இட ஒதுக்கீடு – யாருக்கு ?


இட  ஒதுக்கீடு –  யாருக்கு ?

முன்பெல்லாம்  தாழ்த்தப்பட்டவன் மேலே வர விரும்பினான்.
ஆனால் சமூகத்தால் அழுத்தி அழுத்தி வைக்கப்பட்டான்.

இப்போதெல்லாம் –
தாழ்த்தப்பட்டவனைத் தூக்கி விட சமூகமும், சட்டமும்
முயற்சிக்கிறது ! ஆனால் – அவன் தொடர்ந்து
தாழ்த்தப்பட்டவனாகவே  இருக்க விரும்புகிறான் !

இட  ஒதுக்கீடு ஒரு நல்ல  கொள்கையாகத்தான்
கருதப்பட்டது – ஆரம்ப காலத்தில்.
வாய்ப்புக்களை  பரவலாக்கி,  நலிந்தோர்
நிமிர்வதற்கு  அது  உதவியது.

ஆனால்,வாய்ப்பு பெற்று ஏற்றம் பெற்ற ஒவ்வொருவனும்,
தொடர்ந்து – அடுத்தடுத்து,  தன்னுடைய மகனையும்,
மகனின்  மகனுமையுமே  வரிசையில் முன் நிறுத்தி,

வரிசையை விட்டு அகலாமல்,மற்றவர்களை
உள்ளே நுழைய  விடாமல்  அடைகாத்துக்
கொண்டிருக்கிறானே –

வரிசையில்,பின்னால் இருப்பவன் – எப்போது –
எப்படி முன்னே வரமுடியும் ?
அடைந்தவனே  மீண்டும் மீண்டும் பயன் அடைந்து
கொண்டிருந்தால் அடையாதவன் பயன் அடைவது எப்போது ?

முதலில்  வாய்ப்பு பெற்ற இருபது சதவீதம் பேர்
மீண்டும் மீண்டும் தங்கள் சந்ததியினரை ஏற்றி விடவே
முயல்கின்றனரே  தவிர புதிதாக  யாரையும்
உள்ளே  நுழைய விடுவதில்லையே.

இதை  பாதிக்கப்பட்ட மக்களே  உணர்வதில்லை
என்பது இன்னும் பரிதாபம். பாதி பேருக்கு மேல்
தங்களுக்கு என்ன கிடைக்க  சட்டத்தில்  வழி
இருக்கிறது  என்பதே  தெரியவில்லையே !

தெரிந்தவன்  தெரியாதவனுக்கு தெரியாமலே இருக்கும்படி
பார்த்துக்கொள்கிறான் – தனக்கு போட்டி இல்லாமல்
இருக்க வேண்டுமே !

எங்களுக்கு அதைகொடு – இதைக்கொடு என்று வயிற்றை
எக்கிக்கொண்டு முழக்கமிடுகிறானே ஏழைத்தொண்டன் –

இவனுக்கு கிடைக்கப்போவதென்ன ? கிடைக்கப்போவது –
எல்லாம்  தெரிந்த  இவர்களின்  தலைவர்களுக்கு
மட்டும்  தானே  ?
தொடர்ந்து கூப்பாடு போட்டுக்கொண்டு  இருப்பது
மட்டும் தானே  அவன் செய்ய வேண்டியது ?

உரக்கக் கூவிய  தன்மானத்தலைவர் வீரமணியின் செயல்
எப்படி முடிந்தது ? எதில் முடிந்தது ?
கண்ணெதிரில்   பார்க்கிறோமே –

தந்தை பெரியாரின்  கட்சியையும், சொத்தையும்
அபகரித்ததோடு அல்லாமல்
இப்போது மறு வாரிசாக தன் மகனையும் நியமித்து
விட்டார்  அல்லவா ? வீரமணியின் மகன்  கைக்கு
கட்சியும், சொத்தும்
போகத்தான் பெரியார் இந்த  உழைப்பு
உழைத்தாரா ?

