பருவநிலை மாற்றம்
பருவநிலை மாற்றம் என்றும் புவி வெப்பமடைதல் என்றும்
உலகம் முழுதும் அடிக்கடி பேசப்பட்டு வருகிறது.
இந்த பொருள் குறித்து எனக்குத் தெரிந்த
விவரங்களை இங்கு தருகிறேன். இது குறித்து
முழு விவரம் தெரிய வாய்ப்பு இல்லாதவர்களுக்கு
இது ஓரளவு உதவலாம்.
விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, மனிதருக்குத்
தேவையான சக்தியைப் பெறுவதற்கு விதவிதமான
சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சாதனங்கள் இயங்க அநேகமாக பெட்ரோலியப்
பொருட்கள், நிலக்கரி மற்றும் எரிவாயு ஆகியவை
பயன்படுத்தப்படுகின்றன.
இந்த எரிபொருட்கள் பயன்படுத்தப்படும்போது, அவை
கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்களை
வெளியிடுகின்றன. இந்த வாயுக்கள் கூட்டம் கூட்டமாக
வானவெளியில் சேர்ந்து ஒரு ஜமுக்காளம் போல்
படர்கின்றன.
இந்த ஜமுக்காளம் போன்ற வாயுக்கூட்டம்
நாளுக்கு நாள் அடர்த்தியாகிக் கொண்டே
இருக்கிறது.இதனால் பூமி வெளியிடும் வெப்பம்
வான வெளியில் மேலே செல்ல முடியாமல்
மிகக்குறுகிய இடைவெளிக்குள் அடைக்கப்படுகின்றது.
இதன் விளைவாக நாளுக்கு நாள் பூமியின் வெப்பம்
அதிகரித்துக்கொண்டே போகிறது.
பூமியின் சராசரி வெப்பநிலை உயர்ந்துக் கொண்டே
போவதால் தட்ப வெப்பநிலையில்
பெருத்த மாறுதல்கள் உண்டாகின்றன.
அதிகப்படியான வெப்பநிலையால்,துருவங்களில்
இருக்கும் பனிமலைகளும், உலகில் உயரமான
இடங்களில் உள்ள பனிச்சிகரங்களும் உருகி
கடல்மட்டம் கொஞ்சம் கொஞசமாக
உயர்ந்துக் கொண்டே வருகிறது.
கடல் நீர் மட்டம் உயர்வதோடு அல்லாமல்,
கடல் நீரின் வெப்பநிலையும் உயர்கிறது.
வெப்பமடையும் கடல் நீர், விரிவடைகிறது. எனவே
கடல் பரப்பு அதிகரித்து, கொஞ்சம் கொஞ்சமாக
கடற்கரைகள் நீருக்குள்ளே மூழ்க ஆரம்பிக்கின்றன.
பருவ நிலைகள் யூகிக்க முடியாத அளவிற்கு மாறுகின்றன.
கோடைக்காலதிலும், குளிர்காலத்திலும்
மழையும் புயலும் வருகிறது !
மழைக்காலத்தில் மழை பெய்வதில்லை. திடீரென்று
குறுகிய கால அவகாசத்தில் எக்கச்சக்கமாக மழை
கொட்டுகிறது. இவற்றை வானிலை ஆராய்ச்சி
நிலையங்களால் முன்கூட்டியே கணித்துச்சொல்ல
முடிவதில்லை.
விளைவு – பெரும் நாசம்; பெரும் உயிரிழப்பு ,பேரிடர்.
அண்மையில் திரும்பத் திரும்ப இந்தோனேஷியா,
பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய
நாடுகளில் வீசிய சூறாவளியும், புயலும், வெள்ளமும்
இவற்றிற்கு சான்று. ஏன் – நம் நீலகிரியே இதற்கு
நேரடிச் சான்று.
சரி – நாம் என்ன செய்ய முடியும் ?
ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு சமூக சேவை
நிறுவனமும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் இந்த
” புவி வெப்பமடைதல் என்றால் என்ன – இது எதனால்
ஏற்படுகின்றது ?” என்பதையும்,
அதனால் இந்த பூமிக்கும்,இதில் வசிக்கும் உயிர்களுக்கும்,
எத்தகைய சேதங்கள் உருவாகக்கூடும் என்பதையும்
புரிந்துக் கொண்டு, அதைத்தவிர்க்க தேவையான
அத்தனை நடவைக்கைகளையும் போர்க்கால
வேகத்தில் மேற்கொள்ள வேண்டும்.
நாம் ஒவ்வொருவரும் வெளியிடும் கரியமிலவாயுவின்
(கார்பன் டை ஆக்சைடு) அளவை”கார்பன் புட் ப்ரிண்ட்”
என்று கூறுகிறார்கள். உதாரணமாக ஒரு சராசரி
பிரிட்டிஷ்காரர் ஒரு வருடத்திற்கு வெளியிடும் கார்பன் புட்
ப்ரிண்டின் அளவு 10 டன் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு சராசரி இந்தியனின் கார்பன் புட் ப்ரிண்ட் 1.5 டன்
என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.
வளர்ந்த நாடுகளோடு ஒப்பிட்டால் நாம் இயற்கைக்கு
விளைவிக்கும் சேதம் குறைவு தான்.
ஆனால் ஒரு பகுதியினர் மட்டும் பொறுப்புணர்வோடு
நடந்து கொண்டால் போதாதே –
இந்த உலகில் வசிக்கும் ஒவ்வொரு தனி மனிதரும்,
ஒவ்வொரு அரசாங்கமும், சமுதாய அக்கரை உள்ள
இயக்கங்களும் இந்த கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டைக்
குறைக்க தீவிரமாக முயற்சிக்க வேண்டும்.
எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.
பசுமையை அதிகரிக்க வேண்டும்.
காடுகளை அழிப்பதை நிறுத்த வேண்டும்.
புதிய காடுகளை உருவாக்க வேண்டும்.
மக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த
வேண்டும். நம்மால் இயன்ற வரையில் இந்த செய்தியைப்
பரப்புவோம்.
16,732 அடி உயரம் கொண்ட தான்சானியா (ஆப்பிரிக்கா)
நாட்டின் கிளிமஞ்ஜாரோ சிகரத்தின் சில எழில் தோற்றங்களை
இங்கே காணலாம். புவிவெப்பமடைதல் காரணமாக இந்த மலையின்
பனிச் சிகரங்கள் தொடர்ச்சியாக உருகி வருவதாக ஆராய்ச்சியாளர்கள்
கூறுகிறார்கள் !