நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார் பணத்தில் ?

நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் –
யார்  பணத்தில் ?

அண்மையில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரு
உண்மை வெளியாகி உள்ளது.

உச்சநீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி தன் மனைவியுடன்
வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார்.
அவருக்கான முழுச்செலவையும்  அனுமதித்தாலும் –

அவரது  மனைவிக்கு விமானப்பயண்ச்செலவிற்கான தொகை
மட்டும்  மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது.

தினப்படி (டெய்லி அலவன்ஸ்) செலவுக்கு  எதுவும்
கொடுக்கப்படவில்லை.

கடந்த 3 வருடங்களாக போகும்போதெல்லாம் கொடுக்கப்
பட்டதே. இந்த முறை மட்டும்  ஏன் கொடுக்கவில்லை ?
உடனடியாக பயணப்படி உத்திரவை  மாற்றி வெளியிடவும்
என்று உச்சநீதிமன்ற  அலுவலகத்திலிருந்து மத்திய அரசிற்கு
கடிதம் போயிருக்கிறது.

விஷயம்  மறு பரிசீலனையில்
இருக்கிறது.

இதில்  கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் –

அரசாங்கமும், நீதித்துறையும் முற்றிலும் தனித்தனி
அமைப்புகளாக, ஒன்றை ஒன்று எந்த விதத்திலும் சார்ந்ததாக
இல்லாமல் இருக்க வேண்டும் என்பது அரசியல் சட்டத்தை
உருவாக்கிய மேதைகளின் எண்ணம். அப்போது தான்
நீதித்துறை  சுதந்திரமாக, அரசின் தலையீடு எதுவும் இன்றி
செயல் பட முடியும் என்பது அவர்கள்  கருத்து.

நீதிபதிகளின் ஊதியம் தொடர்பான  செலவீனங்களை
consolidated fund of india
என்கிற தலைப்பில் அரசு அனுமதிக்கான தேவை
இன்றியே நீதிபதிகள் பெற்றுக்கொள்ளலாம் என்பது அரசியல்
சட்டத்தில் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ள  ஒரு விதி.

எனவே  இந்த விஷயத்தில் மத்திய அரசின் அனுமதிக்கான
தேவை எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்தால் பல விஷயங்கள்
வெளிவருகின்றன.

முதலாவது -தலைமை நீதிபதி பணி நிமித்தமாக
இந்தியாவுக்குள் எங்கு  வேண்டுமானாலும் போய் வர
வேண்டியதற்கான தேவை எப்போது வேண்டுமானாலும்
ஏற்படக்கூடும்.சட்டப்படி இதற்கான அனுமதியை
அவர் யாரிடமும் பெறத்தேவை இல்லை.

இந்தியாவை விட்டு வெளியில் போகும்போது தான்
மத்திய அரசின்  அனுமதியும், நிதியும் வேண்டி இருக்கிறது.

சரி நீதிபதிக்கு வெளிநாடுகளில் அப்படி என்ன அதிகார
பூர்வமான  பணி இருக்க முடியும் ? அதிகபட்சம் -எதாவது
நிகழ்ச்சிகளில்,விழாக்களில்  கலந்து கொள்ள போகலாம்.

அப்படிப் போகும்போது,  மனைவியை அழைத்துப்போக
வேண்டிய அவசியம் என்ன ? அப்படியே அழைத்துச்சென்றாலும்
அது யார் செலவில் அமைய வேண்டும் ?  ஒரு நீதிபதி
பணிக்குத்  தொடர்பில்லாத ஒரு காரியமாக
வெளிநாடுகளில் மனைவியுடன் பயணம் செய்ய எதற்காக
மக்களின்  வரிப்பணம்  செலவழிக்கப்பட வேண்டும் ?

அரசியல்  சட்டத்தை உருவாக்கிய சிற்பிகள் பிற்காலத்தில்
இப்படியும் கூட  ஒரு அவசியம் ஏற்படலாம்  என்று
நினைக்கவில்லை போலும் –  எனவே
அரசியல் சட்டத்தில் நீதிபதிகளின்  மனைவிகளின்
சுற்றுப்பயண பணத் தேவைகள் பற்றி ஏதும் கூறப்படவில்லை !

இத்தகைய செயல்களை அனுமதிக்கவோ, நிராகரிக்கவோ
மத்திய அரசுக்கு யார்  அதிகாரம் கொடுத்தது ?

இதைக் கேட்டதற்கு,சுற்றி வளைத்து  – அரசுக்கு
இத்தகைய அதிகாரம் இல்லை என்று  எந்த சட்டமும்
கூறவில்லை என்று பதில் சொல்லப்படுகிறது.

இப்போது முக்கியமான  கேள்வி –

தன் பணியுடன்  நேரிடையாக சம்பந்தம் இல்லாத தனிப்பட்ட
விஷயங்களுக்காக  ஒரு நீதிபதி மக்கள்  பணத்தில் வெளிநாடு
செல்லலாமா ?

தப்பித்தவறி அவர் செல்லலாம் என்றே அமைந்தாலும்,
அவர் மனைவி மக்கள் பணத்தில் வெளிநாடு செல்வதை –
முக்கியமாக அதை எந்த சட்டமும் வரையறுக்காதபோது –
அனுமதிக்கலாமா ?

இதற்கான அனுமதி கோரி –  நீதிபதி
மத்திய அரசை அணுகுவது முறையா ? அது முறையற்ற
சலுகைகளைக் கோரிப்பெறுவது போல்  இல்லையா ? ஒரு
நேர்மையான நீதிபதியின் மனசாட்சி இதை உணராதா ?
அது உறுத்தாதா ?

இதற்கான அனுமதியை மத்திய அரசு தான் வழங்கலாமா ?
அப்படி வழங்கக்கூடிய அல்லது மறுக்கக்கூடிய நிலையில்
மத்திய அரசு இருந்தால் – அது பதிலுக்கு தனக்கான
சலுகையை நீதிமன்றத்தில் – தேவைப்படும் நேரத்தில்
மறைமுகமாகக் கோரிப்பெற –  வழி  வகுக்காதா ?

எப்படியோ,  யாரோ, தகவல் அறிய முயன்று
சட்ட விதிகளின்படி கேட்டதால் இந்த முறை இந்த தகவல்
வெளிவந்து விட்டது.  இதற்கு முன்னால் இதுபோல்
எவ்வளவு  முறை நடந்திருக்கிறது ? யாருக்குத் தெரியும் ?

தமிழ் செய்திப் பத்திரிக்கைகள் எதிலும் இந்த செய்தி
ஏனோ  வெளிவரவில்லை !
ஊடகங்களில்  இத்தகைய செய்திகள்
ஏன் முடக்கப்படுகின்றன ?

இதை எல்லாம்  பார்த்தால் -நீதிமன்றங்களில் –
அரசாங்கம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பாரபட்சமின்றி
தீர்ப்புகள்  வரும் என்று
மக்கள்   எப்படி எதிர்பார்க்க முடியும் ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசு, அறிவியல், இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், நாகரிகம், நீதிபதிகள், நீதிபதியின் மனைவி, நீதிமன்றங்கள், பயணப்படி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.