லாபமா – நஷ்டமா ? யாருக்கு ?


லாபமா –  நஷ்டமா ?  யாருக்கு ?

சென்னை மாநகர  ப்ஸ்களில் –

1)  காலை/ மாலை / இரவு நேரங்களில் (மதிய
நேரம்  தவிர மற்ற நேரங்களில் எல்லாம் என்றும்
சொல்லலாம் ) ஏறி உள்ளே  செல்வது  பெரும்பாடு :

2) அப்படி உள்ளே  சென்று விட்டால் உட்கார இடம்
கிடைப்பது  அநேகமாக இயலாத  காரியம் ;

3) உட்கார இடம் கிடைக்கா விட்டால் – பத்திரமாக –
பக்கத்தில்  இருக்கும்  பெண்களின் மேல்  படாமல் –
ஒருவரை ஒருவர்  இடித்துக்கொண்டு,

(ஆண்கள்  ஆண்களின் மேலும்,  பெண்கள் பெண்களின்
மேலும்,பெண்கள் மட்டும்  ஆண்களின் மேலும்
தானே  நமது சட்டப்படி  இடிக்க முடியும் !)

வியர்வை நாற்றத்தை (நம்முடையதும்
சேர்த்து ) தாங்க முடியாமல் தொடர்ந்து நின்று கொண்டே
இருப்பது நரக வேதனை:

4)  இதை எல்லாம் விட பெரிய வேதனை நடத்துனர்
(கண்டக்டர்) இருக்கும் இடம் தேடிச்சென்று டிக்கெட்
வாங்குவது !

தமிழ் நாட்டில் சென்னை மாநகரைத்தவிர  அநேகமாக்
வேறு எந்த ஊரிலும் நாம் நடத்துனரைத் தேடிச்சென்று
டிக்கெட் வாங்கும் பழக்கம் இல்லை.மற்ற எல்லா
ஊர்களிலும்  நடத்துனர்  தான் நடந்து பயணிகள்
இருக்கும் இடம் சென்று டிக்கெட் கொடுக்கிறார்கள்.

சென்னையில் மட்டும்  நடத்துனர் காலையில் பஸ்ஸில்
ஏறும் முன்னரே  அவர் சீட்டில் பசை தடவி ஒட்டி
உட்கார  வைத்து விடுகிறார்கள்
போலிருக்கிறது !பாவம் அவரால் எழுந்து
நகரவே முடிவதில்லை !

முற்றிலும்  அவரையே  குறை சொல்லவும் முடியாது.
அத்தனை பயணிகளுக்கும்  டிக்கெட் கொடுக்க
அவர்  முயன்றால் கூட –
ஒற்றை   நடத்துனரால்  முடியாது தான் !

கடந்த 3 வருடங்களாக  தொடர்ந்து கவனித்து வருகிறேன்.
பஸ்  பயணிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் டிக்கெட்
வாங்குவதே இல்லை.

வாங்குவது இல்லை என்று சொல்வதை விட அவர்களால்
வாங்க முடிவதில்லை  என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த  வகையில் –
நானே போக்குவரத்துக் கழகத்திற்கு நிறைய
கடன் பட்டிருக்கிறேன் !  ஆனால் –

எப்பொழுது  எல்லாம் டிக்கெட்  வாங்கவில்லையோ
அப்போதெல்லாம்  அந்த தொகையை கீழே  இறங்கியதும்
கண்ணில் படும் முதல் பிச்சைக்காரருக்கு கொடுத்து
விடுவது என் வழக்கம்.

அமைச்சரை விடுங்கள் –  அவருக்கு ஆயிரம்
கவலை – வேலை !

போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு இந்த பிரச்சினை
எப்படி தெரியாமல் இருக்க முடியும் ?
தெரிந்தும் இது தொடர்கிறது என்றால்
என்ன  அர்த்தம் ?

பொறுப்பு இல்லை;  சுத்தமாகப் பொறுப்பு இல்லை.


துரதிருஷ்டவசமாக  நாம்  “இந்திய”னையும்,
“அந்நிய”னையும்
திரைப்படங்களில் மட்டும் தான்  பார்த்து
திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம் !

இந்த பொறுப்பில்லாத  அதிகாரிகள் மீது
“கருட புராண”த்தை பிரயோகிக்க
யாரும் வர மாட்டேனென்கிறார்களே ! (எனக்கு
இதையெல்லாம் செய்ய வயது – பத்தாது!  )

இந்த  பிரச்சினைக்கு  மிக  சுலபமாக
தீர்வு  காண முடியும் – சம்பந்தப்பட்டவர்கள்
மனது  வைத்தால் !

திருச்சி  போன்ற  நகரங்களில்  தனியார்  நடத்தும்
பஸ்களில்  இரண்டு நடத்துனர்கள்  இருக்கிறார்கள்.
முன் பாதியை  ஒருவரும்
பின் பாதியை  மற்றொருவரும் கவனித்துக்
கொள்கிறார்கள்.

வசூலுக்கு தகுந்தாற்போல் நடத்துனர்களின் படி
( பேட்டா ) கூடும் – குறையும்.
எனவே டிக்கெட்  வாங்காமல் ஒரு பயணி கூடத்
தப்ப முடியாது !

நமது அதிகாரிகள்  உடனே கூறுவார்கள் –
2 நடத்துனர்களைப்
போட்டால்  ஏற்கெனவே  நஷ்டத்தில்
ஓடிக்கொண்டிருக்கும் நிறுவனம்
மேலும்  நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும் என்று.

ஆனால் 2 நடத்துனர்களைப் போடுவதால் வரும்
அதிகப்படி செலவு, அனைத்துப் பயணிகளும்
டிக்கெட்  வாங்கும்போது சரி செய்யப்பட்டு விடும் !

நான் பார்த்ததை வைத்துச் சொல்கிறேன் –
எந்த  அதிகாரி வேண்டுமானாலும்
திருச்சிக்கு  சென்று பார்க்கட்டும்.  அங்கு
ஒரே வழித்  தடத்தில் அரசு பஸ்ஸும், தனியார்
பஸ்களும்  ஓடிக்கொண்டு இருக்கின்றன.
(ஒன் ரூட் – ஜ்ங்ஷன் – திருவரங்கம் – ஜங்ஷன் ).

இரண்டிலும் ஒரே கட்டணம்  தான்.
தனியார் பஸ்கள்  ஒவ்வொன்றிலும் 2  நடத்துனர்கள்.
அவர்கள் நஷ்டத்திலா  நடத்துவார்கள் ?

ரூட்டில்  லாபம் சம்பாதிப்பதோடு இல்லாமல்,
ஆளும் கட்சிக்கும், அதிகாரிகளுக்கும் சேர்த்து
படி வேறு  அளக்கிறார்களே !

தனியாருக்கு கட்டுப்படியாகி  லாபம்  காட்டும்போது
அரசாங்கத்திற்கு  மட்டும் ஏன்  கட்டுப்படி  ஆகாது ?

அமைச்சர் இந்த யோசனைக்கு ஒத்துக்கொள்வாரா
என்கிற  கவலையும் அதிகாரிகளுக்கு தேவையில்லை.

மேற்கொண்டு  புதிதாக நடத்துனர்கள்  தேர்வு செய்யப்பட
வேண்டும்,நியமிக்கப்பட வேண்டும் என்றால் –
அது  அவருக்கும் நல்லது தானே !

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அந்நியன், இந்தியன், கருட புராணம், நடத்துனர், நாகரிகம், பஸ் பயணம், Uncategorized and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.