க்.கா.திட்டம் – கோடும் ரோடும் !
சில நாட்களுக்கு முன்னர் (நவம்பர் 1- ந்தேதி விமரிசனம் )
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி
குறிப்பிடுகையில், என்னால் கோடு மட்டும் தான் போட முடிகிறது –
சக்தி உள்ளவர்கள் வேறு யாராவது ரோடு போட முன் வரட்டும் என்று
எழுதி இருந்தேன்.
இதைத் தொடர்ந்து இது பற்றி
மேலும் சில கருத்துக்கள்
முன்னிலைப் படுத்தப்பட்டு இருக்கின்றன. அவை –
1) சாதாரணமாக எந்த இன்சூரன்ஸ் திட்டமாக இருந்தாலும்,
பயனாளிகளுக்கு அட்டை கொடுக்கப்பட்ட நாளிலிருந்து தான்
முதல் வருடம் துவங்கும்.
ஆனால், இந்த திட்டத்தில் மட்டும் திட்டம் துவங்கிய
நாளிலிருந்தே முதல் ஆண்டு துவங்கி விடுகிறது.
பயனாளிகளுக்கு இன்னும் முழுவதுமாக அடையாள அட்டையே
வழங்கப்படவில்லை.
2) ஒரு கோடி குடும்பங்கள் என்ற அடிப்படையில் தான்
பிரிமியத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால்
அந்த ஒரு கோடி குடும்பங்கள் பட்டியலும் அரசிடமோ,
இன்சூரன்ஸ் நிறுவனத்திடமோ கிடையாது.
எவ்வளவு பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் –
பயனாளிகளை சேர்க்கும் பணி எப்போது முழுமை பெறும்
என்ற விவரமும் தெரியவில்லை. அதற்குள் முதல்
காலாண்டிற்கான 130 கோடி ரூபாய் நிறுவனத்துக்கு
வழங்கப்பட்டு விட்டது.
3)ஆந்திராவில் தான் இது போன்ற திட்டம் முதல் முதலில்
துவங்கப்பட்டது. ஆனால் அங்கு முதலில் பயனாளிகளை
தேர்ந்தெடுத்து, அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டு
பல்வேறு நோய்களின் பட்டியலும் அறிவிக்கப்பட்ட பிறகு
தான் திட்டம் துவங்கப்பட்டது.
4) மாவட்டங்களில், தனியார் மருத்துவமனைகளை
சிகிச்சை பெறத்தகுதி உள்ள மருத்துவ மனைகள் பட்டியலில்
சேர்க்க வேண்டுமானால் தாங்கள் நிர்ணயிக்கும் குறைவான
தொகைக்கு அவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று
இன்சூரன்ஸ் நிறுவனம் வற்புறுத்துகிறது.
அவர்களும் அதிக நோயாளிகள் கிடைப்பார்கள் என்ற
ஆசையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் முதலில் ஒப்புதல்
அளித்து விடுகின்றனர். ஆனால் மீதத்தொகையை
நோயாளிகளிடம் வசூலித்து விடுகின்றனர். உதாரணமாக
கண்புரை அறுவை சிகிச்சைக்கு அசல் கட்டணம் 12,000
ரூபாய் என்றிருந்தால்,
இன்சுரன்ஸ் நிறுவனம் நிர்ணயிக்கும்
8000 ரூபாய்க்கு முதலில் ஒத்துக்கொள்ளும் தனியார்
மருத்துவமனைகள், சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம்
மீதம் 4000 ரூபாயை வசூலித்து விடுகின்றன. இதனால்
கிராமப்புறங்கள் மற்றும் மாவட்டங்களில் இலவச சிகித்சை
என்கிற நிலையே கேள்விக்குறியாகி உள்ளது.
5)ஆண்டுக்கு 519 கோடி ரூபாய் என்றால் 5 ஆண்டுகளில்
கிட்டத்தட்ட 2600 கோடி ரூபாய் வரை செலவிடப்படும்.
தனியார் நிறுவனத்திற்கு இத்தனை கோடி ரூபாயை
கொடுப்பதற்கு பதிலாக அரசாங்கமே உலகத்தரம் வாய்ந்த பல
மருத்துவமனைகளை அந்தப் பணத்தில் உருவாக்க முடியுமே!
6) மேலும் தனியாருக்கு போட்டியாக டாஸ்மாக், எல்காட்,
சர்க்கரை ஆலைகள், சிமெண்ட் ஆலைகள் போன்றவைகளை
நடத்தும் அரசு, ஆண்டுக்கு 519 கோடி ரூபாயை தனியார்
நிறுவனத்திற்கு – அதுவும் ஒரு அந்நிய நாட்டு நிறுவனத்திற்கு –
அள்ளிக்கொடுப்பதற்கு பதிலாக, அரசே ஒரு இன்சூரன்ஸ்
நிறுவனத்தை துவக்கி, அதன் மூலம் மக்களுக்கு
தனியார் மருத்துவமனைகளில் உயர் சிகித்சை அளிக்கலாம்.
அவ்வாறு செய்தால் தனியாருக்கு லாபமாக கிடைக்கும்
பல கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகும்.
7) இந்தியாவில் இருக்கும் பல இன்சூரன்ஸ் நிறுவனங்களை
விட்டு விட்டு துபாயைச்சேர்ந்த அயல் நாட்டு இன்சூரன்ஸ்
நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை அளித்ததை மக்கள்
வரவேற்பார்களா ?
இன்னும் ரோடு போடப்படவில்லை ! இவை யாவும்
ரோடு போட உதவி செய்யக்கூடிய தேவையான
சில தகவல்கள் மட்டுமே !
ரோடு போடுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளட்டும் !
நீண்ட கால அடிப்படையில் இது மருத்துவத்துறையில் அரசின் பங்களிப்பை கைகழுவும் முயற்சி. புதிய சோப்பை இலவசமாக கொடுத்து பிறகு அதை விற்பனைக்கு கொண்டு வருவதைப்போன்ற முயற்சிதான் இது.
மருத்துவக்காப்பீட்டுத்துறையை பெரும்பாலான மக்களுக்கு அறிமுகப்படுத்துவது, அரசு மருத்துவமனைகளை தேவையற்றவையாக்குவது இதுதான் திட்டத்தின் முக்கிய நோக்கம். சமையல் எரிவாயுவுக்கான விலையை வரிகள் மூலம் உயர்த்துவது, பிறகு அதற்கு மானியம் தருவது ( அப்போதுதான் நாம் வரியைப்பற்றி கவலைப்படமாட்டோம் ). பிறகு சிறிது சிறிதாக மானியத்தை குறைப்பது, இதைப்போன்ற திட்டம்தான் கலைஞர் காப்பீட்டுத்திட்டமும். முதலில் இலவசம் பிறகு கொஞ்சம் பிரீமியம் என கடைசியாக மொத்தமாக நம் தலையில் விழப்போகிறது. இப்போது அமெரிக்காவில் மருத்துவக் காப்பீடு செய்யாதவன் விதி வந்தால் சாகவேண்டியதுதான். நாமும் அமெரிக்கா அளவுக்கு முன்னேறப்போகிறோம் பாருங்கள்.
ஒருவேளை கருணாநிதியின் குடும்ப முதலீடுகள் காப்பீட்டு நிறுவனங்களில் இருக்கவும் வாய்ப்புள்ளது.