இந்த வீரமணி வக்காலத்து வாங்கும் நீதிபதி தினகரன்
என்ன  தாழ்த்தப்பட்டவரா ?
அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள மதம் மாறி கிறிஸ்தவர்
ஆனவர் அதை  வெளிப்படையாகச் சொல்லாமல்
இன்னும் ஏன்
தாழ்த்தப்பட்டவராக வேடம் போடுகின்றார் ?
சலுகைகளைக் கோருகின்றார் ?
கிறிஸ்தவரில்  ஏது  தலித்  ?

தாழ்த்தப்பட்ட  இன மக்களுக்குப் போய்ச்சேர வேண்டிய
200 ஏக்கர் நிலங்களை  சட்டவிரோதமாக
வளைத்துப்போட்டிருக்கும்  இவரை எல்லாம  இன்னும்
தாழ்த்தப்பட்டவர்  என்று சொல்லிக்கொண்டிருப்பது எப்படி ?
இவருக்கு வீரமணி வக்காலத்து வாங்குவது ஏன் ?

கலைஞர்  கருணாநிதியும்,  தமிழக அரசும் இன்னும்
வாய்மூடி மௌனம்  சாதித்து  இவரை அரவணத்துக்
கொண்டிருப்பது ஏன் ?

சாதாரண  அர்சாங்க அதிகாரியான –
திருவள்ளூர்  கலெக்டருக்கு இருந்த மனசாட்சி கூட
இவர்களுக்கு இல்லாமல்  போவது ஏன் ?
அப்பட்டமான  சுயநலம் !

நமக்கு கிடைக்கும் பாடம் என்ன ?  ஜாதியாலும்,
இட ஒதுக்கீட்டாலும் இப்போதெல்லாம் உண்மையில்
பயன் பெறுவது  யார் ?

மீண்டும் மீண்டும் மேல் நிலையில் உள்ள – ஏற்கெனவே
பயன்பெற்ற – அதே கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தானே ?

தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் கொண்டு வர
நினைத்தது இந்த நிலையைத்  தானா ?
நியாயமாக இந்த 60  ஆண்டுகளில்  எவ்வளவு
தாழ்த்தப்பட்ட  மக்கள்  மேலே  வந்திருக்க வேண்டும் ?

ஒரு  தலைமுறை இட ஒதுக்கீட்டினால் பயன்பெற்ற
குடும்பங்கள் மீண்டும் மீண்டும் இட ஒதுக்கீட்டு  சலுகைகளுக்கு –

முன் உரிமை பெறத்தகுதி உடையவர்கள்  ஆக
மாட்டார்கள் – என்று  உரக்கச்  சொல்லும்  தைரியம்
இங்கு  யாருக்காவது  உண்டா ?

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசு, இட ஒதுக்கீடு, இந்தியன், இரக்கம், கருணாநிதி, தினகரன், நல வாரியம், புரட்சி, வீரமணி, Uncategorized and tagged , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to இட ஒதுக்கீடு – யாருக்கு ?

 1. nerkuppai.thumbi சொல்கிறார்:

  நீங்கள் சொல்வது மிகச் சரி.
  ஒதுக்கீடு ஒரு தலைமுறைக்கு மேற்பட்டு வழங்குவதில் நியாயம் இல்லை.
  ஒன்று, பூட்டா சிங்கின் ( மத்திய அமைச்சர், கவர்னர், இப்போது தாழ்த்தப்பட்டவர் நல கமிஷன்) மகன் தாழ்த்தப்பட்டவர் என ஒதுக்கீடு கேட்பது எந்த விதத்தில் நியாயம்?
  I A S, I F S, , அதிகாரிகளின் வாரிசுகளும் இப்படித்தான்..
  மண்டலின் க்ரீமி லேயர் அணுகுமுறையை தலித், பழங்குடி ஆகியோருக்கும் கொண்டு வரவேண்டும்.அல்லது அறுபது ஆண்டுகள் ஆகி விட்டதால், பொருளாதார நிலையே ஒதுக்கீடு பெறுவதற்கு முடிவு செய்ய வேண்டும்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.