மயிலே மயிலே ..
மயிலே மயிலே இறகு போடு என்றால் எந்த மயிலாவது
இறகு போடுமா ?
தேவைக்கு மேல் … என்கிற கட்டுரையை படித்தவுடன்
எனக்கு உடனே தோன்றியது இந்த புகழ் பெற்ற சொல் தான்.
நல்ல மனம் உடைய மிகச்சில செல்வந்தர்கள் ஏற்கெனவே
இத்தகைய கொடைச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு தான்
இருக்கிறார்கள்.அவர்களை யாரும் வற்புறுத்தவில்லை.
தாமே மனமுவந்து செய்கிறார்கள்.
ஆனால் மற்றவர்களை மாற்ற வெறும் வேண்டுகோள்
போதாது.சட்டம் தேவை. கடுமையான வருமான வரி,
சொத்து வரி சட்டங்கள் தேவை.
ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பாதிப்பவர்களுக்கு
எவ்வளவு வரி போட்டாலும் தாங்கும்.
3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து
வைத்திருக்கும் அசிம் ப்ரேம்ஜி போன்றவர்களுக்கும்,
வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு போய்வரவே
ஹெலிகாப்டரைப் பயன்படுத்தும் அம்பானி போன்ற
கொள்ளைப் பணக்காரர்களுக்கும் எத்தனை வரி
போட்டாலும் பாதிப்பு ஒன்றும் ஏற்படப்போவதில்லை.
அவர்கள் வசதியில் எந்தக் குறையும் வரப்போவதில்லை –
இந்த சீமான்களின் வாழ்க்கைத்தரத்திலும் எந்த வித
மாறுதலும்
வந்து விடப்போவதில்லை !
எனவே ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல்
கிடைக்கும் வருமானத்திற்கு ஏன் 70% வருமான வரி
விதிக்கக் கூடாது ?
10 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களுக்கு
சொத்தின் மதிப்பில் 20%-ஐ ஏன் சொத்து வரியாக
வசூலிக்கக்கூடாது ?
இதன் மூலம் கிடைக்கும் வரிப்பணம் அனைத்தையும்
தனியே ஒதுக்கி சமுதாயத்தின் கடை மட்டத்தில்
உழலும் ஏழை மக்களின் கண்ணீரைப் போக்க உருப்படியாக
ஏன் செலவிடக்கூடாது ?
சமூக நல ஆர்வலர்களை,
சமுதாய விஞ்ஞானிகளை,நம் தேசத்தின் மீது அக்கரை
கொண்ட பொருளாதார மேதைகளை,
கலந்துபேசி அரசாங்கம் இதற்கான திட்டங்களைக்
கொண்டு வரவேண்டும்.அவை விரைவாக
நிறைவேற்றப்பட வேண்டும்.
சுதந்திரம் கிடைத்து 62 ஆண்டுகளுக்குப் பிறகும்
பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடி வதங்கிக்
கொண்டிருக்கிறார்கள் என்றால் –
தவறு நம் மீது தான்.
நாட்டின் செல்வத்தில் 90 சதவீதம் மக்களில் உள்ள
10 சதவீத பணக்காரர்களிடம் போய்க் குவிந்திருக்கின்றது
என்றால் அதற்கு காரணம் யார் ?
இந்த சுரண்டல்காரர்களும்,
இவர்களிடம் பணம் வாங்கிப் பிழைக்கும் ஒட்டுண்ணிகளான
அரசியல்வாதிகளும் தானே ?
நக்சல் புரட்சியாளர்கள் நாளுக்கு நாள் எழுச்சியும்,
வளர்ச்சியும் பெறக்காரணம் என்ன ?
ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவே இருப்பதும்,
சுரண்டல்காரர்கள் கொழுத்து வளர்வதும் தானே ?
அவர்களை ஒடுக்க 7000 கோடி ரூபாய்
பணத்தை ஒதுக்கி இருக்கும் அரசு, ஒரு லட்சம்
காவலர்களை ஈடுபடுத்தும் அரசு,
மிகச்சுலபமாக இந்தப் புரட்சியை
வென்று விடலாம் – எப்படி ?
புரட்சியாளர்களை ஒழிப்பதற்கு பதில் –
உண்மையான ஆர்வத்துடன், அக்கரையுடன் –
பசியை, ஏழ்மையை, நோய்களை, அறியாமையை –
ஒழிப்பதில் ஈடுபட்டால் !