்பைத் தொடர
தகுதி பெறாத, பெரும் அளவில் பணத்தைக் கொடுத்து
தமிழ் நாட்டில் இந்த நி.நி. பல்கலைக்கழகங்களில்
சேர்ந்து சுலபமாக ஒரு இஞ்சினீரிங் /டாக்டர் பட்டத்தை
வாங்கிக்கொண்டு போகும் முயற்சியில் உள்ள சில
பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள்.
சுலபமாக டிகிரி பெறும் வாய்ப்பு பறி போகிறதே
என்கிற எரிச்சல் இவர்களையும் களத்தில் இறக்கி உள்ளது.
யோசித்துப் பாருங்கள். நிகர்நிலை கல்விக்கழகங்களை
நடத்துபவர்கள் – மாணவர்களுக்கும்,
பெற்றோர்களுக்குமாகவா கூச்சல் போடுகின்றார்கள்.
இவர்கள் வருமானம் போய் விடுமே என்று
அலறுகின்றார்கள். மற்றவர்களையும் தூண்டி விடுகிறார்கள்.
இந்த நி.நி.பல்கலைக்கழகஙகளின் பின்னால்
ஒளிந்திருக்கும் நிஜ சொந்தக்காரர்கள் யார் யார் என்று
ஒருக்கணம் யோசித்துப் பாருங்கள்.
என் கண்ணிற்கு தங்க்கக்க்க் பாலு,
ஐசரி வேலன்/கணேஷ், ஏ.சி.ஷண்முகம், பொன்முடி,
துரைமுருகன், ஜேப்பியார், ஜெகத்ரட்சகன், திருநாவுக்கரசு
போன்றவர்கள் தான் தென்படுகின்றார்கள்.
(மற்ற பெயர்கள் உடனடியாக
நினைவுக்கு வரவில்லை. அந்தந்த ஊரில்
இருப்பவர்களுக்கு உண்மையான
உரிமையாளரான லோக்கல் அரசியல்வாதி யார் யார்
என்பது தெரியும் !).
விட்டது சனியன் என்று மக்கள் மகிழ்ச்சி அடைய
வேண்டிய விஷயம் இது.
மத்திய அரசு மீண்டும் பல்டி அடிக்காமல், இந்த உத்திரவை
உடனடியாக அமுல்படுத்த எல்லாம் வல்ல (!)
இறைவனை வேண்டுவோமாக!
இது முடிந்த பிறகு, இத்தோடு நில்லாமல்,
இந்த நி.நி.பல்கலைக்கழகங்களுக்கு
அனுமதியும் அங்கீகாரமும் கொடுத்த பேர்வழிகள்
யார் யார் என்று கண்டு பிடித்து ஊழலில் சம்பந்தப்பட்ட
அனைவரையும் கூண்டிலேற்ற வேண்டும்.
ஊரைக்கொள்ளையடித்து சம்பாதித்த பணம் அனைத்தும்
ஏற்கெனவே உறவினர்களின் பெயரிலும், பினாமி
பெயரிலும் சொத்துக்களாக மாற்றப்பட்டிருக்கும்.
அவற்றையும் விசாரிக்க மத்திய அரசு மனம் வைக்க
வேண்டும்.
செய்யுமா ?